- செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெளியம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் அதிவேக இணைய வசதி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
- வீடு ஒன்றில் டிவி வாங்குவது குறித்து விவாதிப்பர். டிவி வாங்கினால் குழந்தைகளின் படிப்பு வீணாகிவிடும் எனவே வாங்க வேண்டாம் என்று பாட்டி வாதிடுவார். அப்படியா! தாத்தா வீட்டிலதான் டிவியே இல்லையே நீ ஏன் பள்ளிக்கூடம் பக்கமே போகலே அம்மா? என மகன் கேள்வி கேட்பார். நீண்ட நாட்களுக்கு முன் பாடநூலில் வந்த கதை இது.
- இப்படித்தான் எது புதிதாக வந்தாலும் ஒருவிதமான ஒவ்வாமை நம்மிடம் வெளிப்படுவதுண்டு. இதில், அண்மையில் கரோனா பெருந்தொற்றுக்காலம் பலரது வாழ்க்கையை ஆட்டங்காணச் செய்தாலும் கல்வியில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கச் செய்தது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பம் கோலோச்சத் தொடங்கும் போது கல்வி பெறும் முறையிலும், பள்ளி செயல்படும் முறையிலும் அதன் தாக்கம் இல்லாமல் எப்படி இருக்கும்? இந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் இணையம் மூலம் மாணவர்களை இணைத்தபோது அரசு பள்ளி மாணவர்களை தொலைக்காட்சி வழியாக இணைக்க அரசு முயன்றது.
இணையம் பெறும் உரிமை!
- ஏற்கெனவே கல்வி பெறும் முறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மேலும் வெளிப்படையாக வெளிப்பட்டது. அந்த காலத்தில் எம்போன்றோர், அனைத்துக் குழந்தைகளுக்கும் எப்படி கல்வி ஓர் அடிப்படை உரிமையாகியுள்ளதோ அதுபோல இணைய இணைப்பும், அதன் மூலம் கல்வி பெறும் உரிமையும் அடிப்படை உரிமையாக வேண்டும் என பேசினோம். பலரும் நகைத்தனர்.
- இன்று 20,332 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இணைய வசதியுடன் கூடிய உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை தமிழ்நாடு அரசு முழு வீச்சில் ஏற்படுத்தி உள்ளது. கல்வி அடிப்படை உரிமையாக எடுத்துக்கொண்ட காலத்தைவிட குறுகிய காலத்திற்குள் இணையவழி இணைப்பு குழந்தைகளுக்குக் கிடைக்க உள்ளது. குழந்தைகளுக்கான இணைய வசதி வாய்ப்பு என்பது நனவாக உள்ளது. இதனை நிச்சயம் கொண்டாடவேண்டும்.
- இன்றைக்கு நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் குழந்தைகளுக்கும் இணையத்துக்குமான நெருக்கம் என்பது அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. இந்த நெருக்கத்தின் பயன்களை எவ்வாறு குழந்தைகளின் கல்விக்குப் பயன்படுத்த இயலும் என்பதை யோசிக்க வேண்டும். அவர்கள் சரியான வகையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நுணுக்கங்களைப் பெற்றோரும் ஆசிரியர்களும் கற்க வேண்டும்.
- கணினியும் இணையமும் ஆசிரியர்களைவிடத் தகவல்களை விரைவாகவும் எளிதாகவும் சொல்லிக்கொடுக்கக் கூடியவை. ஆனால், குழந்தைகளை நல்வழிப்படுத்தவும், ஒழுக்க நன்னெறிகளை புகுத்தவும் ஆசிரியர்களால் மட்டுமே இயலும். ஆசிரியர்களின் முக்கியத்துவத்தைக் குறைக்காமல் கல்வி பெறும் முறையில் ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் காரணி என்ற நோக்கில் பார்த்துப் பயன்பெறுதல் நலம் பயக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 06 – 2024)