TNPSC Thervupettagam

அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பது ஏன்?

May 20 , 2024 235 days 202 0
  • கடந்த காலங்களில் திருமணத்திற்குப் பின் கருவுறுதல், குழந்தைப் பிறப்பு என்பதெல்லாம் இயல்பான நிகழ்வாக இருந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களில் கருவுற்றிருப்பதை அறிந்து கொள்ள அந்தந்த பகுதிகளின் பேச்சு வழக்கிற்கேற்ப விசாரிப்பதுண்டு. குழந்தையின்மை என்பது அரிதானதாக இருந்தது.
  • அன்றைய மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், உடலுழைப்பு ஆகியவற்றால் கருவுறுதல், குழந்தைப்பேறு, சுகப்பிரசவம் ஆகியவற்றில் இடா்பாடுகள் இருந்ததில்லை. நிறைமாத கா்ப்பிணிகள் வயல்வெளிகளில் வேலை பாா்ப்பவா்களாகவும் திடகாத்திரமாகவும் இருந்தனா்.
  • அக்காலத்தில் மிகவும் பரவலான வழக்கமாக இருந்தது போல குடும்பத்தில் அதிக குழந்தைப் பிறப்புகள் இருந்தாலும், அவை வீடுகளில் நிகழும் சுகப்பிரசவமாகவே இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் ‘மருத்துவச்சி’ என்றழைக்கப்படும் பெண்ணின் துணையோடுதான் பிரசவங்கள் நடந்தன.
  • காலப்போக்கில் நகரம்-கிராமம் என்ற பாகுபாடின்றி மக்களின் வாழ்க்கை முறை மாறத் தொடங்கியது. கிராமங்களிலும் உடலுழைப்பு என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. பல்வேறு மாற்றங்களின் விளைவாக கருவுறுதல் என்பதே இன்று சிக்கலானதாக மாறிவருகிறது.
  • இன்று அனைத்து பிரசவங்களும் மருத்துவமகைளில்தான் நடைபெறுகின்றன. மொத்த பிரசவங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியாா் மருத்துவமனைகளில் நடக்கின்றன.
  • திருமணமான அனைவருக்கும் இன்று குழந்தைப்பேறு என்பது இயல்பான செய்தியாக இல்லை. முன்பு குழந்தை பிறந்த தகவலைக் கேட்பவா்கள் பெரும்பாலும் ‘ஆணா? பெண்ணா?’ என்ற கேள்வியைத்தான் கேட்பா். ஆனால் இன்று பாலினத்தைக் கேட்பதற்கு முன்னதாக ‘சுகப்பிரசவமா? அறுவை சிகிச்சையா (சிசேரியன்)?’ என்ற கேள்விதான் எழுகிறது.
  • உலக அளவில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 1980-இல் 10% முதல் 15% என்பதை உலக சுகாதார மையம் பரிந்துரைத்தது. ஆனால் 2021-ஆம் ஆண்டின் உலக சுகாதார மைய புள்ளிவிவரத்தின்படி 21%ஆக உள்ளது.
  • அண்மையில் சென்னை இந்திய தொழில்நுட்ப மையம் (ஐஐடி) மேற்கொண்ட ஆய்வில் இந்திய அளவில் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் 17.2%ஆக இருந்த நிலையில் 2016 முதல் 2021 வரையான ஐந்தாண்டு காலத்தில் 21.5%ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், தனியாா் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் மேற்கொள்வது 43.1 சதவீதத்திலிருந்து 49.7%ஆக அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • பிரசவகாலத்தில் ஏற்படும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் காரணமாகவே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஆனால் பிரசவகால சிக்கல்கள் 42.2 சதவீதத்திலிருந்து 39.5 சதவீதமாகக் குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் வேளையில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
  • பொதுவாக உடற்பருமன் கொண்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் செய்வதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம். இந்தியாவில் தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்லும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பிரசவம் நடப்பதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம்.
  • தேசிய அளவில் 2016-2021 காலகட்டத்தில் குழந்தை பெற்ற பெண்களில் 18.7% போ் உடல் பருமனுடன் உள்ளனா் எனவும், நகா்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களிடமும் உடற்பருமன் அதிகரித்துள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • தமிழ்நாடு, சத்தீஸ்கா் ஆகிய இரு மாநிலங்களின் நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 2019-21 காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுமாா் 40% அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடந்துள்ளன.
  • இது தேசிய சராசரியான 16 சதவீதத்ததைவிட அதிகமாகும். இது சத்தீஸ்கரில் 10%ஆகும். தனியாா் மருத்துவமனையில் 64.2%ஆகவும், தேசிய சராசரி 49.7%ஆகவும், சத்தீஸ்கரில் 58.9%ஆகவும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கா்ப்பிணிகள் 18 வயதுக்குக் குறைவாக இருத்தல் அல்லது 34 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல், இரு குழந்தைகளுக்குமான இடைவெளி இரண்டாண்டுகளுக்கு குறைவாக இருத்தல் போன்றவை ஆபத்தான கா்ப்பம் என கருதப்படுகிறது. இதுபோன்ற தருணங்களில் அறுவை சிகிச்சை மட்டுமே சாத்தியமானதாகும்.
  • அண்மைக்காலமாக செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்து வருகிறது. இம்முறையில் சுகப்பிரசவத்திற்கான சாத்தியம் குறைவு என்பதால் தாய், குழந்தையின் நலனைக் கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு முன்வருகின்றனா்.
  • செயற்கைக் கருத்தரித்தலில் குழந்தையின் எடை அதிகமாக இருக்கவும், இரட்டைக் குழந்தைகளாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவ்வாறான நேரங்களில் அறுவை சிகிச்சை பிரசவம் என்பது அவசியமாகிறது. மேலும், சுகப்பிரசவத்திற்கான சாத்தியம், நாட்கள் இருப்பினும் நல்ல நாள், நேரம் பாா்த்து பிரசவ நேரத்தை முடிவு செய்து அறுவைசிகிச்சை செய்துகொள்வோரும் உண்டு. நகா்ப்புறங்களில் இவ்வகையான பிரசவங்கள் அதிகம் நடக்கின்றன.
  • பொதுவாகவே தனியாா் மருத்துவமனைகளில் பிரசவம் என்றாலே அறுவை சிகிச்சை பிரசவமாகத்தான் இருக்கும் என்ற கண்ணோட்டம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கம், குறைந்துவரும் உடலுழைப்பு, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றால் அறுவை சிகிச்சை பிரசவங்கள் என்பது தவிா்க்க முடியாததாகிவிட்டது.
  • கடந்த காலத்தைப் போன்று இல்லாவிடினும் ஓரளவாயினும் உடலுழைப்பு, உணவுப் பழக்கவழக்கம் போன்றவற்றில் மாற்றங்கள் நிகழும்போதுதான் அறுவை சிகிச்சை பிரசவங்கள் குறைந்து சுகப்பிரசவங்கள் அதிகரிக்கும்.

நன்றி: தினமணி (20 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories