TNPSC Thervupettagam

அறிவியலின் சூப்பர் ஸ்டாராக ஐன்ஸ்டைன் ஆனது எப்படி?

November 27 , 2019 1878 days 1029 0
  • அது 1919-ன் முற்பகுதி. பிரிட்டிஷ் வானியலாளர்களை உள்ளடக்கிய இரண்டு குழுக்கள் ஒரு சூரிய கிரகணத்தைக் கண்டாய்வு செய்வதற்காக (observation) புவியின் தொலைதூரத்தை நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 6, 1919 அன்று அந்தக் குழுக்கள் தங்கள் கண்டறிதல்களை லண்டனில் அறிவியலாளர்கள் நிரம்பிய அவையில் முன்வைத்தனர். அவர்களின் அறிவிப்பு இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்த மனிதர்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தது.
  • அந்தக் குழுக்களின் அறிக்கை, முதல் உலகப் போர் நிறைவுக்கு வந்து ஓராண்டு முடிவதற்கு முன்பு வெளியானது. ஆகவே, போரினால் ஏற்பட்ட காயத்தை ஆற்றவும் அது உதவியிருக்கலாம். அந்த பிரிட்டிஷ் கிரகண ஆராய்ச்சிப் பயணமானது, ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த ஈர்ப்புவிசை பற்றிய புதிய கோட்பாட்டைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
  • ஜெர்மனியில் பிறந்த ஐன்ஸ்டைன் தனது அறிவியல் படைப்புகளை எதிரியின் எல்லைக்குள் இருந்துகொண்டுதான் வெளியிட்டார். பிரிட்டிஷ்காரர்கள் ஐன்ஸ்டைன் முன்வைத்தது சரியென்று நிரூபித்தால், அவருடைய கோட்பாடு நவீன அறிவியல் சிந்தனையின் தந்தையும் பிரிட்டனின் தேசியக் கதாநாயகருமான நியூட்டனின் கோட்பாட்டைத் தகர்த்துவிடும்.

புரட்சிகரமான கருத்து

  • வெளியில் (space) பரவியுள்ளதும், பெரும் நிறையுள்ள பொருட்களை ஈர்த்துவைத்திருப்பதுமான ஈர்ப்புவிசையை ஒரு விசையாகவே நியூட்டன் பார்த்தார். ஈர்ப்புவிசையே வெளிதான் என்ற புரட்சிகரமான கருத்தின் மூலம் நியூட்டனின் கருத்தை இடம்மாற்றினார் ஐன்ஸ்டைன். ஒரு நாடக அரங்கத்தின் தரைப்பலகைகள்போல் இறுக்கமாகவும் மாறாததாகவும் காலமும் வெளியும் இருப்பதில்லை.
  • மாறாக, ஜெல்லிபோல் குலுங்குவதாக அவை உள்ளன என்றார் ஐன்ஸ்டைன். பெரும் நிறை கொண்ட பொருள் ஒன்று குலுங்கக்கூடிய இந்தக் கால - வெளியில் குழிவு ஏற்படுத்துகிறது, ரப்பர் விரிப்பின் மீது ஒரு ஈயக்குண்டு வைக்கப்படும்போது, அதில் குழிவு ஏற்படுவதுபோல. சூரியனால் பூமி ஏன் ஈர்க்கப்படுகிறது என்றால் அது விசையினால் அல்ல, பூமி பயணிக்கும் வழியில் உள்ள கால-வெளியில் குழிவை சூரியன் ஏற்படுத்துவதால்தான்.
  • 1911-லேயே, தனது விநோதமான கருதுகோளைச் சரிபார்க்க ஒரு வழிமுறையை ஐன்ஸ்டைன் பரிந்துரைத்தார். ஒரு விண்பொருளானது பெரும் நிறையுடன் சூரியனைப் போல இருந்தால், அதன் அருகில் உள்ள வெளியில் பயணிக்கும் பொருட்களின், கூடவே விண்மீன் ஒளியின் துகள்களின், வளைவான பாதையை அறிவியலாளர்களால் காண முடியும்.
  • சூரியனைக் கடக்கும்போது ஒரு விண்மீனின் ஒளி வளைவதையும் சூரியன் வேறு இடத்தில் இருக்கும்போது அதே விண்மீனின் ஒளி வளையாமல் செல்வதையும் தொலைநோக்கியின் மூலம் காணலாம் என்று பரிந்துரைத்தார் ஐன்ஸ்டைன்.
  • சாதாரண சூழல்களில் இதுபோன்று கண்டாய்வு செய்வது தவறாகவே முடியும். கண்ணைக் கூசச் செய்யும் சூரியத் தகடானது விண்மீன்களிடமிருந்து வரும் மங்கலான வெளிச்சத்தை மூழ்கடித்துவிடும்.
  • ஆனால், கடிகார இயக்கம் போன்ற சூரியக் குடும்பமானது சூரியனுக்கும் பூமிக்கும் சரியாக நடுவில் நிலவைக் கொண்டுவந்து வைக்கும் அரிதான அந்தத் தருணங்களிலும் இடங்களிலும் அந்த விண்மீன்கள் பார்வைக்கு வரும்.
  • 1912-ல் தொடங்கி, ஐன்ஸ்டைன் கூறிய, ஈர்ப்புவிசையால் ஒளி வளையும் நிகழ்வை சூரிய கிரகணத்தின்போது தேடி நடந்த முயற்சிகள் பல மோசமான வானிலையால் தோல்வியுற்றன. இதில் முதலாம் உலகப் போரும் விளையாடிவிட்டது. ஜெர்மானிய வானியலாளர் எர்வின் ஃபின்லே ஃப்ரான்லிச் ஆகஸ்ட் 21, 1914-ல் தெரியவிருந்த சூரிய கிரகணத்தைக் கண்டாய்வு செய்ய வந்தபோது போர் வெடித்தது.
  • அவரும் அவரது உதவியாளர்களும் ஒற்றர்கள் என்று கருதப்பட்டு, உடனடியாக ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஐன்ஸ்டைன் போரை வெறுத்தார். அக்டோபர் 1914-ல் 93 ஜெர்மன் அறிவியலாளார்கள் ஜெர்மானிய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்கள்.
  • ஐன்ஸ்டைன் அதில் கையெழுத்திட மறுத்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஜெர்மானிய ராணுவத்தின் தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கையில் கையெழுத்திட்ட நான்கு அறிவியலாளர்களில் ஐன்ஸ்டைனும் ஒருவர்.

புதிய செயல்வீரர்

  • 1916-ல் ஐன்ஸ்டைனுக்கு அவருடைய பணிகளைத் தாங்கிப்பிடிக்கக் கூடிய எதிர்பாராத, ஒரு புதிய செயல்வீரர் கிடைத்தார். அவர்தான் பிரிட்டிஷ் வானியலாளர் ஆர்தர் எடிங்டன். பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர மறுத்ததால் அவரைக் கிட்டத்தட்ட சிறையில் இடுவதற்கு இருந்தார்கள். ஐன்ஸ்டைனின் முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளைப் படித்த பிறகு, ஐன்ஸ்டைனின் அறிவியல் படைப்புகளில் எடிங்டன் பெரிதும் மூழ்கிவிட்டார்.
  • அந்தக் கட்டுரைகளை அப்போது போரில் எந்தத் தரப்பும் எடுத்திராத நெதர்லாந்தின் வழியாக பிரிட்டனுக்குக் கடத்திவந்திருந்தார். தனது சகாக்களையும் ஐன்ஸ்டைனின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும்படி தூண்டினார். கால-வெளி வளைவு என்ற ஐன்ஸ்டைனின் புதிரான கோட்பாடு பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளை யாராவது இழிவாகப் பேசினால் அவர்களை மறுத்தும் வாதிட்டார்.
  • ஒளியானது வளையும் என்ற ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்பைப் பரிசோதிப்பதற்காக எடிங்டனும் பிரிட்டனின் அரசவை வானியலாளருமான ஃப்ராங்க் டைசனும் மே 29, 1919-ல் நிகழவிருந்த சூரிய கிரகணத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
  • 1919-ம் ஆண்டின் நிகழ்வானது நிறைய வகைகளில் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்று என்று, ராயல் வானியல் கழகத்தின் மாதாந்திர இதழான ‘தி அப்சர்வேட்டரி’யில் டைசன் தெரிவித்திருந்தார். அந்தக் கிரகணம் ஆறு நிமிடங்களுக்கும் மேல் நிகழ்வது, 20-ம் நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணங்களுள் ஒன்று.
  • இன்னும் வேறென்ன வேண்டும் என்பதுபோல், அந்தக் கிரகணம் பிடித்த சூரியன் பின்னணியில் பல்வகைமை கொண்ட விண்மீன்களை, அதாவது ஹயாடிஸ் விண்மீன் கொத்தைக் கடந்துசெல்லும். அப்போது ஐன்ஸ்டைனின் கோட்பாட்டைப் பரிசோதித்துப் பார்க்கும் அளவுக்கு விண்வெளி வெளிச்சம் நிறைய கிடைக்கும். அந்த விண்மீன்கள் ஓரளவுக்கு வெளிச்சமானவை, ஆகவே பார்ப்பதற்கு எளிதானவை.

ஆய்வுக்குப் பச்சைக்கொடி

  • டைசனும் எடிங்டனும் 1919 நிகழ்வைக் கண்டாய்வு செய்வதற்கான திட்டங்களில் இருந்தபோது, போரானது ஐரோப்பாவைச் சின்னாபின்னமாக்கிக்கொண்டிருந்தது. இறந்துபோன பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களுக்குப் பதிலாக ஆட்களைச் சேர்த்தாக வேண்டிய நெருக்கடியில் பிரிட்டிஷ் ராணுவம் 1918-ல் முனைப்பாக இருந்தது. தனது பணி காரணமாக ராணுவ சேவையிலிருந்து விதிவிலக்கைப் பெற்றிருந்தவரும் திருமணமாகாதவரும் 35 வயது நிரம்பியவருமான எடிங்டனின் விதிவிலக்கை மூன்று மாதங்களில் ரத்துசெய்ய வேண்டும் என்று ராணுவத் தீர்ப்பாயம் வாதிட்டது. ஏப்ரலில் அவருக்கு மூன்று மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஜூன் 14, 1918-ல் கேம்ப்ரிட்ஜில் நடந்த விசாரணையில், அவருக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கைத் திரும்பப் பெறுவதில் ராணுவம் வெற்றி கண்டது.
  • இறுதியாக, ராயல் வானியல் கழகங்களின் கிரகணங்களுக்கான இணை நிரந்தரக் குழுவின் தலைவராக ஆகியிருந்த டைசனிடமிருந்து வந்த கடிதம், 1919 சூரிய கிரகணத்தை ஆய்வு செய்வதென்பது பிரிட்டிஷ் அறிவியலுக்கு நல்லது என்றும் அந்த ஆய்வுப் பயணத்தை எடிங்டன் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளை உணர வைத்தது.
  • ஆகவே, மார்ச் 8, 1919-ல் இன்னும் அதிகாரபூர்வமாக போரில் ஐரோப்பா ஈடுபட்டிருக்க, இரண்டு குழுக்களும் லிவர்பூலிலிருந்து நீராவிக் கப்பலில் புறப்பட்டன.
  • சூரியன் சற்று நேரம் இருளடைவதைக் காண்பதற்காக அமேசான், ஆப்பிரிக்கா என்று இந்தக் குழுக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்தன. எடிங்டனும் நார்த்தாம்டன்ஷையரைச் சேர்ந்த கடிகாரம் செய்பவரான எட்வின் காட்டிங்காமும் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் இருப்பதும் போர்ச்சுகலுக்குச் சொந்தமானதுமான பிரின்ஸிப்பி தீவுக்குச் செல்கிறார்கள். ஆண்ட்ரூ கிராமெலினும் சார்லஸ் டேவிட்ஸனும் வடக்கு பிரேசிலில் உள்ள சோப்ராலுக்குச் செல்கின்றனர்.

நியூட்டனா, ஐன்ஸ்டைனா? யார் சரி?

  • மே 29, 1919-ல் நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் 6 நிமிடங்கள் 51 நொடிகள் தன்னைச் செருகிக்கொண்டபோது, அற்புதமான பகல் திடீரென்று இரவான அந்தப் பொழுதில், சூரியனுக்குப் பின்னால் இருந்த விண்மீன்களை எடிங்டனும் அவரது சகாக்களும் படமெடுத்துக்கொண்டனர்.
  • பிரின்சிபியில் சூழல் அவ்வளவு சாதகமாக இல்லை. கிரகணம் அதன் முழுமையை எட்டுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் ஒரு புயல்மழை அடித்து, ஆங்காங்கே இடைவெளி காணப்படும் மேகங்களை விட்டுச்சென்றிருந்தது. சோப்ராலில் புகைப்படத் தகடுகள் சில குவிமையம் விலகி இருப்பதைக் கண்டு வானியலாளர்கள் வருந்தினர். சூரியனின் வெப்பம் கண்ணாடியைச் சமச்சீரற்ற நிலையில் விரியச் செய்திருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஐன்ஸ்டைன் சரியா, நியூட்டன் சரியா என்று தீர்மானிப்பது கடினம்.
  • கண்டாய்வு செய்தவர்கள் வீடு திரும்பியபோது, தாங்கள் எடுத்த புகைப்படங்களுடன் சூரியன் இல்லாதபோது அதே இடத்தில் அந்த விண்மீன்களை எடுத்த புகைப்படங்களை வைத்து விண்மீன் ஒளி வளைந்திருக்கிறதா என்று பார்த்தார்கள்.
  • நவம்பர் 6-ம் தேதி பல மாத வேலைகளுக்குப் பிறகு, அந்த இரண்டு குழுக்களும் இறுதியாகத் தங்கள் முடிவுகளை ராயல் கழகத்திடமும் ராயல் வானியல் கழகத்திடமும் முன்வைக்கத் தயாராகின. லண்டனிலுள்ள பர்லிங்டன் இல்லத்திலுள்ள கிரேட் ஹாலில் திரண்டிருந்த பெரும்பாலான வானியலாளர்களுக்கு என்ன அறிவிப்பு வரப்போகிறது என்பது தெரியாது. ராயல் கழகத்தின் தலைவரும் எலெக்ட்ரானைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசைப் பெற்றவருமான ஜே.ஜே.தாம்ஸன் அந்தக் கூட்டத்துக்குத் தலைமைதாங்கினார்.
  • “அங்கிருந்த ஒட்டுமொத்த சூழலின் நெருக்கியடித்த ஆர்வமும் கிரேக்க நாடகம் ஒன்றைப் போலவே இருந்தது” என்று எழுதினார், அந்த அறையில் நிரம்பியிருந்தவர்களில் ஒருவரான கணிதவியலாளரும் தத்துவவாதியுமான ஆல்ஃப்ரெட் வைட்ஹெட்.

விண்ணகத்தில் ஒளியெல்லாம் வளைகிறது

  • சூரிய கிரகணத்தை எடுத்த அளவுகளில் நிறைய தெளிவின்மைகள் இருந்தன. அங்கு கூடியிருந்த அறிவியலாளர்களில் சிலர் அது குறித்து அவநம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால், அங்கு கூடியிருந்தவர்களில், ஐன்ஸ்டைனின் கோட்பாடு சரியே என்று நம்பியவர்கள் சார்பாக தாம்ஸன் பேசினார். “நியூட்டனின் காலத்திலிருந்து ஈர்ப்புவிசை தொடர்பாகப் பெறப்பட்ட மிக முக்கியமான ஆய்வு முடிவு இது. ஆகவே, நியூட்டனுடன் நெருக்கமான தொடர்புடைய இந்தக் கழகத்தின் கூட்டத்தில் அதை அறிவிப்பதே பொருத்தமாக இருக்கும்” என்றார் தாம்ஸன்.
  • மறுநாள், நவம்பர் 7 அன்று போர்நிறுத்த தினத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாள். ‘டைம்ஸ் ஆஃப் லண்டன்’ இதழின் முதல் பக்கத்தில் முழுவதும் போரைப் பற்றியும் போர் நினைவுகளைப் பற்றியும் செய்திக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. அந்தக் கட்டுரைகளின் வலது பக்கம் ஒரு செய்திக் கட்டுரையில் ஒரு மறுமலர்ச்சியைப் பற்றி வெளியிடப்பட்டிருந்தது. மூன்றடுக்குத் தலைப்புச் செய்தியில் டைம்ஸ் இப்படி எழுதியிருந்தது: “அறிவியலில் புரட்சி/ பிரபஞ்சத்தைப் பற்றிய புதிய கோட்பாடு/ நியூட்டனின் கோட்பாடுகள் தூக்கியெறியப்பட்டன.”
  • இந்தச் செய்தி உலகம் முழுவதும் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியைப் பின்தொடர்ந்து ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழும் நவம்பர் 10 அன்று செய்திக் கட்டுரையை இப்படித் தலைப்புடன் வெளியிட்டிருந்தது: “விண்ணகத்தில் ஒளியெல்லாம் வளைகிறது... ஐன்ஸ்டைனின் கோட்பாடு வெற்றிகொள்கிறது.”
  • பெர்லினில் ஐன்ஸ்டைன் தனது இரண்டாவது மனைவியுடனும் அந்த மனைவிக்குப் பிறந்த இரண்டு பெண்களுடனும் பகிர்ந்துகொண்டிருந்த வீட்டில் கண்விழித்தெழுந்தார். அந்த நகரமே போராலும் போருக்குப் பிந்தைய சூழலாலும் ஏற்பட்ட தட்டுப்பாட்டால் தள்ளாடிக்கொண்டிருந்தது.
  • உணவுக்காகவும் வெப்பத்துக்கான எரிபொருளுக்காகவும் எல்லோரும் அல்லாடிக்கொண்டிருந்தார்கள். ஆகவே, ஐன்ஸ்டைன் தனது காலைப் பொழுதைத் தனது குடும்பத்தின் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்வது குறித்த கவலைகளில் ஆழ்ந்திருப்பார்.
  • ஆனால், அந்தக் காலைப் பொழுதில் அவர் அறிவியலின் முதல் உச்ச நட்சத்திரமாக ஆகியிருந்தார். இந்தப் புகழ் குறித்த பரபரப்பு வெகு விரைவிலேயே அடங்கிவிடும் என்று ஐன்ஸ்டைன் தனது நண்பருக்குக் கடிதம் எழுதினார். அவர் எழுதியது தவறு. அவருடைய பிராபல்யம் வெறும் சில நாட்கள் மட்டுமோ வாரங்கள் மட்டுமோ நீடிக்கவில்லை, அவரது வாழ்நாள் முழுவதும் அதைத் தாண்டியும் நீடித்தது.

ரீங்கரிக்கும் ஈர்ப்பலைகள்

  • ஐன்ஸ்டைன் தனது சார்பியலுக்கான பொதுக் கோட்பாட்டை உருவாக்கியபோது, இந்தப் பிரபஞ்சத்தில் ஒரே ஒரு விண்மீன் மண்டலம் (Galaxy) மட்டுமே இருப்பதாக அறியப்பட்டிருந்தது. தற்போது குறைந்தபட்சம் 10,000 கோடி விண்மீன் மண்டலங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
  • அது மட்டுமல்ல, அவை யாவும் ஒவ்வொரு நொடியும் வேகமாக விரிந்துகொண்டிருக்கின்றன, உப்பிக்கொண்டிருக்கின்றன. கடந்த சில தசாப்தங்களாக வானியலாளர்கள் நாம் தொலைநோக்கியில் பார்க்கக் கிடைப்பதைவிட, இன்னும் அதிகம் இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ இருக்கிறது என்று கருதுகிறார்கள். கரும்பொருள், கரும்சக்தி என்ற கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் 96% ஆக்கிரமித்திருக்கின்றன.
  • காலவெளியில் ஒளியை விழுங்கும் ஈர்ப்புவிசை மிக்க அகோரப் பசி கொண்ட ராட்சசக் கருந்துளைகள், ஒவ்வொரு பெரும் விண்மீன் மண்டலத்தின் நடுவிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஈர்ப்பலைகள் என்று அறியப்படும் கால-வெளியில் ஏற்படும் அலைகள் பிரபஞ்சம் முழுவதும் ரீங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து அர்த்தப்படுத்திக்கொள்ள முயலும் எவரும் ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியல் கோட்பாட்டுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டு கழிந்தும் ஐன்ஸ்டைனின் மகத்தான படைப்பு இந்தப் பிரபஞ்சத்தின் பிறப்பு, வாழ்க்கை குறித்துப் புதிய, எதிர்பாராத சாளரங்களைத் திறந்துகொண்டேதான் இருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (27-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories