TNPSC Thervupettagam

அரசுப் பள்ளி மாணவர்க்கு மருத்துவக் கல்வியில் கூடுதல் ஒதுக்கீடு தேவை

July 17 , 2020 1649 days 799 0
  • மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இந்தத் தேர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்போல 7.5% இடஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

  • ஒதுக்கீட்டின் அளவு போதாது என்றாலும், மிகுந்த வரவேற்புக்கு உரிய முடிவு இது.

  • நீட்’ தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றவும், அதை நடப்பு ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்தவும் ஒப்புதல் அளித்திருக்கும் தமிழக அமைச்சரவை, ஒதுக்கீட்டின் அளவை 33.3% ஆக உயர்த்துவது தொடர்பில் யோசிக்க வேண்டும்.

  • தமிழ்நாட்டில், மாநிலப் பாடத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் மேல்நிலைக் கல்வியை முடிக்கும் சுமார் 8 லட்சம் மாணவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கினர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.

  • ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் 14 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பைப் பெற்றார்கள்.

  • இதற்கு அர்த்தம் அரசுப் பள்ளி மாணவர்கள் திறனில் குறைந்தவர்கள் என்பது அல்ல; மாறாக, தேர்ந்தெடுக்கும் முறை மோசமானது என்பதே.

  • அவர்களுக்கு ஓரளவேனும் நியாயம் கிடைக்க ஒதுக்கீட்டை அதிகமாகச் சிந்திப்பதே சரியான வழி. இது தொடர்பில் அரசுக்குப் பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான குழு, 10% இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது.

  • அதுவே குறைவு; அதை மேலும் குறைத்து 7.5% ஆக்கியிருப்பது நியாயம் அல்ல.

  • புதிய இடஒதுக்கீட்டைப் பார்த்து, மேல்நிலைப் படிப்பின்போது மட்டும், தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற முற்படும் குறுக்கு வழி ஒரு நிபந்தனையின் வழி அடைக்கப்பட்டிருக்கிறது.

  • ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவரே இந்த ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்’ என்பதே அது.

  • அதே சமயம், கட்டாயக் கல்வியுரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த உள் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம். தமிழக அரசு இந்த இடஒதுக்கீடு வெறும் அறிவிப்பாகவோ அல்லது தேர்தல் காலம் வரை மட்டுமே நீடிக்கும் ஏற்பாடாகவோ ஆகிவிடாமலும் உறுதிசெய்ய வேண்டும்.

  • மருத்துவப் படிப்பு உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கான 15% இடஒதுக்கீட்டை 1996-ல் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி தொடங்கிவைத்தார். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே 2001-ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா அதை 25% ஆக உயர்த்தினார்.

  • ஆனால், பிற்பாடு இந்த இடஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது. அந்த நிலை இப்போதைய புதிய ஒதுக்கீட்டுக்கும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.

நன்றி: தி இந்து (17-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories