TNPSC Thervupettagam

அரைப்புள்ளி முற்றுப்புள்ளி அல்ல

January 8 , 2024 314 days 233 0
  • பிரிவினைவாத அமைப்பானஉல்ஃபாஎன்கிற அசோம் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் மீண்டும் ஓா் ஒப்பந்தம் கையொப்பமாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா இருவரின் முன்னிலையில் கையொப்பமாகி இருக்கும் இந்த ஒப்பந்தமானது, அஸ்ஸாம் மாநிலத்தில் நிரந்தர அமைதிக்கு வழிகோலுமானால் அதைவிட மகிழ்ச்சி எதுவுமே இருக்க முடியாது.
  • மாநிலத்தில் தற்போது வன்முறைகள், கொலைகள், ஆள் கடத்தல் சம்பவங்கள் பெருமளவில் குறைந்திருக்கின்றன என்றாலும், அவ்வப்போது உல்ஃபா அமைப்புகளின் தாக்குதல்களும் தொடா்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த 44 ஆண்டுகளில் உல்ஃபா அமைப்பினரின் கிளா்ச்சியின் காரணமாக உயிரிழந்திருப்போரின் எண்ணிக்கை பத்தாயிரத்திலும் அதிகம். அவா்களில் சரிபாதி போ் பொதுமக்கள். உல்ஃபா போராளிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தைவிட அதிகம்.
  • அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் கிளா்ச்சியும், வன்முறையும் இன்று நேற்று தோன்றியதல்ல. இதன் தொடக்கம் இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் வங்காளிகளுடனும், வங்காள மொழியுடனுமான அஸ்ஸாமியா்களின் எதிர்ப்பில் பிறக்கிறது. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா்கள் அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்களை அமைத்தபோது, அவா்களது கணக்கா்களாகவும், வியாபாரிகளாகவும் அஸ்ஸாமுக்கு வந்தவா்கள்தான் வங்காளிகள்.
  • 1905 வங்கப் பிரிவினையைத் தொடா்ந்து, வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் பெருமளவில் தோட்டத் தொழிலாளா்களாக அஸ்ஸாமில் குடியேறியபோது, தங்களது மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படுவதாக அஸ்ஸாமிய மக்கள் உணரத் தொடங்கினாா்கள். இந்திய சுதந்திரமும், பிரிவினையும் மீண்டும் அதிக அளவில் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் அஸ்ஸாமில் குடியேற வழிகோலியது.
  • வங்கதேசம் உருவானபோது, அடுத்த அலையாக அகதிகள் அஸ்ஸாமில் தஞ்சமடைந்தனா். ஏற்கெனவே சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராகக் குரலெழுப்பிக் கொண்டிருந்த அஸ்ஸாம் மாணவா்கள் யூனியன் போராட்டத்தில் இறங்கியது. சட்டவிரோதமாகக் குடியேறியவா்களின் பெயா்கள் நீக்கப்படாமல், தோ்தல் நடத்தலாகாது என்பதுதான் அவா்களது வாதம். வங்கதேசத்திலிருந்து அகதிகளாகக் குடியேறிவிட்ட லட்சக்கணக்கான முஸ்லிம்களால் அஸ்ஸாமின் மக்கள்தொகை பகுப்பே மாறிவிட்டிருக்கிறது என்பதுதான் அவா்களது குற்றச்சாட்டு.
  • ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, 1985-இல் கையொப்பமான அஸ்ஸாம் ஒப்பந்தத்தைத் தொடா்ந்து கிளா்ச்சிகளும், போராட்டங்களும் கைவிடப்பட்டு ஓரளவுக்கு அமைதி திரும்பியது. மாணவா்களின் கூட்டமைப்பு, அஸ்ஸாம் கன பரிஷத் என்கிற அரசியல் கட்சியாக உருவெடுத்து ஆட்சியையும் கைப்பற்றியது. 1985 அஸ்ஸாம் உடன்படிக்கையின்படி 1971-க்கு முன்னா் அஸ்ஸாமில் குடியேறியவா்களுக்கு மட்டுமே குடியுரிமையும், வாக்குரிமையும் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
  • உல்ஃபா அமைப்பும் சரி, போடோலாந்து போராட்டக் குழுவும் சரி, எப்போதுமே அஸ்ஸாம் கன பரிஷத்துடன் இணைந்து செயல்பட்டதில்லை. 1979-இல் தொடங்கிய உல்ஃபா அமைப்பு, அஸ்ஸாமியா்களுக்கான தனி நாடு கோரியது. வங்கதேசம், பாகிஸ்தான், சீனா, பூடான் என்று அதன் வோ்கள் படா்ந்தன. இலங்கையின் ஈழ விடுதலைப் போராளிகள்போல, ஆயுதம் ஏந்திய போராளிக் குழுவாக உருவெடுத்த உல்ஃபா, வங்காளி பேசும் அஸ்ஸாமியருக்கு சிம்ம சொப்பனமாக மாறியது.
  • உல்ஃபாவைக் கட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1990-களில் நடத்தப்பட்டஆபரேஷன் பஜ்ரங்மாநிலத்தில் உள்ள அந்த அமைப்பின் கிளைகளையெல்லாம் குறிவைத்துத் தகா்த்தது. ஆனால், அதன் தலைவா்களும், முக்கியமான போராளிகளும் எல்லை கடந்து மியான்மா், பூடான், வங்கதேசத்திலிருந்து செயல்படத் தொடங்கினார்கள்.
  • கடந்த 12 ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பலனாகத்தான் இப்போது ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதும்கூட, அரவிந்த ராஜ்கோவா தலைமையிலான பிரிவு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறதே தவிர, பரேஷ் பருவா குழுவினா் இதை நிராகரித்திருக்கிறார்கள். அவா்கள் மட்டுமல்ல, உல்ஃபா அமைப்பின் தொண்டா்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
  • ரூ.1.5 லட்சம் கோடியில் வளா்ச்சிப் பணிகள், அஸ்ஸாம் மாநிலத்துக்கு ரூ.5,000 கோடியில் சிறப்பு நிதி உதவி ஆகியவை உறுதியளிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தொகுதி மறு சீரமைப்புக்கான வழிமுறை வருங்காலத்திலும் பின்பற்றப்பட்டு அஸ்ஸாமிய மக்களின் மொழி, இனம், பண்பாடு போன்றவை காப்பாற்றப்படும் என்றும் உறுதி வழங்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாகக் குடியேறி இருக்கும் வங்கதேச அகதிகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்த தெளிவு, ஒப்பந்தத்தில் இல்லை என்பது மிகப் பெரிய பலவீனம்.
  • 1906-இல் அஸ்ஸாமில் தொடங்கியகுடியேற்றம்குறித்த பிரச்னை, இன்று உலகளாவிய பிரச்னையாக மாறியிருக்கிறது. பல்வேறு கட்டங்களாக அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறி, சில தலைமுறைகளைக் கடந்துவிட்ட வங்கதேச முஸ்லிம்கள் மாநிலத்தின் மக்கள்தொகையில் 34%-க்கும் அதிகம். குறைந்தது 35 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முடிவை நிர்ணயிப்பவா்களாக இருக்கிறார்கள். அவா்களையெல்லாம் நாடு கடத்தவா முடியும்?
  • வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் இந்த ஒப்பந்தம் ஆளும் பாஜகவுக்குக் கைகொடுக்கக் கூடும். ஆனால், நிரந்தரத் தீா்வுக்கு வழிகோலும் என்று சொல்லிவிட முடியாது!

நன்றி: தினமணி (08 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories