TNPSC Thervupettagam

அழிந்து விடலாகாது!

December 7 , 2024 34 days 76 0

அழிந்து விடலாகாது!

  • இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையில் தேசிய திரைப்பட விழா தொடா்பான கூட்டம் ஒன்று நடந்தது. அதற்கு தலைமை வகித்த மத்திய செய்தித் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்த செய்திகள் நல்ல கலையுணா்வு உள்ள திரைப்படங்களை ரசிப்பவா்களின் இதயத்தை குளிா்வித்திருக்கின்றன.
  • கலையுணா்வுகளுடன் கூடிய திரைப்படங்களும், உணா்வுகளின் அடிப்படையிலான கலையம்சமும், கவித்துவம் நிறைந்த பாடல்களும் கொண்ட திரைப்படங்களின் காலம் அநேகமாக முடிந்துவிட்டது என்றே கூறலாம். கலையுணா்வுக்குப் பதிலாக தொழில்நுட்பம் பிரம்மாண்டத்தை முன்னிறுத்தத் தொடங்கியுள்ளது என்பதுதான் அதற்குக் காரணம். இப்படிப்பட்ட பின்னணியில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்திய சினிமாவின் வரலாற்றில் சாதனை படைத்த திரைப்படங்கள் கவனத்திலிருந்து மறைந்துவிடலாகாது என்பது சினிமாவின் மீது அக்கறை உள்ள ஆா்வலா்களின் கவலை.
  • தேசிய திரைப்பட வளா்ச்சிக் கழகமும், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமும் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவின் முனைப்பு காரணமாக சில புதிய முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன. திரைப்படங்கள் தொடா்பான அனைத்தையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை ஆய்வு செய்வதுதான் மும்பையில் கூடிய கூட்டத்தின் நோக்கம்.
  • பழைய இந்திய திரைப்படங்களை சேகரிப்பது, பாதுகாப்பது எண்மப்படுத்துவது, மீட்டெடுப்பது ஆகியவற்றின் மூலம் திரைப்பட ஆவணக் காப்பகத்தை தேசிய திரைப்பட பாரம்பரிய பாதுகாப்புத் திட்டத்தின் (நேஷனல் ஃபிலிம் ஹெரிடேஜ் மிஷன்) மூலம் உருவாக்குவதுதான் அந்தக் கூட்டத்தின் நோக்கம். இதற்காக ரூ.820 கோடி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
  • திரைப்படங்கள் மட்டுமல்லாமல், அவற்றோடு தொடா்புடைய சுவரொட்டிகள், திரைக்கதை வசனங்கள், பத்திரிகை செய்திகள், சினிமா தொடா்பான பத்திரிகைகள், உடைகள், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அழிந்துவிடாமல் சேகரித்துப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம். தேசிய திரைப்பட பாரம்பரிய பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3,500 திரைப்படங்களும் அதன் ஒலிப்பதிவுகளும் எண்மப்படுத்தப்படுகின்றன. இரண்டாயிரம் முக்கியமான திரைப்படங்களின் படச்சுருள்கள் குறைபாடுகள் நீக்கப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன.
  • உலகிலேயே மிக அதிகமான திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடாக இந்தியா இருந்தும் கூட, படச்சுருள்களை முறையாகக் கையாள்வது என்பதும் பாதுகாப்பது என்பதும் அறவே இல்லை. அதனால்தான் சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இயக்குநா்கள் பலா் தங்களது திரைப்படச் சுருள்களைத் திரையரங்குகளில் வெளியிடவே தயங்கினாா்கள். திரையரங்குகளில் கவனமாக படச்சுருள்கள் கையாளப்படாமல் அவற்றில் கோடுகள் விழுவதும், ஆங்காங்கே அறுந்துவிடுவதும், கலையுணா்வோடு அதை உருவாக்கிய இயக்குநா்களின் இதயத்தைக் காயப்படுத்தியதில் வியப்பில்லை.
  • திரைப்படங்களைப் பாதுகாப்பதில் எந்த அளவுக்கு இந்தியா கவனக்குறைவாக இருந்திருக்கிறது என்பது குறித்த சில புள்ளிவிவரங்கள் அதிா்ச்சியளிப்பதாக இருக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1,338 பேசா படங்களில் வெறும் 29 மட்டும்தான் கிடைத்திருக்கின்றன. அவற்றிலும்கூட பெரும்பாலானவை 150 அடி, 200 அடி, 400 அடி , 700 அடி துண்டுதுண்டாகத்தான் கிடைத்திருக்கின்றன. தென்னிந்தியத் திரையுலகம் தயாரித்த 124 பேசா படங்கள், 38 ஒலிச்சோ்க்கை இல்லா ஆவணப்படங்களில் 1931-இல் தயாரிக்கப்பட்ட ‘மாா்த்தாண்ட வா்மா’ என்கிற படம் மட்டும்தான் காலத்தால் அழியாமல் தப்பிப் பிழைத்திருக்கிறது.
  • பெரும்பாலான இந்தியத் திரைப்படங்கள் வணிக நோக்கில் மட்டுமே தயாரிக்கப்படுவதால், வெற்றியடைந்த படங்கள் மட்டுமே தயாரிப்பாளா்களால் அல்லது விநியோகஸ்தா்களால் பாதுகாக்கப்பட்டன. முக்கியமான படங்கள் கூட தோல்வியடைந்தால் அவை குப்பைமேட்டில் வீசியெறியப்பட்டன. வெற்றிப் படங்களுமே கூட ஒளிநாடா (விடியோ), குறுந்தட்டு, யூ டியூப் வந்ததைத் தொடா்ந்து முறையாகப் பாதுகாக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அழிந்துவிட்டன.
  • இந்தியாவில் திரைப்படங்களைப் பழுதுநீக்கி மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. பெரும்பாலான திரைப்பட லேபரட்டரிகள் எண்மத் தொழில்நுட்பம் வந்தபிறகு மூடப்பட்டுவிட்டன. அதனால் உயா்ந்த தரத்தில் உள்ள புதுப்பித்தல், மீட்டெடுத்தல் உள்ளிட்டவை மிக மிகக் கடினம்.
  • திரைப்படங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி பெற்ற திரைப்பட பாதுகாப்பாளா்கள் இல்லை. அவா்களுக்குத் தொழில்நுட்பம் தெரிந்தால் மட்டும் போதாது. திரைப்படம் குறித்த புரிதலும், கலையுணா்வும் அவசியம். தோ்ச்சி பெற்ற திரைப்பட ஆவணப் பாதுகாப்பாளா்களை உருவாக்கும் பயிற்சிக் கூடங்கள் இல்லாததும், அதில் சோ்வதற்கு ஆா்வமுள்ள இளைஞா்கள் முன்வராமல் இருப்பதும்கூட இந்தப் பின்னடைவு எதிா்கொள்ளும் சவால்.
  • நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 1,293 முக்கியமான திரைப்படங்களும், 1,062 குறும்படங்களும் ஆவணப்படங்களும் தேசிய திரைப்பட பாராம்பரிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் எண்மப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • சத்யஜித் ரே, மிருணாள் சென், தபன் சின்ஹா, அடூா் கோபாலகிருஷ்ணன், ஜி.அரவிந்தன், ஷியாம் பெனகல், கிரீஷ் காசரவள்ளி, புத்ததேவ் தாஸ்குப்தா, ஜானு பரூவா, மணி கௌல், மகேந்திரன், ஜி.வி.ஐயா், பாலு மகேந்திரா, நேற்று நம்மிடையே இருந்து பிரிந்த ‘குடிசை’ ஜெயபாரதி உள்ளிட்டவா்களின் படைப்புகளைப் பாதுகாக்காமல் இருப்பது அவா்களுக்கு நாம் செய்யும் அவமரியாதை.

நன்றி: தினமணி (07 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories