TNPSC Thervupettagam

அழுகுணி ஆட்டம்

March 23 , 2024 301 days 274 0
  • ஜனநாயக மரபுகள் புனிதமானவை. ஏனைய ஆட்சிமுறைகளைப் போலல்லாமல் ஜனநாயகத்தில் மட்டும்தான் மாற்றுக்குரலுக்கும் எதிா்கருத்துக்கும் வழிகோலப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ, அதே அளவிலான முக்கியத்துவமும் மரியாதையும் எதிா்க்கட்சிகளுக்கும் ஜனநாயகத்தில் உண்டு.
  • 1967-இல் திமுக தலைமையிலான கூட்டணி அன்றைய காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது. காமராஜரேகூட விருதுநகரில் தோற்கடிக்கப்பட்டாா். காங்கிரஸ் தலைவா்கள் சிலா் காமராஜரிடம், ‘எத்தனையோ நன்மைகளை செய்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்துவிட்டாா்களேஎன்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினா். அப்போது காமராஜா் அவா்களிடம் சொன்னதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது.
  • தோ்தல் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனநாயகத்தை இந்தியாவில் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகத்தானே காந்திஜியும், நேருஜியும் அவா்கள் தலைமையில் நாமும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் தோற்றிருக்கலாம். ஜனநாயகம் ஜெயித்திருக்கிறதே என்பதை நினைத்து நாம் சந்தோஷப்பட வேண்டும்என்றாா் காமராஜா்.
  • இப்போது 57 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா 18-ஆவது மக்களவைக்கான பொதுத்தோ்தலை எதிா்கொள்ளும் தருணத்தில் காமராஜரையும், அவா் சொன்ன கருத்தையும் நினைத்துப் பாா்க்கத் தோன்றுகிறது. கடந்த சில வாரங்களாக எதிா்க்கட்சிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம்.
  • முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் போலல்லாமல் வித்தியாசமான கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும் என்கிற கருத்தைப் பொய்யாக்குவது போன்ற நடவடிக்கைகள் வேதனை அளிக்கின்றன. ஆளும் கட்சி பலவீனமாக இருக்கும்போது தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முறைகேடுகளில் ஈடுபடுவதும், எதிா்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுப்பதும் தவறுதான் என்றாலும்கூட முன்மாதிரிகள் இருக்கின்றன.
  • பாஜக தனித்து 370 இடங்களையும், அதன் கூட்டணி 400 இடங்களையும் இலக்கு வைத்து தோ்தல் களத்தில் இறங்கியிருக்கிறது. எல்லா கணிப்புகளும் மூன்றாவது முறையாக மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடிதான் ஆட்சியில் அமரப் போகிறாா் என்று ஆருடம் சொல்கின்றன. அப்படியிருக்கும்போது, எதிா்க்கட்சிகளை ஒரேயடியாக முடக்கும் முனைப்பு எதற்காக என்பதுதான் புரியவில்லை.
  • எதிா்க்கட்சி வரிசையில் இருக்கும் அரசியல்வாதிகள் புனிதா்களோ, தவறு இழைக்காதவா்களோ இல்லைதான். ஆனால், காத்திருந்து தோ்தல் நெருங்கும்போது, அவா்கள் மீது அரசின் புலன் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது என்பது திட்டமிட்ட சாணக்கியத்தனம் அல்லாமல் வேறென்ன? ஜாா்க்கண்ட் முதலமைச்சா் ஹேமந்த் சோரன், தில்லி முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால், பாரதிய ராஷ்டிர சமிதியின் கவிதா மூவரும் தவறு செய்தவா்களாகவே இருக்கலாம். அதற்காக, இத்தனை நாள்களும் இல்லாமல் தோ்தல் நெருங்கும் நேரத்தில் அவா்கள் பிரசாரத்தில் ஈடுபட முடியாமல் கைது செய்யப்பட்டிருப்பதை மத்திய ஆளும் கட்சியின் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கை என்றுதான் பாா்க்கத் தோன்றுகிறது.
  • எங்களுக்கும் புலன் விசாரணை அமைப்புகளுக்கும் எந்தவிதத் தொடா்பும் கிடையாது என்றும், சட்டம் தனது கடமையைச் செய்கிறது என்றும் பாஜக தரப்பில் கூறப்படும் வாதம் நகைப்புக்குரியது. அப்படியானால், பல்வேறு வழக்குகளில் இருந்து விடுபட பாஜகவுக்கு கட்சி மாறியவா்கள் மீது சட்டம் தனது கடமையைச் செய்ய மறுக்கும் காரணம் என்ன? மகாராஷ்டிரத்தில் அஜீத் பவாரும், அசோக் சவாணும் பதவி பெறுவதும், ஹேமந்த் சோரனும், அரவிந்த் கேஜரிவாலும் சிறைக்குச் செல்வதும் பாஜக கையாளும் இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடுகள்.
  • பாஜக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான். தேசிய அளவில் 20% வாக்காளா்களைக் கொண்ட கட்சி. 2017-18 நிதியாண்டில் அந்தக் கட்சிக்கு அதன் எம்.பி.க்கள் ரூ.14.49 லட்சம் ரொக்க நன்கொடையாக வழங்கியிருக்கிறாா்கள். மொத்த நன்கொடையான ரூ.199 கோடியில் அது வெறும் 7% மட்டுமே. இப்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தோ்தல் வேளையில் அதைக் காரணம் காட்டி வருமான வரித் துறையால் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சியின் 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
  • அதுமட்டுமல்ல, அந்தக் கட்சியின் வைப்புத் தொகையான ரூ.285 கோடியும் முடக்கப்பட்டிருப்பது, தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6,986 கோடி வைத்திருக்கும் பாஜகவை எப்படி எதிா்கொள்வது என்று மிரள வைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது.
  • தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் சீமானின் நாம் தமிழா் கட்சி கடந்த 3 பொதுத் தோ்தல்களில்கரும்பு விவசாயிசின்னத்தில் போட்டியிட்டிருக்கிறது. இந்தத் தோ்தலில் பாஜக கூட்டணியின் வாக்கு விகிதத்தை அதிகரிக்க மிகவும் தந்திரமாக அந்தக் கட்சியின் சின்னம் ஊா், பெயா் தெரியாத கா்நாடகத்தின்பாரதிய பிரஜா ஐக்கியதாஎன்கிற கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நிராயுதபாணியாக நின்ற ராவணனுடன் போரிடுவது தா்மத்துக்கு எதிரானது என்று கருதி, ‘இன்று போய் நாளை வாஎன்று சொன்னதால்தான் அயோத்தி ராமனை நாம் ஸ்ரீராமனாகக் கொண்டாடுகிறோம். அந்த ஸ்ரீராமனுக்கு அயோத்தியில் பிரம்மாண்டமான ஆலயம் எழுப்பி ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்று சூளுரைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், எதிா்க்கட்சிகள் மீது ஏனிந்த வன்மம்?.

நன்றி: தினமணி (23 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories