- 2023-யை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அவை அறிவித்துள்ளது. அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் குவிக்கப்பட்ட பசுமைப்புரட்சியின் விளைவாகப் பட்டை தீட்டப்பட்ட அரிசி, வெள்ளை இட்லி, ரோஸ்ட் தோசை, பளிச்சிடும் வெண்மை கொண்ட அரிசிச் சோறு போன்றவை பிரபலமடைந்துவிட்டன. இன்றைக்கு நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்கள் அதிகரித்துள்ளதற்கு இப்படிப்பட்ட உணவு வகைகளை அதிகம் சார்ந்திருந்ததே காரணம் என்கிற புரிதல் உருவாகியிருக்கிறது.
- ஒருவித மேட்டிமைத்தனத்தின் அடையாளமாக இருந்த அரிசிச் சோறு அனைவருக்கும் பரவலாகக் கிடைத்த பிறகு ஏற்பட்ட விளைவு இது. அதே நேரம் கிராமத்து எளிய மக்கள் சாப்பிடும் உணவாக இருந்த சிறுதானியங்கள் இந்தப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
- ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் நமது கிராம மக்களின் முதன்மை உணவாக இருந்துவந்தன. சுவையும் சத்தும் நிறைந்த சிறுதானியங்கள், பல்வேறு வகைகளில், வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.
- நெல்லைப் போல் அதிகத் தண்ணீர் தேவைப்படாத, மானாவாரிப் பயிர் சிறுதானியங்கள். ஊட்டச்சத்து, ஆரோக்கிய உணவு சார்ந்த விழிப்புணர்வு பரவலாகிவரும் இந்தக் காலத்தில் சிறு தானிய பயன்பாட்டின் தேவை மீண்டும் உணரப்பட்டுள்ளது. துரித உணவு வகைகளைச் சாப்பிடுவதாலும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையாலும் ஏற்படும் தீங்குகளைச் சிறுதானியங்களும், இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு வகைகளும் மட்டுப்படுத்துகின்றன.
- ஐ.நா. அவை அறிவித்துள்ளதால் தேசிய அளவில் சிறுதானியங்கள் சார்ந்த கவனம் திரும்பியுள்ளது. உண்மையில், இது ஓராண்டுக் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், நம் வாழ்க்கை முறையில் கலந்த ஒன்றாக மாற வேண்டும்.
- நன்றி: பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு
நன்றி: தி இந்து (15 – 04 – 2023)