TNPSC Thervupettagam

அரசுப் பல்கலைக்கழகங்களின் அவல நிலை

March 18 , 2024 123 days 203 0
  • இந்தியாவில் 1857ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக்கழகம் முதன்மையானது. சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து 1966 இல் மதுரைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பின்னர், படிப்படியாகப் பல பல்கலைக் கழகங்கள் உருவாகி, இன்றைக்கு 21 அரசுப் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.
  • ஒவ்வொரு புதிய பல்கலைக்கழகம் உருவாகும்போதும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு இழப்பீடு தரப்படுவதில்லை. சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகப் பொறுப்புக்கு வருபவர்கள் அதைக் கேட்பதும் இல்லை.
  • கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக முன்னேற்றத்துக்கு, தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
  • மாறாக பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் நிதி நிர்வாகத்தின் மீது பொருத்தமில்லாத ஆட்சேபணைகளை எழுப்பியதன் காரணமாக, தற்போது தமிழ்நாடு அரசின் உதவிபெறும் 13 அரசுப் பல்கலைக்கழகங்கள் நிதிச் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கின்றன.

முட்டுக்கட்டைகள்

  • சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை பிப்ரவரி 11 அன்று இந்திய வருமான வரித் துறை முடக்கியது. ‘அரசுப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசிடமிருந்து 50%க்கும் குறைவான நிதி பெறுவதால் சென்னைப் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழக வரைமுறைக்குள் வருகிறது; அதன் காரணமாகக் கடந்த 2017இல் இருந்து 2023 வரை கட்ட வேண்டிய வருமான வரியாகச் சுமார் ரூ.424 கோடி செலுத்தப்பட்டால் வங்கிக் கணக்கு முடக்கம் நீக்கப்படும்என்று வருமான வரித் துறை தெரிவித்தது.
  • ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகக் கூட்டப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக நிதிக் குழுவில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள், வங்கிக் கணக்குகள் முடக்கத்தை நீக்குவதற்கு மட்டுமே தலைமைச் செயலக நிதித் துறை உதவிசெய்யும், மற்றபடி நிதிப் பற்றாக்குறைக்கு எந்தவித உதவியும் செய்ய இயலாது என்று கைவிரித்துவிட்டார்கள்.
  • பல்வேறு அவமானங்களையும் இன்னல்களையும் சந்தித்து சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களும் பதிவாளரும் வங்கிக் கணக்குகள் முடக்கத்தை மீட்டனர். பின்னர், பிப்ரவரி 2024 மாத ஊதியம், ஓய்வூதியம் ஒருநாள் தாண்டி வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 167 ஆண்டுக் கால வரலாற்றில் இது போன்று ஒரு சம்பவம் நடக்க முக்கியக் காரணம், தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை ஆகும். முதலில் அரசிடமிருந்து வர வேண்டிய நிதியைத் தடுத்து நிறுத்தியது.
  • இரண்டாவது, வருமான வரித் துறையின் விதிமுறைகளைச் சென்னைப் பல்கலைக்கழகத்துக்குச் சுட்டிக்காட்டத் தவறியது. இந்த இரண்டு தவறுகளைச் செய்த உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மீது இன்றுவரை ஒரு கேள்வியும் எழுப்பப்படவில்லை.
  • அதேபோல, 2024 பிப்ரவரியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஊதியம் அளிக்க முடியாமல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதமாகப் பிப்ரவரி 27 அன்று தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை அரசாணை (எண் 49) வெளியிட்டது.
  • அதில் 13 அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் ஆட்சேபணைகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை விரைந்து நிவர்த்தி செய்ய தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறைச் செயலர் தலைமையில் ஒரு உயர் நிலைக் குழு அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இக்குழுவில் பல்கலைக்கழகங்களின் சார்பில் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர் மட்டுமே இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. ஆட்சேபணைகளை மறுப்பதற்கோ விவரங்கள் அளித்துத் தெளிவுபடுத்துவதற்கோ பல்கலைக்கழக ஆசிரியர்களோ அலுவலர்களோ அதில் இடம்பெற வில்லை. பல்கலைக்கழகங்களின் பதிவாளர் எந்தநிலையிலும் தணிக்கைத் துறையின் ஆட்சேபணைகளுக்குப் பதிலளிக்க இயலாது. குற்றம்சாட்டுபவர்களே விசாரணை செய்வதும், அவர்களே தீர்ப்பு எழுதப்போவதும் விநோதம்.
  • ஏனெனில், பல்கலைக்கழக ஆசிரியர்-அலுவலர்களின் முக்கியமான அதிருப்தியே உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அலுவலர்கள் பல்கலைக்கழகங்களின் நடைமுறைக்கு ஒவ்வாத ஆட்சேபணைகளை எழுப்பி, அரசிடம் பல்கலைக்கழகங்களைத் தவறாகச் சித்தரித்துக் காட்டி, பல்கலைக்கழகங்களின் நிதி நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டதுதான்.
  • இந்த உயர் நிலைக் குழுவில் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் பணிசெய்த உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை ஆய்வாளர்களையும் விசாரணைக்கு உட்படுத்தினால்தான் உண்மை வெளிவரும். மேலும், இந்த உயர் நிலைக் குழுவில் பல்கலைக்கழக ஆசிரியர்-அலுவலர்கள் சார்பில் பிரதிநிதிகளை இணைத்தால்தான் நியாயமான தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் கருதுகின்றனர்.

போராட்டங்களின் பலன்

  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் ஆட்சேபணைகளினால் தமிழ்நாடு அரசு அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாதம்தோறும் அளிக்கும் ஆசிரியர்-அலுவலர் ஊதிய நிதி மானியத்தை அளிக்காமல் நிறுத்தி வைத்துவிட்டது.
  • ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. மிகப் பெரிய போராட்டங்களை மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர்-அலுவலர்கள் முன்னெடுத்த காரணத்தால், தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறை மூன்று மாத ஊதியத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு விடுவித்து அரசாணை வெளியிட்டது.
  • ஆனால், அதிலும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் ஆட்சேபணைகளின்படி அலுவலர்களின் ஊதியங்களை மாற்றியமைக்க வேண்டுமென்றும் மேலும் பதவி உயர்வுகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் சம்பள விகிதங்களைத் தீர்மானிப்பது அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் நிதிக் குழுவும் ஆட்சிமன்றக் குழுக்களும்தான். இந்த இரண்டு குழுக்களிலும் தமிழ்நாடு அரசின் செயலர் தகுதியில் நான்கு பேரும், இயக்குநர்கள் தகுதியில் நான்கு பேரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
  • நிதிக் குழுவும் ஆட்சிமன்றக் குழுவும் முடிவுசெய்து வழங்கும் ஊதிய விகிதங்கள், இதர பணிப் பயன்களில் முரண்பாடுகள் உள்ளதாக உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை கூறுகிறது. மேலும், அரசாணை எண்: 58 (01.03.2024)இல் தமிழ்நாடு உயர் கல்வித் துறைச் செயலர் முக்கியமாக ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
  • அதாவது, மதுரை காமராசர் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி தமிழ்நாடு அரசு, மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர்-அலுவலர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அரசாணையில் தெரிவித்துள்ள கருத்து, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  • அரசின் கடமை: மேற்கண்ட அரசாணைக்கு மேனாள் துணைவேந்தர்கள், மூத்த அறிஞர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். அரசாணையைப் பார்த்து உயர் கல்வித் துறைச் செயலரிடம் பத்திரிகையாளர்கள் விளக்கம் கேட்டதற்கு, அரசாணையில் உள்ளது சரியே என்றும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • இப்படி உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் நம்பகத்தன்மை இல்லாத செயல்பாடுகளை நம்பி, தமிழ்நாடு அரசின் பொறுப்பான பதவியிலிருக்கும் ஒருவர் அரசாணை வெளியிடுவது அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் என்பது அரசை வழிநடத்துபவர்களுக்குப் புரியவில்லை.
  • முன்னெப்போதும் இல்லாத இத்தகைய அசாதாரணசூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையும் தமிழ்நாடு அரசும் பிரச்சினைகளைச் சீர்தூக்கிப் பார்த்து மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் நலன் சார்ந்த முடிவுகளை இனிமேலாவது எடுக்க வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories