- பல நாடுகளில் மண், மலை உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதுதவிர தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியேற்றும் கரியமில வாயு, புவி வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பை உலகம் இன்று உணரத் தொடங்கியுள்ளது.
- குறிப்பாக, பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ ஒழுங்கற்ற காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒருபுறம் வறட்சி, மறுபுறம் வெள்ள பாதிப்பு என காலநிலையில் நேரெதிர் மாற்றங்கள் உருவாகின்றன.
- இந்த ஆண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது. அத்துடன் போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால் நெல்சாகுபடி குறைந்துள்ளது. ஆனால் வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஒரு பக்கம் வறட்சி மற்றொரு பக்கம் வெள்ளம் நிலவுவதால் நடப்பு ஆண்டில் அரிசி உற்பத்தி குறையலாம்.
- இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே அரிசி விலை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் நடப்பு ஆண்டில் அரிசி உற்பத்திகுறைந்தால் அதன் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. எனவேதான், உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் வைப்பதற்காக பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 20-ம் தேதி தடை விதித்தது.
- உலக நாடுகள் உணவுப் பொருட்களின் தேவைக்கு ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. ஒரு நாட்டின் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி தடைபட்டால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாவது இன்று கண்கூடாக தெரிகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள 800 கோடி மக்கள் தொகையில் 300 கோடி பேரின் பிரதான உணவாகஅரிசி விளங்குகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகள் அரிசி இறக்குமதியை நம்பியே உள்ளன.
- உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில்சர்வதேச அளவில் 5.54 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பங்கு மட்டும் 2.22 கோடி டன் ஆகும். இந்தியாவின்மொத்த அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத அரிசி 25% என்ற அளவில் பெரும் பங்கு வகிக்கிறது.
- ஏற்கெனவே ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. தற்போது, இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கும் நிலையில், உலகளவில் உணவு பாதுகாப்பின்மை தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பாதிப்பு:
- இந்தியாவின் தடையால் அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் அரிசிஇருப்பு தீர்ந்துவிட்டது. பல சூப்பர் மார்க்கெட்களில் அரிசி வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது கரோனா காலகட்டத்தை நமக்கு நினைவூட்டுவதாக அமைந்தது.
- விலையும் இரண்டு மடங்கு அதாவது 10கிலோ அரிசியின் விலை ரூ.1640-லிருந்து(20 டாலர்) ரூ.3,200 வரை (40 டாலர்) அதிகரித்துள்ளது. இது தங்களது உணவு பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமெரிக்கர்கள் புலம்பும் சூழல் உருவாகி இருக்கிறது. ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மட்டுமே கையிருப்பாக இருப்பதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அமெரிக்கர்கள் திணறுகின்றனர்.
- இதேபோன்ற நிலைதான் ஆஸ்திரேலியாவிலும். வெள்ளை அரிசிக்கு மாற்றாக பாஸ்மதி இருந்தாலும், அதனை வாங்குவதில் அங்குள்ள மக்களுக்கு அதிக ஆர்வமில்லை. மக்கள் தேவைக்கு அதிகமாக அரிசியை வாங்கி இருப்புவைப்பதால், அமெரிக்காவைப் போல் ஆஸ்திரேலியாவிலும் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் துருக்கி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தீவிரமாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நாடுகளில் உணவுப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை உத்தரவு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடையை விலக்க ஐஎம்எஃப் கோரிக்கை:
- அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை உலகளவில் உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது என்கிறது சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்). ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளதால் கருங்கடல் பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உக்ரைன் உள்ளது. இதன் எதிரொலியாக, கோதுமை, எண்ணெய் வித்துகளின் விலை உலகளவில் ஏற்றம் கண்டுள்ளது.
- இந்த நிலையில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை நடவடிக்கை தானியங்களின் விலையை மேலும் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என்கிறார்சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் பியர்-ஒலிவியா குஹாஷன். எனவே, உடனடியாக அரிசிக்கான தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிடம் ஐஎம்எஃப் வலியுறுத்தியுள்ளது.
- அரிசி ஏற்றுமதிக்கு தடை என்பதை பணக்கார நாடுகள் ஓரளவு சமாளித்துவிடும். ஆனால், உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மையான சோமாலியா, சூடான், கென்யா, லெபனான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் நிலைதான் பரிதாபம். இந்தியா போன்றவேளாண் தலைமைத்துவமிக்க நாடுகள் இதனைஉணர்ந்து உலக நாடுகளிடையேயான உணவுசங்கிலித் தொடர் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- அதிக மழை, அதிக வெப்பம், பொய்க்கும் மழை, வெள்ளப் பெருக்கு போன்ற அதிதீவிர கால மாறுபாடுகள் ஒரு நாட்டின் உணவு உற்பத்தியை பாதிக்கும்போது அது மற்றொரு நாட்டில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைதற்போதைய உலகம் உணரத் தொடங்கியுள்ளது. இதில், உலக அரசியல் நிலவரங்களும் மோசமானால் நிலைமை இன்னும் விபரீதமாகும் என்பதை ரஷ்யா-உக்ரைன் போர் நமக்கு உணர்த்திஉள்ளது!
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2023)