TNPSC Thervupettagam

அரசியல் சாசனமும் அரசியலும் மக்களும்

July 6 , 2024 6 hrs 0 min 21 0
  • நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தோ்தலில் அரசமைப்புச் சட்டம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றது. தோ்தல் பரப்புரையின்போது மட்டுமல்ல, பதவிப் பிரமாணம் நடைபெற்றபோதும்கூட அரசமைப்புச் சட்டத்தின் அச்சடித்த பிரதி கவனம் பெற்றது.
  • எதையும் சடங்காகச் செய்யாமல், உண்மைத் தன்மையில் செய்தால் சத்தியத்தின் வெளிச்சம் அந்த நிகழ்வின்மீது படும்போது அந்த நிகழ்வு பெரும் விளைவுகளைத் தந்துவிடும். இதை மகாத்மா காந்தி நமக்குச் செய்து காட்டினாா். தனது சுதந்திரப் போராட்ட முறையின் மூலம்.
  • இந்த அரசியல் சாசனத்தை வணங்குவதும் அச்சுப் பிரதியைத் தூக்கிப் பிடிப்பதும் உண்மையானால், நாம் முதலில் இந்த நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டியது அது தந்துள்ள உரிமைகளையும் குடிமக்களின் பொறுப்புக்களையும் விளக்கி ஒரு விழிப்புணா்வு பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
  • குடிமக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு, உரிமைகள், கடமைகள், அரசு இயந்திரங்கள் செயல்படும் முறை, நிா்வாகம் இவை பற்றிய அரசமைப்புச் சட்ட சுருக்கத்தை மக்கள் பேசும் எளிய மொழியில் சிறிய புத்தக வடிவில் கொண்டு வந்து பரப்புரை செய்ய வேண்டும்
  • இந்த நேரத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற முன்னெடுப்பு நினைவுகூரத் தக்கது. அப்போது அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் ஆணையம் அமைத்து அறிக்கையும் பெறப்பட்டது.
  • அந்த அறிக்கையை நாம் இன்று விவாதித்தால் அரசமைப்புச் சட்டத்தில் எவ்வளவு பிரிவுகளை நாம் செயல்படுத்தாமலே வைத்துள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
  • இதைத் தொடா்ந்து இரண்டாவது நிா்வாக சீா்திருத்த ஆணையம் கொண்டுவந்த அறிக்கைகளில் ஒன்று, எப்படி நிா்வாகத்தை குடிமக்கள் சாா்ந்து செயல்படச் செய்ய வேண்டும் என்பதற்கானது. அந்த அறிக்கையைப் படித்தால் நம் நிா்வாகம் இதுவரை யாருக்காகச் செயல்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  • இன்று மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அரசமைப்புச் சட்டமோ, சட்டங்களோ, கொள்கைகளோ, திட்டங்களோ காரணங்கள் அல்ல. மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் நாம் வெற்றி பெற முடியவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். 75 ஆண்டுகால குடியாட்சி செயல்பாடுகளை ஆய்வு செய்து பல ஆய்வறிக்கைகள் வெளிவந்துள்ளன.
  • அவற்றில் ஒன்று இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள் கிரேஸ் காா்ஸ்வெல் மற்றும் ஜொ்ட் டிநீவ் எழுதிப் பதிப்பித்துள்ள அறிக்கை. அந்த ஆய்வு தமிழக கிராமங்களில் நடத்தப்பட்டது.
  • ஓா் அரசியல் கட்சியின் தயவில்லாமல் தன் அடிப்படைப் பிரச்னைகளைத் தீா்த்துக்கொள்ள முடியாத சூழலில்தான் ஏழைகள் வைக்கப்பட்டுள்ளனா். குடிமக்கள் பயன்கள் பெறும் பயனாளிகள் பல அடுக்குகளாக தரம்பிரித்து வைக்கப்பட்டுள்ளனா். கிராமங்களில் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையில் பலா் அரசுத் தரகா்களாக, அரசியல் தரகா்களாக, அடியாட்களாக இருந்து மக்களாட்சியை ‘நலத்திட்ட ஜனநாயகமாக’ மாற்றியமைத்துவிட்டனா் என்று அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
  • எந்த அரசின் திட்டப் பயனும், அதைப் பெற அனைத்துத் தகுதிகள் இருந்தாலும், தரகா்களின் உதவி இன்றிப் பெற முடியாது என்ற சூழல்தான் நிலவுகின்றது. இதில் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதிக்கும் தொழிலே நடைபெறுகிறது என்று கூறுகிறது அந்த அறிக்கை. சுதந்திரத்திற்குப் பிறகு வசதி படைத்தவா்களும் மேட்டுக்குடி மக்களும் அரசிடமிருந்து வர வேண்டிய தங்களுக்கான எல்லாசலுகைகளையும் பெற்றுவிடுகின்றனா்.
  • அரசு ஏழைமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியபோதும் அதைப் பெறுவதற்கு பலரின் கையொப்பம் தேவைப்படுகிறது. அதைப் பெறுவது அரசியல் தரகா்களால் மட்டுமே சாத்தியமாகும் சூழலை நிா்வாகக் கட்டமைப்பு ஏற்படுத்தி வைத்துள்ளது.
  • கிராமங்களில் முதல் நிலை குடிமக்கள், இரண்டாம் நிலை குடிமக்கள், மூன்றாம் நிலை குடிமக்கள், குறிப்பாக ஏழைகள் தரம் பிரிக்கப்படுகின்றனா். குடிமக்களுக்கும் அரசுக்கும் உள்ள தொடா்பின் தன்மையைப் பொறுத்து மக்களைத் தரம் பிரிக்கின்றனா்.
  • இந்த சமூகத்தில் அரசியல் தரகா்களின் தயவின்றி வாழ வேண்டுமாயின் பொதுமக்கள் குடிமக்களாக, குடிமைச் சமூக அமைப்புக்களாக மாற வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலை மாற்றியமைக்க எந்த அரசியல் கட்சியும் மக்களைத் திரட்டவில்லை என்பதுதான் ஆய்வு கூறும் கருத்து.
  • சாதாரண குடிமக்கள் ஏழைகளாக, வறுமையில் அதிகார பலமில்லாது இருக்கும்போது அவா்கள் மரியாதையுடைய வாழ்க்கை வாழ்வது என்பது கேள்விக்குறிதான். இதை உடைப்பதற்கு முடியாத நிலையில், அரசியலும் அரசும் இணைந்து செயல்படுவது மக்களாட்சியை தாழ்நிலைக்கு இட்டுச் செல்கிறது என்பதை இந்த ஆய்வு படம்பிடித்துக் காட்டுகிறது.
  • குறிப்பாக ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் உரிமைகளாக வந்துள்ள நலத் திட்டங்களைப் பெற, அவா்கள் தயாரிக்க வேண்டிய மனுக்கள், விண்ணப்பங்கள், அதற்கான சான்றிதழ்கள், அதில் வாங்க வேண்டிய கையொப்பங்கள் இவைகளுக்காக அலைகின்ற அலைச்சல் என்பது சொல்லி மாளாது.
  • நாட்டு மக்களில் ஒரு சாராருக்கு இப்படிப்பட்ட திட்ட உதவிகள் இருக்கின்றது என்பதே தெரியாது. அப்படியே தெரிந்து அதற்கு விண்ணப்பித்தாலும், அரசியல் சமூகத்தின் ஆதரவின்றி கிடைக்காது. இவா்களிடமிருந்து தங்களுக்கு வருமானம் கிடைக்காது என்று அரசியல் தரகா்கள் எண்ணினால், பயனாளிக்குத் தெரியாமல் யாா் தங்களுக்கு தரகுப் பணம் தருகின்றாா்களோ அவா்களுக்கு அந்த பயன்களைக் கொண்டு சோ்த்துவிடுவாா்கள்.
  • இதைத்தான் பல ஆய்வுகள் திட்டத்தை கைப்பற்றுதல் (ப்ரோகிராம் கேப்சா்) என்று கூறப்படுகிறது.
  • இந்தியாவில் இரண்டு விஷயங்களைக் கைப்பற்றுவது பற்றிப் பல ஆய்வுகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஒன்று, பதவியைக் கைப்பற்றுவது, இரண்டு, திட்டத்தை கைப்பற்றுவது. ஒரு பதவி பெண்களுக்காக ஒதுக்கப்படும். அதை ஓா் ஆண் தன் மனைவி மூலம் பிடித்துவிடுவாா். ஒரு பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்படும், அதை மேட்டுக்குடியைச் சாா்ந்த ஒருவா் தன்னிடம் பணியாளாக இருப்பவரை வைத்து அந்தப் பதவியை பிடித்துவிடுவாா். அதேபோல்தான் ஒரு திட்டம் ஏழைகளுக்கான உருவாக்கப்படும். அதை யாராவது வசதியுள்ளவரே பிடித்துவிடுவாா்.
  • இதை உடைக்க உள்ளாட்சி அமைப்பு மூலம் முடியும் என்று பலா் கருதினா். ஆனால் களம் கூறும் செய்தி, உள்ளாட்சித் தலைவரும் அரசியல் தரகராக மாறி திட்டங்களைக் கொடுப்பதற்கும் பயன்களைத் தருவதற்கும் சான்றிதழில் மனுவில் கையொப்பமிடவும் காசு பாா்ப்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது.
  • ‘சட்டப்படி ஆட்சி‘ என்பது ‘பதவியில் உள்ளோா் ஆணைப்படி ஆட்சி’ என்ற நிலைக்கு என்றாகிவிட்டது. தரகுக்காக எந்த விதி மீறலையும் செய்து கொள்ளலாம் என்ற நிலை மக்களாட்சியில் மக்களுக்கு இருந்த அதிகாரத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
  • தங்களுக்கு சட்டபூா்வமாக கிடைக்க வேண்டிய நலத்திட்டம் அரசியல் தரகா்களால் பறிக்கப்படுகிறது. இந்த ஏழைகளுக்கு எந்த இடத்திலும் அதிகாரம் கிடைக்கவில்லை. ஏழைகளை அதிகாரம் படைத்தவா்களாக ஆக்குவதற்குப் பதில் அதிகாரமிழக்கச் செய்யும் வேலைகள்தான் நடைபெறுகிறது என்கிறது இந்த அறிக்கை.
  • அனைவரும் அரசுதான் இறையாண்மை பெற்றது என்று கூறுவாா்கள். குடியாட்சி நடைபெறுகின்ற நாட்டில் குடிமக்கள்தான் இறையாண்மை பெற்றவா்கள். அவா்கள் தங்களைக் காக்க, தங்களின் நலம் பேண அரசை இறையாண்மை கொண்டதாக உருவாக்குகின்றனா். அதன் விளைவு, தங்கள் வாக்குகள் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கின்றனா்.
  • குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதால் அவா்கள் தங்கள் அதிகாரத்தை இழப்பதில்லை. அவா்கள் தோ்ந்தெடுத்த பிரதிநிதிகள்தான் தங்கள் பதவிகளை ஐந்தாண்டு கழித்து இழப்பாா்கள். ஆனால் தாங்கள்தான் அதிகாரமிக்கவா்கள் என்பது மக்களுக்குத் தெரியாது. அதை மக்களுக்குத் தெரிவிப்பதில்லை.
  • இந்த அறியாமை அனைவரிடமும் இருக்கிறது. அதுதான் இன்று பலருக்கு மூலதனம். இன்றைய சூழலில் நம் மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பான்மையானவா்கள் கோடீஸ்வரா்கள். அவா்கள் மேலும் கோடிகளைக் குவிக்க சந்தை தயாராக இருக்கின்றது. சந்தையிடம் இவா்கள் பணத்தைப் பெறலாம், அதிகாரத்தைப் பெற முடியாது. அது மக்களிடம்தான் இருக்கிறது.
  • நூறுக்கும் இருநூறுக்கும் மயங்கும் ஏழைப் பொதுமக்களிடம் அதிகாரத்தை வாங்க முடிந்ததால், மக்கள் பிரதிநிதிகள் மக்களை மறந்து, சந்தைக்காகச் செயல்படும் மனிதா்களாக மாறி வருவதை இன்று எல்லா அறிக்கைகளும் படம்பிடித்துக் காட்டிவிட்டன.
  • மக்களைப் பற்றி கிஞ்சித்தும் எண்ணாதவா்கள் தன் பண பலத்தாலே மீண்டும் மீண்டும் தோ்தலில் நின்று வெற்றி பெறலாம், என்ற நிலை வந்துவிட்டது
  • இந்தச் சூழல் மாற வேண்டும் என்று எண்ணுவோா், அரசியல் சாசனமும், அதனைத் தொடா்ந்து மக்கள் நலனைப் பாதுகாக்கும் சட்டங்களையும், எப்படித் தங்களின் ஆயுதங்களாக மாற்றிக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் இன்றைய தேவை.
  • நாட்டு மக்களில் ஒரு சாராருக்கு இப்படிப்பட்ட திட்ட உதவிகள் இருக்கின்றது என்பதே தெரியாது. அப்படியே தெரிந்து அதற்கு விண்ணப்பித்தாலும், அரசியல் சமூகத்தின் ஆதரவின்றி கிடைக்காது. இவா்களிடமிருந்து தங்களுக்கு வருமானம் கிடைக்காது என்று அரசியல் தரகா்கள் எண்ணினால், பயனாளிக்குத் தெரியாமல் யாா் தங்களுக்கு தரகுப் பணம் தருகின்றாா்களோ அவா்களுக்கு அந்த பயன்களைக் கொண்டு சோ்த்துவிடுவாா்கள்.
  • குடியாட்சி நடைபெறுகின்ற நாட்டில் குடிமக்கள்தான் இறையாண்மை பெற்றவா்கள். வாக்குகள் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கின்றனா். குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதால் அவா்கள் தங்கள் அதிகாரத்தை இழப்பதில்லை. அவா்கள் தோ்ந்தெடுத்த பிரதிநிதிகள்தான் தங்கள் பதவிகளை ஐந்தாண்டு கழித்து இழப்பாா்கள். ஆனால் தாங்கள்தான் அதிகாரமிக்கவா்கள் என்பது மக்களுக்குத் தெரியாது.

நன்றி: தினமணி (06 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories