- பள்ளிகளில் அறிதிறன்பேசி (ஸ்மார்ட்ஃபோன்) பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் "யுனெஸ்கோ' பரிந்துரைத்துள்ளது. கல்வியில் தொழில் நுட்பத்தின் பயன்பாடு தொடர்பான ஆய்வறிக்கையை யுனெஸ்கோ அண்மையில் வெளியிட்டுள்ளது. "கல்விக்கு எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் உதவுகிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. அறிதிறன்பேசி உற்பத்தியாளர்கள்தான் கல்விக்கு எண்ம தொழில்நுட்பம் உதவுகிறது என அதிகம் பரப்புரை செய்கின்றனர்' என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- கல்விக்கு எண்ம தொழில்நுட்பம் உதவாத நிலையில், மாணவர்களின் நலன்களுக்கு உகந்ததாக இல்லாத அறிதிறன்பேசிக்கு பள்ளிகளில் தடை விதிக்கலாம் என்று யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளது. அறிதிறன்பேசி மாணவர்களின் கல்வியை திசைதிருப்புகிறது என்று 14 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆக்கபூர்வ பயன்பாட்டுக்கு மாறாக, எதிர்மறையான விளைவுகளையே அது ஏற்படுத்துகிறது. அப்படியிருந்தும், மிகக் குறைவான பள்ளிகளில் மட்டுமே அறிதிறன்பேசி பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இதுபோன்றதொரு ஆய்வு இந்தியாவிலும் நடத்தப்பட்டது.
- மத்திய அரசு 21 மாநிலங்களின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் பெற்றோர்களிடையே ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வு முடிவின் அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. 6 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்ப ட்டது.
- கிராமப்புறப் பகுதிகளில் 49.3 சதவீத மாணவர்களிடம் அறிதிறன்பேசி உள்ளது. இவர்களில் 76.7 சதவீத மாணவர்கள் விடியோ கேம் விளையாடவே அறிதிறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். 56.6 சதவீதம் பேர் திரைப்படம் பார்க்கவும், 47.3 சதவீதம் பேர் பாடல்கள் கேட்கவும் அறிதிறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். 34 சதவீதம் பேர் மட்டுமே படிப்பதற்கான தரவுகளை அதில் பதிவிறக்கம் செய்கின்றனர். 18 சதவீதம் பேர் இணையவழிக் கல்விக்குப் பயன்படுத்துகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
- மது அருந்துவது, புகை பிடிப்பது, போதைப் பொருள் பயன்படுத்துவது போன்றவற்றுக்கு இளைஞர்கள் அடிமையாவதாக மட்டுமே இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கைப்பேசிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கரோனா காலகட்டத்தில் கைப்பேசிகளைப் பயன்படுத்தி மட்டுமே படிக்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டது. படிப்பதற்காகத் தொடங்கிய மாணவர்களின் அறிதிறன்பேசி பழக்கம், இப்போது இன்றியமையாததாக மட்டுமல்ல, ஒருவித போதையாகவும் மாறியிருக்கிறது.
- பள்ளிகளில் இருந்து வீட்டுக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள், வந்தவுடன் அறிதிறன்பேசியில் மூழ்கிவிடுகின்றனர். அவர்கள் தொலைக்காட்சிகூட பார்ப்பதில்லை. விளையாடச் செல்வதில்லை. அப்படியே விளையாடினாலும் இணைய விளையாட்டுகளில்தான் ஈடுபடுகின்றனர். இரவில் வெகுநேரம் விழித்திருக்கின்றனர். சமூக வலைதளங்களில் பரவிக்கிடக்கும் ஆபாசப் பதிவுகளும் இளம் தலைமுறையை திசை திருப்புகின்றன.
- குழந்தைகளிடமிருந்து கைப்பேசியை பெற்றோர்கள் பறித்தாலோ, விழித்திருந்து பார்ப்பதைத் தடுத்தாலோ கடும் கோபம் கொள்கின்றனர். பெற்றோர் கண்டித்ததால் சில மாணவர்கள் தற்கொலைகூட செய்துகொண்டுள்ளனர்.
- அத்தியாவசியமாக இருக்கும் ஒன்று, அளவு மீறும்போது போதையாக மாறுகிறது. காபி, தேநீர் அருந்துவது, புகையிலைப் பழக்கம் போல அறிதிறன்பேசியும் மாறிவருகிறது. அது இல்லாமல் இருக்க முடியாது என்கிற மனநிலையால் கோபம், மன அழுத்தம், கடமை தவறுதல் போன்றவை நிகழ்கின்றன. இதனை "இன்டர்நெட் அடிக்ஷன் டிஸார்டர்' என்கின்றனர்.
- 10 முதல் 20 வயது வரையிலானவர்கள் இந்த நோய்க்கு அதிகமாக ஆளாகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மது அருந்துவோருக்கு அதை அருந்தவில்லை என்றால் எப்படி படபடப்பு தோன்றுமோ, அதேபோன்று கைப்பேசியைப் பறித்துவிட்டால் இவர்களுக்கும் படபடப்பு ஏற்படும். மணிக்கணக்காக கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருப்பதால் பலருக்கும் 10 வயதுக்குள்ளாகவே கண்ணாடி அணியும் நிலை ஏற்படுகிறது. 25}30 வயதுக்குள்ளாகவே பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
- பிறந்து சில மாதங்கள் ஆனவுடனேயே, குழந்தைகள் அழுதால் தாய்மார்கள் கைப்பேசியைக் கொடுத்து அழுகையைக் கட்டுப்படுத்துகிறார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைவிட கைப்பேசியில் அதிக பழக்கம் உடையவர்களாக மாறிவிடுகின்றனர். அவர்
- களுக்குத் தெரிந்திருக்கும் நுட்பங்கள் பலவும் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. எனவே, அவர்கள் வளரும்போது பெற்றோர்களால் அவர்களைக் கண்காணிக்க முடிவதில்லை; கண்டிக்கவும் முடிவதில்லை.
- இந்தியாவில் இப்போது 120 கோடி பேர் கைப்பேசியைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 60 கோடி பேர் அறிதிறன்பேசி பயனாளர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் மூன்று ஆண்டுகளில் 100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைப்பேசி பயன்பாட்டைத் தடுப்பதோ, ஒழிப்பதோ இனி சாத்தியமில்லாதது.
- இந்த போதையில் இருந்து இளம் தலைமுறையைக் காக்க, இதன் சாதகமான அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், பாதகத்திலிருந்து காப்பது எப்படி என்பது குறித்து அனைவரும் இணைந்து சிந்திக்க வேண்டிய தருணமிது. இணையம் என்பது அறிவுச் சுரங்கத்தின் திறவுகோலாக மட்டும் அல்லாமல், அழிவுப் பாதைக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (12 – 09 – 2023)