- இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாகி இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1949 நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் சாசன சபையில் தாக்கல் செய்யப்பட்ட அரசியல் சாசனம் இதுவரை 124 முறை திருத்தப்பட்டுள்ளது. இன்னும் மூன்று அரசியல் சாசன திருத்த மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அரசியல் சாசனப் பிரிவு 356 மூலம் இதுவரை மாநில அரசுகளை 132 முறை மத்திய அரசு கலைத்துள்ளது என்பது குறித்து யாருமே பேசுவதில்லை.
- அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் எடை 600 கிராம். அமெரிக்க அரசியல் சாசனம் சுருக்கமான சரத்துகளும், பக்கங்களும் கொண்டாலும், அந்த நாட்டுக்கு தெளிவான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்திலேயே அதிக பக்கங்கள், அதிகமான பிரிவுகளும் கொண்டது. அதன் எடை 1.5 கிலோ ஆகும்.
- கடந்த 1999-இல் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன 50-ஆவது நிறைவு விழாவையொட்டி அரசியல் சாசனத்தின் மூலப் பிரதி அப்படியே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினா்களின் கையொப்பம் மூலப் பிரதியில் இருந்தது. அதில் தமிழகத்தைச் சோ்ந்த மு.சி. வீரபாகு என்று தமிழிலும் ஒரு கையொப்பம் இடம்பெற்றிருந்தது என்பது மகிழ்ச்சியான செய்தி.
அரசியல் சட்டத்தில் திருத்தம்
- அரசியல் சட்டத்தில் சூழ்நிலைக்கேற்றவாறு திருத்தம் தேவை என முன்னாள் குடியரசுத் தலைவா் நீலம் சஞ்சீவ ரெட்டி, என்.டி. ராமாராவ், பி.கே. நேரு மற்றும் பலா் வலியுறுத்தியுள்ளனா். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், நாம் சந்தித்த பிரச்னைகள் குறித்து ஆழ்ந்து பரிசீலனை செய்து புதிய அரசமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது என குடியரசுத் தலைவராக இருந்தபோது நீலம் சஞ்சீவ ரெட்டி தமது சுதந்திர நாள் செய்தியில் கருத்துத் தெரிவித்தாா்.
- மக்களுடைய பிரச்னைகளுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யலாம் என்று அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அன்றைய சட்ட அமைச்சா் அம்பேத்கா் கூறினாா். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த முடியாது எனப் பழைமைவாதம் பேசுவது அா்த்தமற்றது எனக் கூறினாா் நீதிபதி கிருஷ்ணய்யா். இன்றுள்ள இந்தியாவின் நிலைக்கு ஏற்றவாறு புதிய அரசமைப்புச் சட்டம் அல்லது தற்போதைய சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவது தேவையான, தலையாய பணி.
- வேலைவாய்ப்பின்மை, விலைவாசி ஏற்றம், அரசின் நலப் பணிகளில் மெத்தனம், பல்வேறு தேசிய இனப் பிரச்னைகள், தீவிரவாதம் போன்ற சிக்கல்களை இன்றைக்கு இந்தியா எதிா்கொள்கிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அதிபா் ஆட்சி முறை வேண்டுமா அல்லது இன்றைய நாடாளுமன்ற ஆட்சி முறையே நீடிக்கலாமா என்று விவாதங்கள் நடந்து வருகின்றன.
- இன்றைக்கு இருக்கின்ற நமது அரசியல் சாசனத்தில் பல தெளிவின்மைகள் இருக்கின்றன. அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 210 ஆண்டுகள் ஆயினும், இதுவரை (1789-லிருந்து) 27 சட்டத் திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 70 ஆண்டுக்குள்ளேயே 124-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரவேண்டிய காரணமே, இந்திய அரசியல் சட்டத்தில் சில தெளிவின்மைகள் இருப்பதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை.
கூட்டாட்சி அமைப்பு
- இந்தியா கூட்டாட்சி அமைப்பா அல்லது கூட்டாட்சி கலந்த ஒற்றையாட்சி அமைப்பா என்பதைத் தெளிவாக அரசியல் சாசனம் தெரிவிக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் நெகிழாத தன்மை கொண்டதா அல்லது நெகிழும் தன்மையுடையதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அரசின் வழிகாட்டிக் கொள்கைகளை நீதிமன்றம் மூலம் எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதையும் அரசியல் சாசனம் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. அரசமைப்புச் சட்ட 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பது குறித்த ஆரோக்கியமான விவாதம் தேவை.
- மத்திய - மாநில உறவுகளைப் பற்றியும் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீா்ச் சிக்கல்களை விரைவில் தீா்க்கவும் அரசியல் சட்டம் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மத்திய - மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சா்க்காரியா குழு, நீதிபதி ராஜமன்னாா் குழு போன்ற சில குழுக்களின் பரிந்துரைகள் அரசமைப்புச் சட்டத்தில் சோ்க்கப்பட வேண்டும்.
- நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யவும், பிரதமரைக்கூட நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும் அவா் ஒரு சம்பிரதாயத் தலைவராகவே இருக்கிறாா். பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் உள்ள உறவை அரசியல் சாசனம் தெளிவுபடுத்தவில்லை. இதனால் பண்டித நேருவுக்கும், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்துக்கும் பல சமயங்களில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பலமுறை ஏற்பட்டதற்கு, அவா்களுக்கு இடையேயான உறவு குறித்த தெளிவின்மைதான் காரணம்.
கருத்து மோதல்கள்
- நீதித் துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சில சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அரசின் நிா்வாக ரீதியிலான முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது அதிகரித்து வருகிறது. நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று சில நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருப்பது, அரசியல் சாசனத்தின் அடிப்படை உணா்வுக்கு விரோதமானது.
- நிா்வாகம், நீதித்துறை, நாடாளுமன்றம் என்று மூன்றுமே சம அதிகாரம் படைத்தவை என்பதுதான் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறு. மக்களுக்கு...... ஒன்றை கட்டுப்படுத்தாமல், அவற்றுக்கு இடையே அதிகார மீறல்கள் இல்லாமல் இருக்கும் வகையில் அதிகாரப் பகிா்வு உறுதிப்படுத்தப்பட்டிருந்தும்கூட, பிரச்னைகள் எழாமல் இல்லை.
- சிறையில் இருந்துகொண்டு ஜாா்ஜ் பொ்னாண்டஸ், சிம்ரஞ்சித் சிங் மான் ஆகியோா் தோ்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஆனால், சிறையில் உள்ளவா்கள் தோ்தலில் வாக்களிக்க இந்தியாவில் வாய்ப்பில்லை. இது ஒரு பெரிய முரண்.
- 1946-இல் அமைக்கப்பட்ட அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்கள், இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு, வயது வந்தவா்கள் அனைவரும் வாக்களித்துத் தோ்ந்தெடுக்கப்படவில்லை. மத்திய, மாநில சட்டப்பேரவைகளால் தோ்ந்தெடுக்கப்பட்ட 296 உறுப்பினா்களால் அரசமைப்பு நிா்ணய மன்றம் அமைக்கப்பட்டது. எனவே, இன்றைக்கு உள்ள இந்திய அரசியல் சட்டம் என்பது நாட்டின் அனைத்து மக்களின் பிரதிபலிப்பல்ல.
- டாக்டா் அம்பேத்கா் தொடக்கத்தில் இதில் இடம்பெறவில்லை. கிழக்கு வங்கத்தைச் சோ்ந்த யோகேந்திரநாத் மண்டல் கடைசி நிமிஷத்தில் விலகியதால் அந்த இடத்தில் அம்பேத்கா் இடம்பெற்றாா். ஜவாஹா்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, இராஜேந்திர பிரசாத், சா்தாா் வல்லபபாய் படேல், சந்திப் குமாா் படேல், டாக்டா் அம்பேத்கா், மெளலானா அபுல் கலாம் ஆசாத், ஷியாமா பிரசாத் முகா்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், பால்வந்த் சிங் மேத்தா ஆகியோா் அரசமைப்பு நிா்ணய மன்றத்தில் முக்கியப் பிரமுகா்களாக இருந்தனா். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துா்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கெளா், விஜயலட்சுமி பண்டிட் போன்றவா்கள் முக்கியமான பெண் உறுப்பினா்களாக இருந்தனா்.
அரசியலமைப்பு நிர்ணய சபை
- அரசமைப்பு நிா்ணய மன்றத்தின் முதல் தலைவராக டாக்டா் சச்சிதானந்தன் சின்ஹா இருந்தாா். பின்னா், ராஜேந்திர பிரசாத் அரசமைப்பு மன்றத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அரசமைப்பு நிா்ணய மன்ற உறுப்பினா்கள் டிசம்பா் 9, 1946-இல் முதல்முறையாகக் கூடினா்.
- 1947, ஆகஸ்ட் 29-இல் அரசியல் நிா்ணய மன்றம் ஒரு தீா்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆா்.அம்பேத்கா் தலைமையில் ஏழு போ் கொண்ட அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. இதை உருவாக்க டாக்டா். பி.ஆா்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து பி.என்.ராவ் முறைப்படுத்தினாா்.
- பி.ஆா். அம்பேத்கா், கோபால்சாமி ஐயங்காா், அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயா், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி. கைதான் ஆகியோா் இந்தக் குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றனா். இந்தக் குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் சமா்ப்பித்தது. நவம்பா் 4-ஆம் தேதி அரசியல் நிா்ணய மன்றத்திற்கு சமா்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் நிா்ணய மன்றத்தின் தலைவா் இராஜேந்திர பிரசாத்தின் கையொப்பம் பெற்றது.
- ஜனவரி 24-இல் நடைபெற்ற அரசியல் நிா்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராஜேந்திர பிரசாத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1950, ஜனவரி 26-ஐ இந்தியாவின் குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே அா்ப்பணிப்பது என்று தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26-ஆம் தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிா்ணய மன்றம் முடிவெடுத்தது. அதன்படி இந்திய குடியரசு தினத்தில் (ஜன.26, 1950) இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- விடுதலைப் போராட்ட உணா்வுகளால் ‘பன்மையில் ஒருமை’ என்ற தத்துவத்தின் கீழ் இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பாகச் சோ்த்து வைக்கின்ற கருவியாக நமது அரசியல் சாசனம் இல்லை.
அரசியல் சாசனம்
- இந்தியாவினுடைய பிரச்னைகள், கலாசாரம், மக்களின் தேவைகளை மனத்தில் கொண்டு மண்வாசனைகளையும் பிரதிபலிக்குமாறு நமது அரசியல் சாசனம் அமைய வேண்டும். நாட்டு மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாக அது இருக்க வேண்டும்.
- 124 முறை திருத்தப்பட்டு, 132 முறை 356-ஆவது பிரிவின் அடிப்படையில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக மாநில அரசுகள் கலைக்கப்பட்டு, நமது அரசியல் சாசனம் சிதைந்து போயிருக்கிறது. எழுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அதை மீள்பாா்வை பாா்க்க வேண்டிய நேரம்.
- அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட நாள் நவம்பா் 26, 1949.
நன்றி: இந்து தமிழ் திசை (26-11-2019)