TNPSC Thervupettagam

அழியும் ஆராய்ச்சிக் கல்வி

May 1 , 2024 256 days 226 0
  • முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான புதியவழிகாட்டி நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கிறது. மார்ச் 13 அன்று நடைபெற்ற யுஜிசியின் 578 ஆவது கூட்டத்தில் இது இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • 2024-25 கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் என்றும், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் மாதங்களில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency - NTA)நடத்தப்படும் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது. இந்த முடிவு தேசியக் கல்விக் கொள்கையின் அங்கமாக இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

தரம் உயருமா?

  • தேசியத் தகுதித் தேர்வில் (NET) வெற்றிபெறும் மாணவர்களை மூன்று பிரிவுகளாக யுஜிசி பிரித்துள்ளது: 1. முனைவர் பட்ட ஆய்வுக்குச் சேர்வதோடு உதவித்தொகையையும் (JRF) பெறும் அவர்கள், நேரடியாக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படவும் தகுதி வாய்ந்தவர்கள்; 2. முனைவர் பட்ட ஆய்வில் சேர்வதற்குத் தகுதியானவர்கள், ஆனால் அவர்களுக்கு ஜேஆர்எஃப் உதவித்தொகை கிடைக்காது.
  • அவர்களும் நேரடியாக உதவிப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படலாம்; 3. முனைவர் பட்ட ஆய்வில் சேரத் தகுதி வாய்ந்தவர்கள், ஆனால் அவர்களுக்கு ஜேஆர்எஃப் உதவித்தொகையோ உதவிப் பேராசிரியர் பதவிக்கு நியமனம் செய்யப்படும் தகுதியோ கிடையாது.
  • ‘தற்போது முனைவர் பட்ட ஆய்வு மாணவராகச் சேர விரும்பும் மாணவர்கள் அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டி உள்ளது. அதற்காக விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் வேண்டியுள்ளது. இது மாணவர்களுக்குத் தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, தேசிய அளவில் ஒரே தகுதித் தேர்வு என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது’ என்று யுஜிசி கூறியுள்ளது.
  • மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இது ஒரு வரவேற்கத்தக்க முடிவாகவே தோன்றும். ஆனால், உலக அளவில் பின்பற்றப்படும் நடைமுறைகளோடு ஒப்பிட்டால், இது முனைவர் பட்ட ஆய்வுகளின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிடும் என்ற உண்மை தெரியவரும்.

தரத்தின் நிலை:

  • முனைவர் பட்ட ஆய்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு முன் யுஜிசி ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 2019 ஜூலையில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த அறிக்கையில், முனைவர் பட்ட ஆய்வுகளின் தரம் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் பற்றியும், தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • ‘முனைவர் பட்ட ஆய்வுகளுக்குச் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருப்பது முதல் காரணம். 2010இல் 77,798 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சேர்ந்திருந்தனர். அந்த எண்ணிக்கை 2017இல் 1,61,412ஆக உயர்ந்துவிட்டது. கல்லூரிப் பேராசிரியர் பணிநியமனங்களுக்கும், பதவி உயர்வுகளுக்கும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டதுதான் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம்’ என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
  • ‘அதிக எண்ணிக்கையில் ஆய்வு மாணவர்கள் சேரும்போது, அவர்களுக்கு முறையாக வழிகாட்டுதலைக் கொடுப்பதற்குத் தகுதி வாய்ந்த நெறியாளர்கள் இல்லை. அது மட்டுமின்றி, அதற்கான நிதி வசதியோ கட்டமைப்பு வசதியோ கல்லூரிகளில் இருப்பதில்லை’ என அந்த அறிக்கை கூறியது.
  • மேலும், ‘தற்போது இருக்கும் பல்கலைக்கழக நடைமுறையானது ஆய்வைவிடவும் பாடம் நடத்துவதற்கே முன்னுரிமை அளிக்கிறது; ஆய்வுகளும் பல்துறை சார்ந்தவையாக இருப்பதில்லை. சேர்க்கைக்கான விதிமுறைகளும் கடுமையானவையாக இருக்கின்றன.
  • ஆய்வு மாணவர்களைச் சரியாக நெறிப்படுத்தி வழிகாட்டும் பண்பு மூத்த பேராசிரியர்களிடம் குறைந்துவிட்டது. ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகள், ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தளிப்பதற்கான கருத்தரங்கங்கள் / மாநாடுகள்முதலானவை தரமாக இருப்பதில்லை. போலியாக அவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் கல்லூரியில் ஆசிரியர் பணிக்குப் போக வேண்டும் என்பதற்காகவே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்கின்றனர்.
  • இதனால், ஆய்வின் தரம் சிறிதும் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு மொழித் திறனோ, மற்றவர்களோடு தொடர்புகொள்வதற்கான திறனோ மிகவும் குறைவாக உள்ளது’ என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்தக் குறைபாடுகளைக் களைவதற்கு 10 பரிந்துரைகளை அது முன்வைத்திருந்தது:

  • ‘வகுப்பறைகளில் கற்பித்தலின்போது அறிவார்ந்த விஷயங்களைப் பேசி ஆர்வத்தைத் தூண்டுவது; பட்டப்படிப்பு மட்டத்தில் இருந்தே திறன் மேம்பாட்டுக்கான அடிப்படைகளை உருவாக்குவது; எழுதும் திறன் குறித்த குறைபாட்டைப் போக்க பயிற்சித் திட்டங்களை ஒழுங்கமைப்பது; சமூக அறிவியல் கல்வியில் கணிசமாக அதிகரித்துவரும் உள்ளூர் மயமாக்கலைக் கருத்தில் கொண்டு, அறிவார்ந்த, ஆர்வத்தைத் தூண்டுகிற, ஆராய்ச்சி நுட்பங்களை வழங்கக்கூடிய பாடப் புத்தகங்களை மாநில மொழிகளில் உருவாக்குவது; இந்த நோக்கத்துக்காக ஒரு வலுவான மொழிபெயர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது’ போன்றவை அதில் இடம்பெற்றன. ஆனால், இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக யுஜிசி ஆர்வம் காட்டவில்லை. அதற்கு மாறாக, ஆராய்ச்சித் திறனை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கையை இப்போது எடுத்திருக்கிறது.

என்ன பிரச்சினை?

  • யுஜிசியால் அறிமுகப்படுத்தப்படும் தேசியத் தகுதித் தேர்வு ஒரு வினாவுக்குப் பல விடைகளைக் கொடுத்து அவற்றில் ஏதேனும் ஒன்றை ‘டிக்’ செய்யும் முறையைக் (MCQs) கொண்டதாகும். இதில் ஒரு மாணவரின் மொழி / ஆய்வுத் திறன்களைக் கண்டறிய முடியாது. ஆய்வுத் திறனை அடிப்படையாகக் கொண்ட முனைவர் பட்ட ஆய்வுக்கு மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையின் மூலம் வெற்றி பெறுகிறவர்கள் பயன்பட மாட்டார்கள். விரிவான கட்டுரைகளில்தான் ஒரு மாணவரின் ஆய்வுத் திறன் வெளிப்படும்.
  • ஐஏஎஸ், ஐபிஎஸ் முதலான பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள்கூட முதற்கட்டத் தேர்வு, இரண்டாம் கட்டத் தேர்வு, பின்னர் நேர்முகத் தேர்வு என்று பல்வேறு நிலைகளில் தற்போது சோதிக்கப்படுகிறார்கள். ஆனால், முனைவர் பட்ட ஆய்வுக்கு வெறும் ‘டிக்’ அடிக்கும் முறையிலான தேர்வு சரியானது அல்ல. இப்போது யுஜிசி அறிமுகப்படுத்தியிருக்கும் தேசியத் தகுதித் தேர்வு முறை அதற்கான தனியார் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கும், அவற்றை நடத்துகிறவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும் மட்டுமே வழிவகுக்கும்.
  • புதிய தேர்வு முறை மாநிலப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிட்டு, அவை சுதந்திரமாகச் செயல்படுவதைத் தடுப்பதாக உள்ளது. தற்போது மத்திய அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களைவிட, மாநில அரசுகளால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையே அதிகமாகும். தமது நிதியைக் கொண்டு நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையை மத்திய அரசு கட்டுப்படுத்துவதை எந்த மாநில அரசும் விரும்பாது.
  • தேசியக் கல்விக் கொள்கையைக்கூட அதனால்தான் பல மாநில அரசுகள் ஏற்க மறுக்கின்றன. இந்நிலையில், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள தேசியத் தகுதித் தேர்வு நடத்தும் யுஜிசியின் முடிவு மாநிலத்தின் அதிகாரத்தை வெகுவாகக் குறைப்பதாகும். அதுமட்டுமின்றி, ஆராய்ச்சிக் கல்வியை முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுபோவதற்கான ஏற்பாடும் ஆகும்.
  • முனைவர் பட்ட ஆய்வுகளின் தரத்தைக் குறைப்பதாகவும், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை ஒழிப்பதாகவும், மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகவும் உள்ள யுஜிசியின் இந்த விதிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதைக் கல்வியாளர்களும், தமிழ்நாடு அரசும் வலியுறுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories