TNPSC Thervupettagam

அறி​வியல் விருதுகளிலுமா அரசியல்?

October 10 , 2024 98 days 131 0

அறி​வியல் விருதுகளிலுமா அரசியல்?

  • இந்தியாவின் தலைசிறந்த அறிவிய​லா​ளர்​களில் ஒருவரான சாந்தி ஸ்வரூப் பட்நாகரைப் பற்றி அறிந்​திருக்​கிறீர்களா? இந்தியா முழுவதும் 29 இடங்களில் அடிப்படை அறிவியலில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக்​கூடங்களை உருவாக்கிக் கொடுத்த பெருமைக்​குரியவர் சாந்தி ஸ்வரூப்.
  • 1930களில் இந்தியாவின் இயற்கை வளங்களைப் புதிய தொழில் வளர்ச்​சிக்குத் தேவையான ஆராய்ச்சி அடிப்​படைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து சி.வி.ராமன், ஜே.சி.கோஷ், தென்னிந்​தியத் தொழில​திபர் ஆர்க்காடு ராமசாமி போன்றோர் அறிவியல் ஆராய்ச்​சிக்கான ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்​களுக்கு அழுத்தம் கொடுத்​தனர்.
  • இதன் அடிப்​படை​யில், உலகளவில் ‘நேச்சர்’ ஆய்விதழின் ஆசிரியராக இருந்த சர் ரிச்சர்ட் கிரிகரி பிரிட்டிஷ் அரசாங்​கத்தின் அதிகாரபூர்வமான அறிவியல் ஆய்வுக்​கூடங்கள் அமைக்கும் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்​கப்​பட்​டார். ஒரு பிரித்​தானியர் இந்தியாவின் அறிவியல் ஆய்வுக்​கூடங்களை நிறுவுவதில் எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுவார் என்கிற கேள்வியின் அடிப்​படை​யில், அதற்காகத் தலைசிறந்த ஓர் அறிஞரை இந்தியா​விலேயே தேர்வுசெய்யக் கட்டாயப்​படுத்​தப்​பட்டது. அப்படி இந்தியா​வுக்​கென்று கிடைத்த மாமனிதர்தான் சாந்தி ஸ்வரூப்.
  • வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் உறுப்​பின​ராகவும் வணிகவியல் தொடர்பான நிபுணத்துவக் குழுக்​களிலும் இடம்பெற்றிருந்த ஆர்க்காடு ராமசாமி, இரண்டாம் உலகப்​போரின் தொடக்​கத்தில் இந்தியாவில் அறிவியல் - தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research – CSIR) என்னும் அமைப்பை உருவாக்கு​வதற்குப் பெரும் அழுத்தம் கொடுத்​தார். அந்த நாள்களிலேயே ஆண்டுக்கு ரூ.10,00,000 பணம் ஒதுக்கு​வதற்குக் காரணமாக அமைந்​தார்.
  • சாந்தி ஸ்வரூப் முதலில் ஜாம்ஷெட்​பூரில் தேசிய உலோகவியல் ஆய்வகத்தைத் தொடங்​கினார். விடுதலைக்குப் பிறகு, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முழு ஆதரவோடு புணேயில் ஒரு வேதியியல் ஆய்வகமும் அதற்கு அடுத்​தடுத்த ஆண்டு​களில் 15 நிறுவனங்​களும் நாடு முழுவதும் உருவாக்​கப்​பட்டன (தற்போது இந்தியா முழுவதும் 39 ஆய்வுக்​கூடங்களை சிஎஸ்ஐஆர் நடத்திவரு​கிறது). சாந்தி ஸ்வரூப் 1955 ஆம் ஆண்டு காலமானார்.
  • இந்தியாவின் தலைசிறந்த கண்டு​பிடிப்புகள் உருவாவதை ஊக்கப்​படுத்த நேரு அரசு, 1958ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பெயரில் அறிவியல் விருதுகள் வழங்கு​வதற்குப் பரிந்​துரைத்தது. உயிரியல், வேதியியல், புவியியல், வளிமண்​டல​வியல், பெருங்கடல் இயல் என்று 27 துறைகளில் ரூ.5,00,000 ரொக்கப் பணமும் மாதத்​துக்கு ரூ.15,000 உதவித்​தொகையும் (65 வயது வரை) வழங்கு​வதற்காக விருதுகள் முன்மொழியப்​பட்டன.
  • ஒவ்வொரு பிரிவிலும் குறைந்​த​பட்சம் இரண்டு நபர்களுக்கு விருது வழங்க வேண்டும்; விருது பெறுபவர் மனித அறிவு மற்றும் முன்னேற்​றத்​துக்கு அடிப்​படையான கண்டு​பிடிப்பு​களைக் கண்டு​பிடித்​திருப்​பதோடு, மூடநம்​பிக்கைகளுக்கு அப்பாற்​பட்​டவராக இருக்க வேண்டும் என்கிற ஒரு சிறப்பு விதி ஆரம்பத்​திலேயே சேர்க்​கப்​பட்டது. கனடா, ஆஸ்திரேலியா உள்படப் பல நாடுகள் இந்த முன்னு​தா​ரணத்தை எடுத்​துக்​கொண்டு, தங்கள் நாடுகளில் இதே போன்ற விருதுகளை அறிவிக்கும் அளவுக்கு இந்த விருது உலகளாவிய புகழைப் பெற்றிருந்தது.

பெயர் மாற்றப்பட்ட அறிவியல் விருதுகள்:

  • 2023ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவியல் விருதுகள் அனைத்​தையும் ரத்து செய்தது. அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் போன்ற​வர்​களுக்கு வழங்கப்​படும் விருதுகள் மாற்றப்பட வேண்டும் என்று அறிவித்தது. விருது வழங்கு​வ​தில், அதிகாரிகள் அளவிலும் உயர்மட்​டத்​திலும் அரசியல் புகுந்​து​விட்டது; வெளிப்​படைத்​தன்​மை​யுடன் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறிய மத்திய அரசு, இனி விருதுகள் ‘ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்​கார்’ என்று அழைக்​கப்​படும் என்று அறிவித்தது.
  • பத்மஸ்ரீ விருதைப் போல விஞ்ஞான் ஸ்ரீ விருது, பாரத ரத்னா விருதைப் போல விஞ்ஞான ரத்னா விருது என விருதுகள் பிரிக்​கப்​பட்டன. ‘இந்திய அறிவியல் ஆய்வகங்​களின் பிதாமகன்’ என்று அழைக்​கப்பட்ட சாந்தி ஸ்வரூப்பின் பெயர் கைவிடப்​பட்டது.
  • ஆனாலும் இந்த விருதுக்கான அறிவிய​லா​ளர்​களைத் தேர்வுசெய்​வதில் அரசு ஒருபோதும் தலையிடாது என்றும், அதற்கென்று தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில் ஓர் அறிவிய​லா​ளர்கள் குழு அமைக்​கப்​படும் என்றும், அந்தக் குழு முழுமையாக ஆய்வுசெய்து எவ்வகையான அதிகாரத் தலையீடும் இன்றி விருதாளர்​களைத் தேர்வுசெய்து அறிவிக்கும் என்றும் அரசு தெரிவித்தது.

ஒரே இரவில் மாற்றப்பட்ட பெயர்கள்:

  • ஆனால், இரண்டு ஆண்டு​களுக்கான விருதுகள் அறிவிக்​கப்​பட​வில்லை. இந்நிலை​யில், கடந்த ஆகஸ்ட் 7இல் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது பெறுவோரின் முதல் பட்டியல் வெளியிடப்​பட்டது. தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தேர்வுசெய்து கொடுத்த பட்டியலில் இடம்பெற்றிருந்த பலரது பெயர்கள் மறுநாள் காலையில் காணாமல் போயிருந்தன.
  • இது குறித்துப் பத்திரி​கை​யாளர்கள் கேள்வி எழுப்​பிய​போது, ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுக்காக இணையத்தில் அறிவிக்​கப்​பட்​டிருந்த விதிமுறைகள் எதுவும் மீறப்​பட​வில்லை என்றும், தேவைப்​பட்டால் விதிமுறைகளை வாசித்துக் கொள்ளு​மாறும் தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்​தார்.
  • இரவோடு இரவாக விதிகள் மாற்றப்​பட்​டிருந்தது பின்னர் தெரிய​வந்தது. முன்பிருந்த விதிகளின்படி தேசிய முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையிலான குழு ‘விரு​தாளர்​களைத் தேர்வுசெய்​யும்’ என்று இருந்ததை ‘விரு​தாளர்​களைப் பரிந்​துரைக்​கும்’ என்று மாற்றப்​பட்​டிருந்தது. அமைச்​சர​வையின் முடிவு இறுதி​யானது என்கிற ஒரு பிரிவும் சேர்க்​கப்​பட்​டிருந்தது.

விருது மறுக்​கப்பட்ட மாமனிதர்கள்:

  • முந்தைய விருதுகளில் இருந்த அரசியல் முழுவதும் நீக்கப்​பட்டு, கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட விருதுகள் நிறுத்​திவைக்​கப்​பட்டு, இந்த ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்ளன என அரசு சார்பில் அறிவிக்​கப்​பட்​டிருந்​தாலும் இதில் வேறொரு பிரச்சினை இருப்பது தெரிய​வந்​திருக்​கிறது. இந்த ஆண்டின் புதிய விருதுப் பரிந்​துரையி​லிருந்து நீக்கப்பட்ட பெயர்கள் அனைத்​துக்கும் ஒரு பொதுத்​தன்மை இருக்​கிறது. இவர்கள் அனைவருமே, அறிவியல் துறை சார்ந்து மத்திய அரசினுடைய போக்குகளை வெளிப்​படையாக விமர்​சித்தவர்​களாக இருப்​பவர்கள் என்பதுதான் அது!
  • உதாரணமாக, கொல்கத்தா இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியரும் இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞருமான அயன் பானர்​ஜியின் பெயர் நீக்கப்​பட்டது. பழமைவாத நம்​பிக்கைகளுக்கு எதிராக வீதி நாடகங்கள் நடத்து​கின்ற ஓர் அமைப்பை நடத்திவருபவர் இவர். இன்னொரு உதாரணம் - கடல் ஆய்வாளர் அதிதி பந்த். இவர் நரேந்திர தபோல்கர் நடத்திய அமைப்பில் இணைந்து செயல்​பட்​டவர்.

அறிவியல் மீதான தாக்குதல்கள்:

  • எப்போதெல்லாம் அறிவியலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்​கப்​படு​கின்றனவோ அப்போதெல்லாம் தார்மிகரீ​தி​யிலும் ஜனநாயக முறையிலும் அதை விமர்​சித்து அரசுக்குக் கடிதம் அனுப்புவதை அறிவிய​லா​ளர்கள் வழக்க​மாகக் கொண்டுள்​ளனர். பொதுவெளி​யிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்​து​வரு​கின்​றனர்.
  • உதாரணமாக, தற்கால இயந்திரக் கற்றல் எனும் செயற்கை நுண்ணறி​வுக்கான கற்கும் முறையில் எளிதான ஒரு மொழி சம்ஸ்​கிருதம்தான் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்த​போது, அதை அறிவிய​லா​ளர்கள் விமர்​சித்தனர்.
  • இந்த அறிவிய​லா​ளர்கள், ‘பொது அறிவியலின் நன்மைக்காக இந்திய இறையாண்​மையைக் கட்டிக்​காப்​போம்’ என்கிற கடமை உணர்வோடு செயல்​படு​பவர்கள். அவர்களின் பெயர்கள் விருதுப் பட்டியலில் இருந்து நீக்கப்​பட்​டிருப்பது இந்திய அறிவியலுக்குப் பின்னடைவையே ஏற்படுத்​தும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories