TNPSC Thervupettagam

அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு

August 7 , 2024 159 days 434 0
  • பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் அருந்ததியின மக்களுக்கு என 2009 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசமைப்புச் சட்டம் 341 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட 76 பட்டியலின மக்களுக்கான சாதிகளில் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, தோட்டி, மாடிகா, பகடை, ஆதி ஆந்திரர் உள்ளிட்ட சாதிகளை அருந்ததியருக்குள் உள்ளடக்க வேண்டும் என இச்சட்டம் வரையறுத்தது.
  • 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பட்டியலின மக்கள்தொகை ஒரு கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 554. இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 15.7 சதவீதமாகும். இதில், அருந்ததியர் மக்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 61 ஆயிரத்து 487 ஆகும். ஒட்டுமொத்த பட்டியலின மக்களில் 5.5 சதவீதம் அருந்ததிய மக்கள் ஆவார்கள். இவர்களுக்கு பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனன் குழு பரிந்துரை செய்திருந்தது.
  • அருந்ததிய சமுதாயத்தைச் சார்ந்த மக்களை பட்டியலினத்தின் பிற சமுதாயம் சார்ந்த மக்கள் தீண்டாமை கொடுமைகளுக்கும், தீண்டாமை இழிவுகளுக்கும் ஆளாக்கி வந்துள்ளனர். பட்டியலின சாதி மக்களுக்கு உள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் நிலவி வந்துள்ளது.
  • தமிழகத்தில் பட்டியலின அருந்ததிய மக்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை பட்டியலினம் சார்ந்த பிற சாதி வெறியர்கள் மிரட்டுவதும், தடுப்பதும், ஏன் கொலை சம்பவங்கள்கூட நடந்துள்ளது. அருந்ததிய மக்கள் பட்டியலினம் சார்ந்த பிற சாதி மக்களை காதல் திருமணம் செய்தால் ஆணவப் படுகொலை சம்பவங்களும் நடந்துள்ளன.
  • அருந்ததிய மக்கள் பட்டியலினம் சார்ந்த பிற சாதி மக்களின் கோயில்களுக்குள் நுழைய முடியாது. சமமாக அமர்ந்து பேசமுடியாது. சாப்பிட முடியாது. தாழ்த்தப்பட்டோரில் மிக தாழ்த்தப்பட்டோராக இழிவுபடுத்தப்பட்டனர்.
  • அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, இது பட்டியலின மக்களின் ஒற்றுமையை பாதிக்கும்; மேலும், 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயல்; எனவே, இது சாத்தியமில்லை என பட்டியலின அமைப்பு சார்ந்த தலைவர்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அருந்ததிய மக்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். அருந்ததியர்கள் தமிழர்களே அல்ல, வந்தேறிகள் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.
  • ஆனால், அருந்ததியர்கள் என்று வகைப்படுத்துகிறபோது அதில் தோட்டிகள், பகடை, சக்கிலியர் உள்ளிட்டோர் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதி ஆந்திரர், மாடிகா, மாலா உள்ளிட்டோர் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தில் வசிப்பவர்கள். அருந்ததியர்களில் பெரும்பாலானோர் பட்டத்தரசி அம்மனையும், மதுரை வீரனையும் வழிபடுகின்றவர்கள் ஆவார்கள். இதில், தூய்மைப் பணியாளராக, விவசாய கூலிகளாக பணியாற்றுகின்றவர்கள் அதிகமானோர் உள்ளனர்.
  • தமிழகத்தில் பட்டியலின மக்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். வட தமிழகத்தில் பறையர் (ஆதிதிராவிடர்) சமூக மக்கள் பெரும்பான்மையானோர் உள்ளனர். தென் தமிழகத்தில் "பள்ளர்' எனப்படும் தேவேந்திரர் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மேற்கு தமிழகத்தில் (கொங்குப் பகுதி) அருந்ததிய சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதில், தமிழகத்தில் 15.5 சதவீத பட்டியலின மக்களில் 5 சதவீத மக்கள் அருந்ததிய மக்கள் ஆவார்கள். இவர்கள் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு உரிய பங்கை அனுபவிக்க முடியவில்லை. எனவே, இவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது நியாயமானதாகும்.
  • 1997-ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசாங்கம் மாடிகா, வெள்ளி, மாலா உள்ளிட்ட சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. அதன்படி, மிகப் பிற்படுத்தப்பட்ட 11 துணை சாதிப் பெயர்களை உள்ளடக்கிய வெள்ளி சமூகத்துக்கு அந்த மக்கள்தொகை அடிப்படையில், ஏ-அடுக்கில் ஒரு சதவீதம், அடுத்த நிலையில் பி-அடுக்கில் 17 துணை சாதிகளைக் கொண்ட மாடிகா சமூகத்திற்கு 7 சதவீதம், 3 ஆவதாக சி- அடுக்கில் 24 துணை சாதிகளைக் கொண்ட மாலா சமூகத்திற்கு 6 சதவீதமும், 4 ஆவதாக டி- அடுக்கில் 3 துணை சாதிகளைக் கொண்ட ஆதி ஆந்திரருக்கு ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது.
  • இதுவும் நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது. வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. இதேபோல, ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் உள் ஒதுக்கீடு வழங்கியதும் நீதிமன்றங்களால் தடைசெய்யப்பட்டது. இந்த வழக்குகள் எல்லாம் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
  • ஆந்திர மாநிலத்தில் மாடிகா, மாலா சமுதாய தலைவர்கள் உள் ஒதுக்கீட்டிற்கான போராட்டக் குழுவை அமைத்து நீதி மன்றங்களிலும், மக்கள் மன்றங்களிலும் போராட்டங்களை நடத்திவந்தனர். தமிழகத்திலும் அருந்ததிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு வேண்டி சட்டப் போராட்டங்களை நடத்திவந்தார்கள்.
  • ஆந்திர மாநில மாடிகா சமூக தலைவர் திரு. கிருஷ்ண மாடிகா, பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் இக்கோரிக்கையை வலியுறுத்தினார். தமிழகத்தில் அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை நீதிமன்றங்களில் உறுதிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினார். பிரதமர் மோடி இதற்கான உறுதிமொழியைக் கொடுத்து மத்திய அரசு மூலம் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • மத்திய அரசு வழக்குரைஞர்கள் மூலம் உரிய பிரமாணப் பத்திரங்களை (அபிடவிட்) தாக்கல் செய்து சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளை எடுத்தார்கள். 2004 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்கிற தீர்ப்பு உள் ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது.
  • பட்டியலின மக்களுக்கான சாதிகளை வரையறுப்பது, சேர்ப்பது, நீக்குவது உள்ளிட்ட அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. எனவே, மாநில அரசுகளுக்கு இதில் அங்கீகாரம் இல்லை என்கிற நிலை. இதுசம்பந்தமான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு சென்றன.
  • 2020 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு சாதகமான இடைக்கால தீர்ப்பை வழங்கியது. அதனைத் தொடர்ந்து, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு வழக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தற்போது, பட்டியலின, பழங்குடியின இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது என தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தவகையில், ஆந்திர மாநிலத்தில் மாடிகா சமூகத்திற்கும், தமிழகத்தில் அருந்ததிய சமூகத்திற்கும் உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்பது உறுதியானது. மாநிலங்களுக்கான அதிகாரமும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
  • தீர்ப்பு வழங்கிய 6 நீதிபதிகள் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் "கிரீமி' லேயர் நடைமுறை அமல்படுத்துவது அவசியம் என்கிற கருத்தையும் தெரிவித்துள்ளார்கள். முதல் தலைமுறையினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் பலனடைந்தவர்களே மீண்டும் மீண்டும் பலன்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு. ஓபிசி பிரிவினருக்கு "கிரீமி' லேயர் நடைமுறை அமலில் உள்ளது. அதேபோல, எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு இதை அமல்படுத்த வேண்டும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு கொள்கையில் ஒருமுறை அனுபவித்து முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் பலன்பெற்று இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்காதவர்களின் வாய்ப்பை தட்டிப்பறிக்கிறார்கள். இது தவறான நடைமுறையாகும். இதை மாற்றியமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
  • அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீடு எங்கள் சமூக நீதி கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என திமுக தரப்பும், இல்லை, நாங்கள்தான் உச்சநீதிமன்றத்தில் நல்ல வாதங்களை முன்வைத்து வெற்றிபெற்றுள்ளோம் என்று அதிமுகவும், அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்ததே நாங்கள்தான் என கம்யூனிஸ்டுகளும், பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை செயலாக்கிக் காட்டியுள்ளார் என்று பாஜகவினரும், இப்படி பரவலாக வரவேற்கின்றனர்.
  • பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் உள்ளிட்டோர் இது பட்டியலின மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும், பட்டியலின ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடு 3 சதவீதம் என்பது போதாது. 18 சதவீதம் பட்டியலின இடஒதுக்கீட்டில் 6 சதவீதம் அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தேர்தல் ஆகியவற்றில் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். அருந்ததிய மக்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகாரத்திலும் அரசியலிலும் கிடைத்திட வேண்டும். பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத பதவி, வேலைவாய்ப்புகளில் அருந்ததிய மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
  • தற்போது, எல்லாம் தனியார்மயமாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை தனியார்வசமும், பன்னாட்டு நிறுவனங்கள் மூலமும் உள்ளது. அரசு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இட ஒதுக்கீடு கொள்கைகளை தனியார் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் அமல்படுத்துவதில்லை.
  • சாதிவாரி இடஒதுக்கீடு கொள்கையை சிறுபான்மை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்படுவதில்லை. பட்டியலின மக்களுக்கான சலுகைகளை ஹிந்து தாழ்த்தப்பட்டவர் என்ற சான்றிதழை வைத்துக்கொண்டு, மதம் மாறியவர்கள சட்டவிரோதமாக இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவிக்கின்றனர். இந்த நிலையில், அருந்ததியருக்கான இந்த உள் ஒதுக்கீடு முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.

நன்றி: தினமணி (07 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories