TNPSC Thervupettagam

அரசியல்வாதிக்கும் ஓய்வு வேண்டும்

October 25 , 2021 1125 days 675 0
  • அரசியல் என்பது கட்சிகளின் வழியாக செயல்படுகிற சாதனமாகும். அரசியல்வாதி என்றால் ஏதேனும் ஒரு கட்சியின் தலைவராகவோ தொண்டராகவோதான் இருப்பார். கட்சி அரசியல் வழியாக அரசு இயந்திரத்தைக் கைப்பற்றி இயக்கிடும் அதிகாரத்தைப் பெறுவதையே ஜனநாயக ஆட்சி என்கிறோம். இது சர்வாதிகார ஆட்சிக்கு எதிரானது.
  • கட்சி அரசியல்வாதிகள் தேர்தல் மூலம் பிற கட்சிகளை வென்று, பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்தை ஏற்பார்கள். சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்த்தரப்பு என்பது இருக்க முடியாது. ஜனநாயக ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு நிகராக எதிர்க்கட்சியின் செயல்பாடு அங்கீகரிக்கப்படுகிறது. எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயக ஆட்சிதான் நீடிக்குமே தவிர, சர்வாதிகார ஆட்சிக்கான வாய்ப்பு இனி இல்லை.
  • அரசியல்வாதி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் நோக்கம் உன்னதமானதாகும். தேசத்தில் ஓடுகிற நதிகளை இணைத்து நீர்வளத்தைப் பரவலாக்குவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, கரோனா போன்ற கொள்ளை நோய்த்தொற்றுகளை முற்றாக ஒழிப்பது, தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துப் போக்குவரத்தைச் சீராக்குவது, ராணுவத்தைப் பலப்படுத்தி நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்றவை அவ்வுன்னதத்தில் இடம்பெறும் திட்டங்களாகும்.
  • அரசியல்கட்சிகளுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடிக்கவே செய்யும். ஆனாலும் அவற்றுக்கு மத்தியில் தேசிய நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் போட்டிகள் இருக்குமே தவிர, ஒரு கட்சி மற்ற கட்சிகளை ஒழிப்பதாக அப்போட்டிகள் இருக்காது.
  • இப்படிப்பட்ட அரசியல் துறையில் கட்சிகளைக் கட்டமைத்து செயல்படுகிறவர்கள், அக்கட்சித் தலைவரின் மீது பற்று கொண்டு, மாணவப் பருவத்திலேயே படிப்பை விட்டுவிட்டு வெளியே வந்தவர்களாகவும் இருப்பார்கள்.
  •  மகாத்மா காந்தியின் மீதுகொண்ட நம்பிக்கையால் தேச விடுதலைக்காக, பள்ளி, கல்லூரிகளை விட்டு வெளியேறியவர்கள் உண்டு. அரசு உயர்பதவிகளைத் துறந்து வந்தவர்கள் உண்டு. குடும்பத்தைத் துறந்து வந்தவர்கள் உண்டு. தேச விடுதலைக்காக இப்படித் தங்களின் சுகங்களைத்தான் துறந்தார்கள்.
  • அந்தமான் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டாலும், ஐஸ் கட்டிகள் மீது படுக்கவைத்துக் கொடுமைப்படுத்தினாலும், செக்கிழுக்க வைத்துத் துயரப்படுத்தினாலும் அங்குலம்கூட தங்கள் கொள்கையிலிருந்து வழுவியவர்கள் அல்லர் அவர்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.
  • இப்போதும் நம்மோடு உலவுகின்ற, தோழர்கள் நல்லகண்ணு, சங்கரய்யா, அச்சுதானந்தன், எல்.கே. அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் இன்றும் போற்றப்படுபவர்களாக உள்ளனர்.
  • இந்த இரு தரப்பும் அல்லாமல், மூன்றாம் தரப்பில் ஏ.கே. அந்தோனி, பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, ப. சிதம்பரம், சோனியா காந்தி, நரேந்திர மோடி, அமித் ஷா, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் போன்ற பலர், அரசியலில் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
  • பொது நியதிப்படி, உழைக்கின்ற அனைவருக்கும் உழைப்புக்கு ஏற்ப உண்ண உணவு வேண்டும். அதேபோல எட்டு மணிக்குக் குறையாமல் ஓய்வும் வேண்டும். உழைப்பு, உணவு, ஓய்வு இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. உழைப்பவருக்கு உணவும் இல்லாமல், ஓய்வும் இல்லாமல் போனால் வெகுவிரைவில் அவர்கள் சோர்ந்துவிடுவார்கள்.
  • இளமை நமக்குக் கிடைத்துள்ளது போல, முதுமையையும் நாம் தவிர்க்க முடியாது. முதுமை முற்றுகையிடுவதற்கு முன்பே ஓய்வுக்கு நாம் தயாராகிவிட வேண்டும்.
  • முதுமையில் அனுபவ ஞானம் கிடைப்பதாகக் கூறி, ஓய்வை ஒத்திப்போடுவது அநியாயம். இளைஞர்கள் மீது இருமடங்கு நம்பிக்கை வைத்து, முதியவர்கள் தங்களின் உழைப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதே தார்மிக நெறியாகும்.
  • அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு இப்போது மாநில அரசு 59 வயதிலும், மத்திய அரசு 60 வயதிலும் பணி ஓய்வை நிர்ணயித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 65 என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 62 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறை, நீதிமன்றம் முதலிய இரு துறைகளுக்கும் அரசியல் சட்டப்படி ஓய்வு பெறும் வயது நிர்ணயிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தனியார் துறையிலும் ஓய்வுக்கான வயது வரம்பு நடைமுறையில் உள்ளது.
  • அரசியல் சாசனத்தின் மூன்றாவது பிரிவினரான சட்டங்களை இயற்றும் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.-க்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு மட்டும் சட்டப்படியான ஓய்வு பெறும் வயது வரம்பு இல்லை. ஆனால், அவர்கள் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையுமே அரசியல்வாதிகள் என்கிறோம்.
  • இவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரம்பு அரசியல் சாசனத்தில் நிர்ணயமாகியிருக்க வேண்டும். அரசியல் சாசன சபையில் அன்றைக்கு இதுபற்றிய விவாதமே எழவில்லை. செக்யூலரிசம் என்கிற மதச்சார்பின்மை பற்றியும், சோஷலிசம் என்கிற சமத்துவம் பற்றியும், பட்டியல் இனச் சாதிகளின் இடஒதுக்கீடு பற்றியும் விவாதங்கள் நடைபெற்றதைப் போல, அரசியல்வாதிகளின் ஓய்வு வயது பற்றிய விவாதம் நடைபெறவில்லை. விவாதிக்க வேண்டும் என்று எந்த ஒரு எம்.பி.-யும் அன்று முன்மொழியவும் இல்லை.
  • அப்படியானால், அரசியல்வாதிகளுக்கு ஓய்வே தேவையில்லை என்பது நியாயமாகுமா? ஓய்வே இல்லாமல் தங்கள் வாழ்வை தேசத்திற்கு அர்ப்பணிப்பவர்கள் என்று அரசியல்வாதிகளை எண்ணிவிடலாமா?
  • அரசியல் சாசனப்படி ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தியாக வேண்டும். கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக அரசியல் சாசனம் கொண்டாடுகிறது. எந்த ஒரு மதத்தையும் ஒரு குடிமகன் தழுவிக் கொள்ளலாம், பின்பற்றலாம், பிரசாரமும் செய்யலாம்.
  • அதேபோல கருத்து சுதந்திரப்படி, ஒருவர் அரசியல் கட்சியைத் தொடங்கலாம். தேர்தலில் போட்டியிடலாம். எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாமல் சுயேச்சையாகப் போட்டியிடும் உரிமையையும் அரசியல் சாசனம் அவருக்கு அளித்துள்ளது.
  • இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த ஒரு நாட்டிலுமே அரசியல்வாதிகளுக்கான ஓய்வுக்கான வயது வரம்பு நடைமுறையில் இல்லை. நோய்வாய்ப்பட்டு இறந்துபோன அரசியல்வாதிகள் சிலர். நினைவாற்றல் இழந்து செயல்பட முடியாமல் ஒதுங்கிக் கொண்ட அரசியல்வாதிகள் பலர். முதுமை காரணமாக முடங்கிப் போன அரசியல்வாதிகளும் உள்ளனர். ஆனால், ஓய்வுக்கான வயது வரம்பு மூலம் அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்ட அரசியல்வாதி எவரும் இல்லை. காரணம், அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஓய்வுக்கான வயது வரம்பு நிர்ணயமாகவில்லை.
  • நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு மகளிருக்கு கொடுக்கப்பட வேண்டும் என அரசியல் சாசனம் சட்டம் வகுக்கவில்லை. ஆனாலும் நாடாளுமன்றம் அதனை விவாதித்து சட்டம் இயற்றியுள்ளது. நடைமுறைச் சிக்கல் மட்டுமே தொடர்கிறது. இதேபோல அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர் தேர்வுகளில் வயது முதிர்ந்த அரசியல்வாதிகளைத் தவிர்த்துக்கொள்ள தடையேதும் இல்லை.
  • அவ்வகையில் இந்திய அரசியலில் முதன் முதலாக, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிக்கு - அவர் முதலமைச்சராக இருந்தாலும் - ஓய்வுக்கான வயது வரம்பை நிர்ணயித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
  • பாரதிய ஜனதா கட்சி தனது கட்சித் தலைவர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை 75 என நிர்ணயித்துள்ளது. அதன்படி ஏழு ஆண்டுகளுக்கு முன்பே (2014-இல்) கட்சியின் அதிகாரபூர்வ அமைப்பு, பிரதமர் வேட்பாளராகப் பேசப்பட்டு வந்த எல்.கே. அத்வானி 75 வயதைக் கடந்துவிட்டதால் அவரை கட்சியின் வழிகாட்டுக் குழுவிற்கு அனுப்பியது. அதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவும் கட்சி அனுமதிக்கவில்லை.
  • அதன் பிறகு, கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துகளின் தலைவராக விளங்கி வந்தவரும், பி.ஜே.பி.-யை ஆளுங்கட்சியாக்கி முதலமைச்சராக இருந்தவருமான எடியூரப்பா 75 வயதைக் கடந்தபோது, விதிவிலக்காக மூன்று ஆண்டுகள் தொடர அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவராகவே பதவி விலகவும் அறிவுறுத்தப்பட்டார்.
  • இதன் பிறகு, இந்த ஆண்டு (2021இல்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமது அரசியல் தலைவர்களுக்கு ஓய்வு வயது வரம்பு 75 என நிர்ணயித்துள்ளது. மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானம் 2022 ஏப்ரலில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற உள்ள கட்சிக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இதனை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
  • கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தற்போது 76 வயது. கொள்கைப்படி அவர் பதவி விலகியாக வேண்டும் என்கிற நிலைமை நீடிக்கிறது. பி.ஜே.பி.-யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டுமே இதுவரை அரசியல் தலைவர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பை அறிவித்துள்ளன.
  • அரசியல் தலைவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்போதே, ஓய்வு பெறுவது இந்திய அரசியலில் ஓர் அதிசயம்தான்.
  • ஓய்வுபெறும் அரசியல்வாதிகள், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படலாம். பிற கட்சித் தலைவர்கள் மலரும் நினைவுகளில் மட்டுமே மூழ்க முடியும். முன்னாள் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு 97 வயது. முழு ஓய்வில் உள்ளார். அவர் தீவிர அரசியலில் ஈடுபட அனுமதியில்லை.
  • இதேபோல பிரதமராக இருந்த வாஜ்பாய் தமது இறுதிநாள்வரை (93 வயது) வீட்டிலேயே அமைதியாக வாழ்ந்து வந்தார். தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.
  •  பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தங்கள் தலைவர்களுக்கு ஓய்வுக்கான வயது வரம்பை நிர்ணயித்துள்ளதை, பிற அரசியல் கட்சிகள் பின்பற்ற போகின்றனவா?
  • பின்பற்றினால் இந்திய அரசியல் முதுமையான தலைவர்களால் தள்ளாடாது; உலக நாடுகளே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும்; சில நாடுகள் பின்பற்றவும் கூடும்.

நன்றி: தினமணி (25 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories