TNPSC Thervupettagam

அரிய உயிரின் அழிவைத் தடுக்கச் செய்ய வேண்டியது

September 2 , 2023 499 days 329 0
  • உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவந்த பறவை இனம் இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் அழியும் அபாயத்தில் தத்தளிக்கும் என்று 90 களில் யாராவது சொல்லியிருந்தால், அவரை எள்ளி நகையாடி இருப்போம். ஒரே இடத்தில் இந்தியாவில் சுமார் 35,000 பறவைகள் இருந்ததை ஒரு பறவையியலாளர் பதிவுசெய்துள்ளார். அதை நம்ப முடியாமல் பறவையியலாளர் சாலிம் அலி நேரில் சென்று பார்த்து, அதை உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
  • 1980கள், 90கள் வரை வானம் எங்கும் இயல்பாகக் காணக்கூடிய ஒரு பறவை இனமாக அவை இருந்தன. ஆனால், இன்று வானம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் இந்த இனத்தைச் சேர்ந்த 9 வகைகளில் 3 வகை பேரழிவு அபாயத்தில் இருப்பதாக உயிரினங்கள் குறித்து ஆவணப்படுத்திவரும் ஐ.யு.சி.என். அமைப்புக் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் பரவலாகக் காணப்பட்ட இந்தப் பறவை இனம் தற்போது முதுமலை, சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இவை எதுவென ஊகிக்க முடிகிறதா?
  • பாறு’ எனச் சங்கத் தமிழிலும் ‘பத்’ என நீலகிரி, சத்தியமங்கலம் வாழ் இருளர் பழங்குடியினராலும் தோடர் மக்களாலும், ‘ரணபத்து’ எனப் படுகா மக்களாலும், ‘பிணந்தின்னிக் கழுகு’ எனச் சமவெளி மக்களாலும் அழைக்கப்படும் பறவைக்குத்தான் இந்த அவல நிலை நேர்ந்துள்ளது.

இதயத்தை நொறுக்கியது

  • இந்த இனத்தின் அழிவு குறித்துப் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் மைக் பாண்டே எழுதியக் குறிப்பு இதன் தீவிரத்தை நமக்கு உணர்த்தும்:
  • பாறு’ கழுகு குறித்து ஆவணப் படம் எடுப்பதற்காக 2007இல் ராஜஸ்தானிலுள்ள குப்பைக் கிடங்கிற்குச் சென்றிருந்தபோது ஆயிரக்கணக்கான பாறுக் கழுகுகள், அங்கு போடப்பட்டிருந்த இறந்த மாடுகளின் சடலத்தைச் சுற்றி மொய்த்தபடி இருந்தன. ஆனால், அதே இடத்திற்கு ஓராண்டு கழித்துச் சென்றிருந்தபோது மாடுகளின் சடலங்களுக்குப் பதிலாகப் பாறுக் கழுகுகளின் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தன.
  • அதுவும் குவியல் குவியலாகக் கிடந்தன. எங்கும் எனது கால்களை வைக்கவே முடியவில்லை. வேறு வழியின்றி அவற்றின்மீது நடந்து சென்றபோது, அவற்றின் எலும்புகள் நொறுங்கிய சத்தம் என் இதயத்தையே நொறுக்கியது” என வருத்தத்துடன் அக்காட்சியைப் பதிவுசெய்துள்ளார்.

ஏன் கவலைப்படவில்லை?

  • சில உயிரினங்கள் இல்லாது போனால் நமது பகட்டு வாழ்வுக்கோ நமது அடிப்படைத் தேவையான உணவு உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்கோ நேரடியாகப் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை என்பதால் நாம் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடந்து போகிறோம். இறந்த விலங்கை உண்டு உணவுச் சங்கிலியின் ஒப்பற்ற கண்ணியாக விளங்கும் பாறுகள் இல்லாது போனால், அது உணவுச் சங்கிலியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அது உடனடியாக எதிரொலிக்காது.
  • பாறுக் கழுகுகள் இல்லாத வெற்றிடத்தை நாய்களும் எலிகளும் எடுத்துக்கொள்ளும். நாய்களின் எண்ணிக்கை அதிகமானால் வெறிநோயின் (ரேபிஸ்) தாக்கம் கூடுதலாகவும் வாய்ப்புண்டு. தவிர வேறு பல தொல்லைகளும் ஏற்படலாம். கரோனா போன்ற நுண்மிகள் பரவவும் வாய்ப்பு உண்டு.
  • எனவே, இந்த இனத்தின் அழிவு மனிதகுலத்திற்கு விடப்பட்ட முன்னெச்சரிக்கை என்பதனை நினைவில் கொள்வோம். அத்துடன் நம் சமகாலத்தில் நம்மோடு வாழ்ந்த ஓர் உயிரினம் அழிந்தால், அது மனிதகுலத்திற்கு அவமானம் என்பதையும் உணரவேண்டும்.
  • இது குறித்துப் பொதுமக்களிடம் கவனப் படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை அன்று ‘பாறுக் கழுகு’ விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் அழிவிற்கு மனிதர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகள்தாம் முதன்மைக் காரணியாக இருந்து வருகின்றன. இவை அழிய நேரிட்டதற்கு என்ன காரணம்? அவற்றை அழிவிலிருந்து மீட்கத் தனிநபர்கள் என்ன வேண்டும்? அரசு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்த நாள் பயன்படுகிறது.

ஆபத்தாக மாறிய மருந்துகள்

  • எதனால் இவை அழிய நேரிட்டன? இறந்த விலங்குகளை உண்ணும் இயல்புடைய இப்பறவை களுக்கு உணவே நஞ்சாகிப் போனதுதான் முதன்மைக் காரணம். மாடுகளுக்கு வலிநீக்கி மருந்தாகப் பயன்படுத்திய டைக்ளோபினாக் மருந்தின் சாரம் இறந்த மாட்டை உண்ணும் இப்பறவைகளை அடைந்து, அவற்றின் சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்ததுதான் முதன்மைக் காரணம். இதனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு 2006ஆம் ஆண்டில் டைக்ளோபினாக் மருந்தைக் கால்நடைப் பயன்பாட்டிற்குத் தடை செய்தது.
  • நம்பிக்கையூட்டும் விதமாக அகிக்ளோபினாக், கீட்டோபுரோபேன் ஆகிய இரண்டு கால்நடை மருந்துகளைப் பயன்படுத்தவும் இந்த ஆண்டு மத்திய அரசு தடைசெய்துள்ளது. இதற்கு முன்னோடியாக கீட்டோபுரோபேன் மருந்தை 2015ஆம் ஆண்டும், புளூநிக்சின் மருந்தை 2019ஆம் ஆண்டும் தமிழ்நாடு அரசு கால்நடைகளுக்கு வாங்கப்படும் மருந்துப் பட்டியலிலிருந்து விலக்கிக்கொண்டது.
  • கேடு பயக்கும் மருந்துகள் எந்த வகையில் விற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட டைக்ளோபினாக், அசிக்ளோ பினாக், கீட்டோபுரோபேன் மருந்துகளுடன் பாதிப்பை ஏற்படுத்தும் பிற மருந்துகளான நிமுசிலாய்ட்சு, அனால்ஜின் ஆகிய மருந்துகளையும் விலக்க வேண்டும்.

நம்மால் உதவ முடியும்

  • இப்பறவையின் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப வருங்காலத்தில் பாதுகாப்பான இரையும் தட்டுப்பாடு இல்லாமல் அவற்றிற்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவை இறந்த விலங்குகளை உண்பதற்காகவே இயற்கையாகப் பரிணமித்துள்ளன.
  • எனவே, முதற்கட்டமாக காட்டு விலங்குகள் இறந்தால் அவற்றைப் புதைக்காமல் அப்படியே விட்டுவிட வேண்டும். காட்டு விலங்குகள் ஊருக்கு அருகில் இறக்க நேர்ந்தாலும் அவற்றைப் புதைக்காமல் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கிடத்தலாம். அது பாறுக் கழுகுகளுக்கு மட்டுமின்றி கழுதைப்புலி, பன்றி போன்றவற்றிற்கும் உணவாக மாறும்.
  • காட்டுக்கு அருகில் வசிப்பவர்களின் வளர்ப்புக் கால்நடைகள் இயற்கையாக இறக்க நேர்ந்தாலும் அவற்றைப் புதைக்காமல் இரையாக்க வனத்துறை வழிவகை காண வேண்டும். கோசாலை போன்ற இடங்களில் வளர்க்கும் கால்நடைகளுக்கும் இதை விரிவுபடுத்தலாம். மேலும் சாலையில் அடிபடும் விலங்குகளையும் புதைக்காமல் இது போன்ற உயிரினங்கள் பயன்படும் வண்ணம் எடுத்துச்சென்று போடலாம். இதற்கென ஒரு வழிகாட்டு நெறிமுறையை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
  • இறந்த விலங்கின் மீது மனிதர்கள் காட்டும் வன்மம் காரணமாக நஞ்சு தடவுவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. புலி தாக்கிய கால்நடைகள்மீது நஞ்சு தடவுதல் போன்ற கொடுஞ்செயல்களை முற்றாக ஒதுக்கினால்தான், பாறு கழுகினத்தையும் ஏனைய ஊனுண்ணிகளையும் ஆபத்திலிருந்து காக்க முடியும். ஒரே ஒரு மாட்டில் நஞ்சு தடவினால்கூட அது பல உயிரினங்களுக்கும் பேராபத்தாக முடியும்.
  • கழுகுக்கு மூக்கு வியர்த்தாற்போல, கழுகுப் பார்வை போன்ற சொலவடைகளும் கழுகு மலை, கழுகுக் குன்றம், கழுகு வரை போன்ற இடங்கள் வெறும் பெயர்களாக மட்டும் இல்லாமல் இந்த உயிரினமும் வாழ்வாங்கு வாழ வகைசெய்ய உறுதியேற்போம்.

நன்றி: தி இந்து (02 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories