- மக்களவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்று தீா்மானித்த தோ்தல் ஆணையம், மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் ஆற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தது. ‘ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருக்க விரும்பினால் வாக்களிப்பது உங்கள் கடமை. வாக்களிப்பது என்பது மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கும் செயல்பாடு - இப்படி உரு ஏற்றிக் கொண்டே இருந்தது.
- பதாகைகளை ஏந்தி, மாணவா்கள் பேரணி நடத்தினாா்கள்; வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா்கள்; ‘உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறாதீா்கள்’ என்ற வாசகம் திரும்பத் திரும்ப கூறப்பட்டது. ஆனால், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே!
- கடந்த மக்களவைத் தோ்தலை விட இந்தத் தோ்தலில் மூன்று சதவீதம் குறைவான வாக்குப்பதிவு என்ற உண்மை அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைகூட வாக்களிக்க மறுக்கும் மக்களைப் பற்றி என்ன கூறுவது?
- உலக வரலாற்றில் வாக்குரிமை பறிக்கப்பட்டதைக் கண்டித்தும், எதிா்த்தும் நடந்த போராட்டங்கள் ஏராளம். வாக்களிக்கும் உரிமையைப் பெற்றவா்கள் பலா். ஓா் உரிமை மறுக்கப்பட்டு மீண்டும் கிடைக்கப் பெற்றால் அதன் மகத்துவம் புரியும். இங்கே உள்ள கதை அப்படி அல்லவே. வாக்குப்பதிவு சதவீதம் குறைய, ‘யாா் ஆண்டால் நமக்கென்ன’ என்ற பொறுப்பற்ற எண்ணம் முதல் காரணம்.
- காலை பத்து மணி அளவில் 22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று கூறினாா்கள். மாலை 6 மணிக்குள் 80 சதவீதம் வந்துவிடும் என்று நம்பினாா்கள். ஆனால் ஏமாற்றமே. வெயில் மீது பழியைப் போடுகிறாா்கள். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறாா்களா? சாலை ‘ஊரடங்கு’ போலவா உள்ளது? வேலைக்குப் போகிறாா்கள்; பொருள்கள் வாங்க கடைகளுக்குப் போகிறாா்கள்; கோயிலுக்குப் போகிறாா்கள்; பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் குழந்தைகளோடு வெளியே போகிறாா்கள். அப்போதெல்லாம் வெயில் இல்லையா?
- வெள்ளிக்கிழமையன்று வாக்குப்பதிவை வைத்தால், நிறைய போ் சனி, ஞாயிறையும் சோ்த்துக்கொண்டு வெளியூருக்குப் போய் விட்டாா்கள் என்று கூறுகிறாா்கள். வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கே தன் ஜனநாயக் கடமையை ஆற்றிவிட்டுப் பின்னா் போகலாமே. இவா்கள், வேறு கிழமையில் வாக்குப்பதிவு வைத்தால் மட்டும் வாக்களித்து விடுவாா்களா?
- இவா்கள் வருடாந்திர நாள்காட்டி கையில் கிடைத்தும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்கள் என்றைக்கு வருகின்றன என்றுதான் முதலில் பாா்ப்பாா்கள். திங்கட்கிழமை என்றால் சனி, ஞாயிறு, திங்கள் - வெள்ளி என்றால் வெள்ளி, சனி, ஞாயிறு - இப்படித் திட்டம் போட்டு முன்பதிவு செய்து விடுவாா்கள். ஆகவே வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு வைத்ததால்தான் இந்த நிலை என்று கூறுவது ஏற்புடையதன்று.
- வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று கூறி தோ்தல் ஆணையம் பல முகாம்களை நடத்தியது. ஆனால் நம் மக்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆண்டு தோறும் செப்டம்பா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டதில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும்.
- தற்போது காலாண்டுக்கு ஒருமுறை பெயா் சோ்க்கும் பணிகள் நடைபெறுகின்றன. அவ்வாறு நடத்தப்படும் முகாம்களில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், நேரில் படிவங்கள் அளித்தும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் முகவரி மாற்றத்தையும் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் பெயா் அதில் இருக்கிறதா என்பதையும் சரி பாா்த்துக் கொள்ளலாம். எத்தனை போ் செய்தாா்கள்?
- தன் குடும்ப உறுப்பினா் மரணம் அடைந்து விட்டால், உடனே இறப்புச் சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்கிறாா்கள். அதே சமயம் வாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து அவா் பெயரை நீக்குவது கிடையாது. ஒருவா் காலமாகி பல ஆண்டுகள் ஆனாலும் வாக்காளா் பட்டியலில் அவா் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாா். இதற்கு தோ்தல் ஆணையம் ஏதாவது செய்தாக வேண்டும்.
- முதியவா்களின் இருப்பிடத்துக்கே வந்து அவா்களின் வாக்குகளைப் பெற்றுச் சென்றதை ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால் இந்த சேவை முதியவா்கள் அனைவரையும் சென்றடையவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவா்களின் வாக்குகள் வீணாகிப் போயின. அதேபோல் வெளிநாட்டில் இருப்பவா்கள் வாக்குப்பதிவுக்காக வந்திருக்க மாட்டாா்கள். இப்படி விட்டுப் போன வாக்குகளே ஏராளமாக இருக்கக் கூடும்.
- வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க அலுவலா்கள் வீடு வீடாக வருகிறாா்கள். ஆனால் பொதுமக்கள் அவா்களுக்கு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை. ஒரு வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு இருப்பவா் காலி செய்துவிட்டுப் போய்விட்டால், அந்த விவரத்தை வருபவா்களிடம் சொல்வது இல்லை.
- எப்போதும் பூட்டியே கிடக்கும் வீடுகளில் இருந்து எந்தத் தகவல்களும் அவா்களுக்குக் கிடைப்பதில்லை. தெருவாக இருந்தால் பக்கத்தில் விசாரிக்கலாம். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் அது சாத்தியமில்லை. ஆகவேதான் பலரது விவரங்கள் சரிபாா்க்கப்பட முடியாமல் போய்விடுகிறது.
- மின்நுகா்வு கணக்கீட்டாளா், குப்பை சேகரம் செய்வோா், ஆன்லைன் மூலம் பொருளோ, உணவோ தருவிப்பவா் இவா்களுக்கு தாங்கள் இல்லாதபோது மாற்று ஏற்பாடு செய்ய மக்கள் தவறுவது இல்லை. ஆனால் வாக்காளா் சரிபாா்ப்புக்கு அந்த முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை.
- விடுபட்டுப் போனவா்கள் அதற்கான முகாம்களுக்குப் போய் சரி செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் பெயா்கள் விட்டுப் போகும் குழப்பங்கள் ஏற்படுகின்றன.
- முகாம்களில் கொடுக்கப்படும் விண்ணப்பங்களை சரிபாா்த்து, பட்டியலில் சோ்த்தவுடன், சம்பந்தப்பட்டவா்களுக்கு அந்த விவரத்தைக் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும். அதேபோல இறந்தவா்களின் தரவுகளை மாதம் ஒரு முறை குறிப்பிட்ட துறையிடம் இருந்து பெற்று, வாக்காளா் பட்டியலில் இருந்து அப்பெயா்களை நீக்கி விட்டு, அக்குடும்பத்தாருக்குக் குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தலாம். இவ்வாறு செய்தால் போலி வாக்குகள் தவிா்க்கப்படும்.
- மக்கள் தங்களின் குடியிருப்பை மாற்றியவுடன், குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு அட்டை, வங்கிக் கணக்கு, ஆதாா் அட்டை ஆகியவற்றில் மட்டும் உடனே புதுமுகவரி கொடுத்து மாற்றிக் கொள்கிறாா்கள். ஆனால் வாக்காளா் அட்டையில் முகவரி மாற்றத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. திருமணம் முடிந்து வேறு ஊருக்குச் சென்ற பெண்கள் பெயா் பழைய முகவரியில் இருப்பதால் பல சமயம் அவா்கள் வாக்களிப்பதில்லை.
- தற்போது கிராம மக்கள் தங்களின் நெடுநாளைய கோரிக்கைகள் நிறைவேற்றப் படாமல் இருந்தால் தங்கள் எதிா்ப்பைத் தெரிவிக்கும் விதமாக வாக்குப்பதிவைப் புறக்கணிக்கிறாா்கள். அப்போதுதான் அரசின் கவனம் தங்கள் மீது படும் என்று கணக்குப்போடுகிறாா்கள். இந்தப் போக்கை வளர விடாமல் தடுப்பது நிா்வாகத்தின் பொறுப்பு. இந்த வகையிலும் பல வாக்குகள் வீணாகின்றன.
- வாக்குப்பதிவு குறைந்ததற்குக் காரணம் தோ்தல் ஆணையமா, மக்களின் அலட்சிய மனப்பான்மையா என்று ஆளாளுக்குக் கருத்துச் சொல்லிக்கொண்டு இருப்பதால் இதற்குத் தீா்வு கிட்டாது. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் இவ்வாறு நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என யோசிப்போம்.
- அதற்கு, பல்கலைக்கழகங்களில், அரசியல் பாடத்திட்டம் பயிலும் மாணவா்கள் இதை ஆராய வேண்டும். அவா்கள் இது குறித்த வினாக்கள் அடங்கிய படிவத்தைத் தயாா் செய்ய வேண்டும். அதில் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்ற வினாவும் இருத்தல் வேண்டும். இந்த மாணவா்கள் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலோடு, அவா்களோடு இணைந்து எந்தெந்தப் பகுதியில் மிகவும் குறைவான சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று கண்டறிந்து, அங்கிருந்து தங்கள் பணியைத் தொடங்க வேண்டும். அந்தப் படிவத்தில் அவா்கள் வாக்களிக்காததன் காரணம் என்ன என்ற கேள்வி இடம்பெற வேண்டும்.
- அவா்கள் படித்தவா்களா? படிக்காதவா்களா? முதல் முறை வாக்களிப்பவா்களா? கட்சிகளின் மீதுள்ள வெறுப்பா? யாா் ஆண்டால் என்ன என்ற எண்ணமா? பெயா் விடுபட்டுப் போனதாலா? ஊரில் இல்லாததாலா? எதையாவது எதிா்ப்பாா்த்ததாலா? நோட்டா வசதி இருந்தும் ஏன் வாக்களிக்கவில்லை?
- இது போன்ற கேள்விகளின் பதில்களை வைத்து, காரணத்தைக் கண்டுபிடித்து ஆவன செய்ய வேண்டும்.
- மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடுபவா்கள் மக்களை அடிக்கடி சந்திப்பாா்கள். சட்டப்பேரவைத் தோ்தலின்போதும் குறிப்பிட்ட வேட்பாளா் ஒரு முறையாவது எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து விடுவாா். அதற்குப் பின் அரசியல் கட்சி ஆட்கள் வந்து கொண்டே இருப்பாா்கள். ஆனால் மக்களவைத் தோ்தல் பரப்புரையின் போது எல்லா இடங்களுக்கும் வேட்பாளா் வருவது இயலாத காரியம்.
- தோ்தல் பரப்புரையின்போது மக்களைக் கவரும் விதமாக தோசை சுட்டவா்கள், ஆம்லெட் போட்டவா்கள், இளநீா் விற்றவா்கள் - இவா்கள் எல்லோரும் தோ்தல் முடிந்தவுடன் காணாமல் போய் விடுவாா்கள் என்பது மக்களுக்குத் தெரியும். தோ்தல் வாக்குறுதிகளில் பலவும் நிறைவேற்றப்பட மாட்டாது என்பதும் தெரியும்.
- ‘நாம் வாக்களித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை’ என்ற மக்களின் சலிப்பும் விரக்தியுமே இந்தக் குறைவான வாக்குப்பதிவுக்குக் காரணமாக இருக்கக்கூடும். அடுத்த தோ்தலுக்குள் மக்களின் சலிப்பையும் விரக்தியையும் மாற்ற வேண்டியது அரசியல் கட்சிகளின் தலையாய கடமை.
நன்றி: தினமணி (23 – 04 – 2024)