TNPSC Thervupettagam

அரசின் விமர்சகர்கள் மீது பிகாசஸை ஏவியது யார்?

November 7 , 2019 1844 days 1589 0
  • இந்திய அரசியலர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களின் செல்பேசிகளை இஸ்ரேலைச் சேர்ந்த ‘என்எஸ்ஓ’ நிறுவனம் ‘பிகாசஸ்’ என்ற உளவுச் செயலி மூலம் வேவுபார்த்த விவகாரத்தில், இந்திய அரசின் செயல்பாடு நம்பிக்கை தருவதாக இல்லை. உலகம் முழுவதும் ‘பிகாசஸ்’ செயலி உளவு சேகரித்த 1,400 பேரில் இந்தியர்களும் உள்ளடக்கம்.
  • ‘வாட்ஸ்அப்’ பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளின் வழி இந்தத் தகவல் சேகரிப்பை அந்தச் செயலி செய்திருக்கிறது. டிஜிட்டல் உலகம் முழுக்க அந்தரங்கம் அற்றதாகவும் உளவுக்கானதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் மேலும் உறுதிப்படுத்தினாலும், அதோடு மட்டுமே முடிந்துவிடக்கூடியது இல்லை இது. யாருக்காக இந்த உளவு நடந்தது என்பது முக்கியமான கேள்வி.

வாட்ஸ்அப்

  • இந்த உளவு தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் இஸ்ரேலிய நிறுவனமான ‘என்எஸ்ஓ’ மீது வழக்கு தொடர்ந்தது ‘வாட்ஸ்அப்’. இதற்குப் பதில் அளித்த ‘என்எஸ்ஓ’, “தனி நபர்களுக்காகத் தாங்கள் உளவு பார்ப்பதில்லை” என்றும், “பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராகத் தகவல் திரட்ட அரசு முகமைகளுக்கு மட்டுமே தங்களுடைய சேவையை அளிக்கிறோம்” என்றும் தெரிவித்திருக்கிறது.
  • அப்படியானால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகமைக்காகத்தான் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்தியாவில் அப்படி உளவு பார்க்கப்பட்டவர்களில் சிலர் மகாராஷ்டிரத்தின் பீமாகோரேகானில் 2018-ல் நடந்த வன்செயல்கள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்கள்; எதிர்க்கட்சி வரிசையில் வளர்ந்துவரும் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் செல்பேசியிலும் உளவு வேலை நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறது. அப்படியென்றால், இவர்களை உளவு பார்ப்பது யாருக்கு அவசியமாகியிருக்கும்?

உளவுச் செயலிகள்

  • இந்திய அரசு இந்தப் பிரச்சினையை ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்தின் பொறுப்பாக மட்டும் மடைமாற்றப் பார்ப்பது சரியல்ல. இந்தியாவில் தன்னுடைய சேவையைப் பயன்படுத்தும் 40 கோடி இந்தியர்களின் அந்தரங்கங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்துக்குக் கட்டாயம் உண்டு.
  • இப்படியான உளவுச் செயலிகள் ஊடுருவாத அளவுக்குப் பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்ற வகையில் எல்லாம் ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்தை இந்திய அரசு கேள்விக்குள்ளாக்குவது சரிதான். அதைத் தாண்டி இன்னொரு கேள்வி இருக்கிறது., உளவு பார்க்கச் சொன்னவர்கள் யார்; அவர்கள் மீது என்ன விசாரணை, என்ன நடவடிக்கை?
  • இது அற்பமான விஷயம் அல்ல. வாழ்வதற்கான உரிமை, அடிப்படை உரிமைகளைப் போல அவரவர் அந்தரங்கங்களைக் காத்துக்கொள்வதற்கும் ஒவ்வொரு குடிநபருக்கும் அரசமைப்புச் சட்ட உரிமை இருக்கிறது. அதை உறுதிசெய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
  • இனி இத்தகைய ஊடுருவல்கள் நிகழாதபடிக்குச் சட்டரீதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முதல்படியாக, ‘என்எஸ்ஓ’ நிறுவனத்தை உளவு பார்க்க அரசு முகமை நாடியிருந்தால், அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories