TNPSC Thervupettagam

அறிவியல் மனப்பான்மை மேம்பட வேண்டும்

February 28 , 2024 146 days 179 0
  • சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜவாஹர்லால் நேரு, நாட்டின் வளமான எதிர்காலத்துக்கு அறிவியலை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி தேவை என நம்பினார். அதன் அடிப்படையில் ஐஐடி, எய்ம்ஸ் முதலான பல்வேறு உயர் கல்வி, ஆராய்ச்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  • இத்தகைய முன்னெடுப்புகளின் ஓர் அங்கமாக, 1958இல் நேருவின் அரசாங்கம், அறிவியல் கொள்கைத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாட்டின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், அறிவியலைப் பெரிய அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அந்தக் கொள்கையின் நோக்கமாக முன்வைக்கப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக, 1975இல் அரசமைப்பின் 51ஏ பிரிவில் சேர்க்கப்பட்ட அடிப்படைக் கடமைகளில் 8ஆவதாக, ‘விஞ்ஞான உணர்வு, மனிதநேயம், விசாரணை-சீர்திருத்த உணர்வு ஆகியவற்றைப் பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை’ என்பது இடம்பெற்றது. அறிவியல் மனப்பான்மையை அடிப்படைக் கடமையாக வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு வளர்ந்துவந்த இந்திய அறிவியல், இன்று வந்தடைந்திருக்கும் இடம் எது என்பது ஆழமான ஆய்வுக்கு உரியது.
  • இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள், நாளைய தொழில்நுட்பங்களாக மாறி, கடைக்கோடி மனிதர்களின் பயன்பாடாக மாறக்கூடியவை. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு உதவிய அனைத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள்தான். கல்வியின் அடிப்படை நோக்கமே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுவதும், அறிவியல் மனோபாவத்தை உருவாக்க வழிசெய்வதும்தான். எனினும், நம்முடைய கல்வியின் நிலை இன்றைக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறதா என்கிற கேள்வி முக்கியமானது.
  • அறிவியல்-தொழில்நுட்பத்தின் மேம்பாடு நாளுக்கு நாள் அதன் எல்லைகளை விரித்துக்கொண்டே செல்கிறது. அவற்றை நேரடியாகப் பயன்கொள்ளும் அதே நேரத்தில் மூடநம்பிக்கைகள், தவறான கருதுகோள்கள் எனச் சமூகக் கேடுகள் மக்களிடையே தீவிரமாக ஆழப்பட்டு வருகின்றன. அவற்றைக் களைந்து மக்களை நெறிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளவர்களும் அதில் மூழ்கித் திளைப்பது ஆரோக்கியமானதல்ல.
  • கடந்த நூறு ஆண்டுகளில், உலகளவில் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் இந்தியாவில் தோன்றியுள்ளனர்; அவர்களில் முதன்மையானவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். உண்மையான அறிவியலாளராக, கணிதமேதையாக ராயல் கழகத்துக்குத் தேர்வான முதல் இந்தியர் சீனிவாச ராமானுஜன். சி.வி.ராமன், சுப்ரமணியன் சந்திரசேகர் உள்ளிட்ட பலருக்கும் அது ஊக்கமாக அமைந்தது.
  • உலகளவிலான மிகச் சிறந்த அறிவியலாளர்களைத் தமிழ்நாடு தந்திருக்கிறது. ஆனால், அந்தப் பெருமையைக் கொண்டு நாம் எதைச் சாதித்தோம், அவர்கள் விதைத்தவற்றை நாம் எப்படி வளர்த்தெடுத்திருக்கிறோம் என விடையில்லாக் கேள்விகள் பல நமக்கு முன்னே நிற்கின்றன.
  • ‘போலிச் சாமியார்களின் அட்டகாசங்கள், சோதிடப் பரிகார அவலங்கள், வாஸ்து முதல் நரபலிவரை நடந்தேறும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல்–சமூகச் சிந்தனை மலர்ச்சி இன்றைய தேவை’ என அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணா தலைமையில் பி.என்.ஹங்கர், பி.எம்.பார்கவா ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு 1981இல் ‘இந்திய அறிவியல் மனப்பான்மை அறிக்கை’யில் குறிப்பிட்டது; அதன் பிறகான இந்த நாற்பது ஆண்டுகளில் அத்தகைய சிந்தனை மலர்ச்சி நிகழவே இல்லை என்பதையே இன்றும் தொடரும் அத்தகைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
  • அறிவியல் மாநாடுகளிலேயே அறிவியலுக்கு மாறான, அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத விஷயங்கள் முன்வைக்கப்பட்டதையும் கடந்த சில ஆண்டுகளாகப் பார்க்க முடிகிறது. அறிவியல் என்பதே சாத்தியமாகும் விஷயங்களை அங்கீகரிப்பதையும், சாத்தியமற்றவற்றைப் புறந்தள்ளுவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான். எனவே, மேற்கண்ட அவல நிலை மாற அனைவரும் ஒன்றிணைந்து உழைத்தாக வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories