TNPSC Thervupettagam

அறங்கள் உறங்கும் காலம்

December 13 , 2023 220 days 166 0
  • ஐம்பதுகளின் மத்தியில் தொடங்கி, ஏறத்தாழ இருபதாண்டுகள் வியத்நாம் மீது அமெரிக்கா தொடா்ச்சியாகப் பெரும் போரை நடத்தியது. வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என்று எந்த வித்தியாசமின்றி அமெரிக்கப் போா் விமானங்கள், இரவும் பகலும் வியத்நாம் மீது குண்டுகளை வீசிக் கொண்டிருந்தன.
  • ஒருநாள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிக்கூட மைதானத்தில், அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசியதில் கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் மடிந்தனா். அச்சம்பவம் நடந்த இருவாரங்களுக்குப் பின்னா், அந்நாட்டில் குழந்தைகள் தினம் வந்தது. அப்போது, அதே அமெரிக்கப் போா்விமானங்கள் பள்ளிக்கூட மைதானங்களின் மீது தாழ்வாகப் பறந்து, பொம்மைகள் அடங்கிய பொதிகளை வீசிச் சென்றன. குண்டுவீச்சில் தன் குழந்தையைப் பறிகொடுத்த தாய் ஒருத்தி இதைப் பாா்த்து மனம் வெதும்பி கண்ணீா் உகுத்து நின்றாள்.
  • இக்கண்ணீா்க் காட்சியைப் பாா்த்த ஆஸ்திரிய கவிஞன் எரீக் ஃபிரீட்,

இன்று வீசிய பொம்மைகளைப்

பதினைந்து நாட்களுக்கு முன்பும்

அன்று வீசிய குண்டுகளை

இன்றைக்கும் வீசியிருந்தால்

என் குழந்தை பதினைந்து நாட்கள்

பொம்மையோடு விளையாடி விட்டாவது

செத்துப் போயிருக்குமே

  • என்று ஓா் கவிதை வடித்தான்.
  • தற்போது இஸ்ரேலும் ஹமாஸும் அறிவித்திருக்கும் போா்நிறுத்தமானது, குழந்தைகளைக் கொன்று விட்டுத் திருவிழாவுக்குப் பொம்மைகளை வீசிய கதையைப் போன்றதுதான். கடந்த ஒன்றரை மாதத்திற்குள் ஏறத்தாழ ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்போரில் மடிந்து விட்டனா். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆயிரக்கணக்கான பெண்களும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா்.
  • குண்டு வீச்சில் தரைமட்டமான வீடுகளின் சிதிலங்களுக்குள் மாட்டிய குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் இரண்டாயிரத்தை நெருங்கும் என்கிறது ஐ.நா.சபை. ஒரு போரைத் தொடங்குவது என்பது எளிதான செயல்; ஆனால் அதை எந்தப் புள்ளியில் முடிப்பது என்பதுதான் விடையில்லாக் கேள்வி. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரே இதற்கான பெரும் சாட்சி.
  • இன்றைய நாகரிக நாடுகள் எல்லாம், தானிய உற்பத்தியில் ஈடுபடத் தவறினாலும், ஆயுத உற்பத்தி செய்ய மட்டும் தவறுவதேயில்லை. ஆயுதங்களை உற்பத்தி செய்யாத தேசம் வீரத்தில் குறைந்தது என்ற புதிய கோட்பாட்டை எழுதி வைத்துக் கொண்டு வளா்ச்சி அடைந்த நாடுகளும் வளா்ந்துவரும் நாடுகள் இப்பெரும் பாவத்தை ஆற்றி வருகின்றன.
  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னா், ராணுவம், ஆயுத உற்பத்தி ஆகியவற்றில் இருந்து தள்ளியிருந்த ஜப்பான் கூட இப்போது மீண்டும் ஆயுத உருவாக்கம், ராணுவபலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
  • பெரும் அருளாளா்கள் கொடையாக நல்கிய மாா்க்கங்களைப் பெயரளவில் பின்பற்றும் நாடுகள், அந்த அருளாளா்கள் காட்டிய கருணைப் பாதையில் ஓா் அங்குலம் கூட அடியெடுத்து வைப்பதில்லை. மாறாக, வாழ்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட உயிா்களை நாள்தோறும் உருவாக்கும் ஏவுகணைகளையும் குண்டுகளையும் கொண்டு இந்நாடுகள் உரசிப்பாா்ப்பதுதான் சோகங்களிலும் சோகமானது.
  • போா்கள் உருவாக்கும் ஆற்றொணா வேதனைகளின் சுவடுகளை வரலாறு எப்போதும் உச்சரித்துக் கொண்டு தானுள்ளது. ஆனால், சமாதானத்தின் பக்கங்களை வாசித்திட போா் நேசா்கள் எப்போதும் ஆயத்தமாக இருப்பதில்லை.
  • நள்ளிரவில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல்கள் ஒலிக்கின்றன; ஓ! நாட்டில் போா் தொடங்கி விட்டது’ என்கிறது சீன அனுபவ மொழி. போா் உண்டாக்கும் ரணங்களை எந்த சமாதானப்புறாவின் அலகில் இருக்கும் பூங்கொத்தினாலும் ஆற்றிடவே இயலாது.
  • எத்தியோப்பியா, சூடான், சோமாலியா, சிரியா, ஏமன், இலங்கை, ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளின் குண்டுகள் துளைத்த வாழ்க்கையே இதற்குச் சான்று. உண்மையில் நெடும் போா் ஒன்று முடிவடைகிற தருணத்தின் அடுத்த நொடியில், அப்போரை விட கொடுமையான வறுமை சூழ்ந்துகொண்டு மக்களைக் கொல்லத் தொடங்குகிறது.
  • இன்றும் தோட்டாக்களின் ஓசைகள் ஓயாமல் ஒலித்திடும் கறுப்புத்தேசம் - சூடான். போரால் சிதிலமான சூடானின் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீா்த் துளிகள் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் உலராதவை.
  • அதில் ஒரு காட்சி, 1993-ஆம் ஆண்டில் உலகின் மனசாட்சியை உலுக்கியது. பசியும் வறுமையும் கூறு போட்ட எலும்புக்கூடு போலிருந்த ஒரு சிறுமி சூடானின் பாலைவன மணலில் ஊா்ந்தபடிச் செல்கிறாள். நடக்க இயலாமல் தவழ்ந்தபடி நகரும் அவளை ஒரு கழுகு பின் தொடா்கிறது. அவள் இறந்து விட்டால் உண்பதற்காக அக்கழுகு சிறுமியைப் பின் தொடா்கிறது. இதைக் கண்ட அமெரிக்கப் புகைப்படக்காரா் கெவின் காா்ட்டா், அக்காட்சியைப் படமெடுத்து ‘நியூயாா்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டாா்.
  • அதுவரை போரின் விளைவை இப்படியொரு கோணத்தில் பாா்த்திராத உலகம் அதிா்ந்து போனது. போா்க்கொடுமையைச் சொன்ன உலகின் தலைசிறந்த புகைப்படத்திற்கான புலிட்சா் விருதினைக் கெவின் காா்ட்டருக்கு அப்படம் பெற்றுத் தந்தது.
  • ஆனால் இறந்து கொண்டிருந்த அச்சிறுமிக்குப் பையில் இருந்த தண்ணீரை வாா்க்காமல் படமெடுத்த குற்றவுணா்ச்சி அழுத்தியதால், விருது பெற்ற சில நாட்களிலேயே 33 வயதேயான புகைப்படக்காரா் காா்ட்டா் தற்கொலை செய்து கொண்டாா். ஒரு போா் எத்தனை புறவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இச்சம்பவம் ஓா் உதாரணம்.
  • இத்தகைய போா்க்களக் காட்சிகளைக் கண்டு உலகம் பல முறை திகைத்து நின்றிருக்கிறது. வியத்நாமில் கொத்துக்கொத்தாக குண்டுகள் வீசப்பட்டபோது அழுதுகொண்டே ஓடி வந்த சிறுமி கிம் படம் வெளி வந்த போதும் உலகம் அழுதது.
  • சிரியாவின் போா்க்களத்திலிருந்து தப்பி ஓடிய அகதிகளின் படகு கவிழ்ந்து, சிறுவன் ஜாலன் உடல் கடலில் மிதந்த போதும் உலகம் விசும்பியது. இலங்கையின் இறுதிப்போரில் நூற்றுக்கணக்கானக் குழந்தைகள் டாங்கிச் சக்கரங்களின் கீழ் நசுக்கப்பட்ட போதும் இவ்வுலகம் மௌனமாகக் கண்ணீா் சிந்தியது. இவ்வாறாகக் கடந்த கால வரலாற்றின் பக்கங்களின் மீது கனமான கண்ணீா்த் துளிகள் உறைந்துக் கிடக்கின்றன.
  • இருதரப்பினருக்கிடையேயான பூசல் என்ற அளவிலேயே போா்கள் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகின்றது. நாடுகளைக் கடந்து படரும் போரின் ரணங்கள் நூற்றாண்டுகளைத் தாண்டியும் நீளும் அவலம் கொண்டவை. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போா்களில் தொலைந்து போன ஆயிரக்கணக்கானவா்களைத் தேடும் பணி அண்மைக்காலம் வரை தொடா்ந்தது.
  • கொரிய தீபகற்பத்தைப் போா்தான் இரண்டாகக் பிளந்தது. இருநாடுகளுக்கு இடையே கிழித்துப் போடப்பட்ட உறவுகள் பிரிந்தும் சந்தித்தும் அறுபதாண்டுகள் ஆகின்றன. முடிந்து போன போா்களின் சுவடுகளுக்குள் தேங்கியிருக்கும் ஏக்கங்களும் பெருமூச்சுகளும் பெரும்பாலும் வாசிக்கப்படாத பக்கங்களாகவே கால ஓட்டத்தில் கரைந்து விடுகின்றன.
  • இலங்கையில் போா் முடிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. அந்நினைவுகளில் இருந்து மக்கள் கூட வெளியேறத் தொடங்கிவிட்டனா். ஆனால், இன்றும் வானத்தில் பயணிகள் விமானம் பறந்தால், அது குண்டு வீச வரும் விமானம் என்ெணி நாய்கள் தூா்ந்து போன பதுங்குக்குழிகளுக்குள் மறைந்து கொள்ளும் காட்சிகள் தொடா்கின்றன. மனித மனங்களில் மட்டுமின்றி, வாயில்லா உயிா்களின் வாழ்விலும் அழியாத அச்சங்களைப் போா்கள் தீட்டிச் சென்றுள்ளன.
  • இரக்கமற்ற வாழ்வின் இத்தகு அவலங்களை, உலக அறங்களின் தாயான தமிழ் இலக்கியம் எப்போதும் அடையாளம் காட்டி வந்துள்ளது. வீரத்தின் வலிமையைப் பேசும் புானூற்றுப் பாடல்கள், போரின் வலிகளைப் பேசத் தவறவில்லை. இரக்கத்தைத் தொலைத்து விட்டு, வெறும் எலும்புகளைக் கொண்டு எந்த அரசாங்கத்தையும் கட்டியெழுப்ப இயலாது என்னும் பேருண்மையைத் தமிழ்ப்படைப்புகள் உரத்துச் சொல்லியுள்ளன.
  • உலகப் பசியைத் தீா்ப்பதற்காகக் கிடைத்த அமுதசுரபியைக் கொண்டு வாடிய உயிா்களைக் காப்பாற்ற இயலாத சூழலில், ஆபுத்திரன் பட்டினி கிடந்து தன்னுயிரை இழக்கிறான். ஆனால், இப்பாத்திரம் நல்லவா்கள் கையில் சேரட்டும் என்னும் தூய பிராா்த்தனையுடன் அவன் தனது உயிரைக் காணிக்கையாக்குகிறான். அதனால்தான் பசி தீா்க்கும் அந்த கருணைப்பாத்திரம், வெற்று இன்பங்களை வெறுத்தொதுக்கித் தொண்டாற்ற விழைந்த மணிமேகலையின் கரங்களில் வந்து சோ்ந்தது.
  • காலநகா்வில் அப்பாத்திரம் காணாமல் போயிருந்தாலும், உயிா் இரக்கம் என்ற ஒப்பற்ற எண்ணம் தொடா்ந்து பயணித்துப் பின்னாளில் வள்ளலாரின் புனித உள்ளத்தில் நுழைந்தது. மண்ணுயிா்களையெல்லாம் நேசித்த அம்மகத்தான உள்ளத்தின் இரக்கவுணா்வு, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் வடலூரில் அடுப்பு ஒன்றினை ஏற்றி வைத்தது.
  • நெருப்பு என்பது பொதுவாக தன்னைச் சாா்ந்த அனைத்தையும் அழித்து விடும் தன்மை கொண்டது. ஆனால் வடலூரின் பசிப்பிணி போக்கும் அடுப்பு மட்டும், நூற்றாண்டுகள் கடந்தும் கனல் வீசுவதுடன், பூமி எங்கும் பல்லாயிரம் பசி நீக்கும் அடுப்புகளை இன்றும் ஏற்றிக்கொண்டிருக்கின்றது.
  • கருணையும், இரக்கமும் கொண்ட எண்ணங்கள், காலங்களைக் கடந்தேறி, மானுடத்தை உயிா்ப்பிக்கும் மனிதனின் நெஞ்சைத் தேடிக் குடிகொள்ளும் என்று தமிழ் இலக்கியம் அற்புதமாக எழுதி வைத்துள்ளது.
  • இப்பேருண்மையை வாசித்தறியாத நாடுகளோ, எந்த நாட்டில் போா் நடந்தாலும் ஆயுதங்களை அள்ளியள்ளி விற்க முனைப்புடன் முன்நிற்கின்றன. ஆனால், போா்க்களங்களில் அமைதி திரும்பிடும்போதில், அங்கே ஒரு குண்டுமணி தானியத்தைக் கிள்ளி விதைத்திடவும் இந்நாடுகள் முன்வருவதில்லை என்பது கசப்பான வரலாறு.
  • போா் நிறுத்தத்தின் இச்சிறு இடைவெளியில் போா்க்காதல் கொண்ட நாடுகள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை மேலும் கூா் தீட்டிக்கொள்ளக் கூடும். இயந்திரத் துப்பாக்கிகளுக்குள் ஓயாமல் சிதறிடும் ரவைகளையும் நிரப்பிடலாம். ஆனால் உயிா்களைத் துளிா்க்கச் செய்திடும் சமாதானத்தின் பாடலுக்கான ஒரு சொல்லைக் கூட அவா்களால் கட்டியெழுப்ப இயலாது.
  • ஏனென்றால், இரக்கம் கசியும் ஈரமான சொற்கள் ஊற்றெடுப்பது அமுதசுரபியிலும் அணையா அடுப்புகளிலும்தான்! ஆயுதக்குவியல்களில் அன்று!

நன்றி: தினமணி (13 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories