- கடந்த 10 ஆண்டுகளில் சுகாதார மேம்பாட்டில் இந்தியா மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது, முன்னேற்றங்களையும் கண்டிருக்கிறது. சிசு மரண எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. மருத்துவமனைப் பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆயிரம் ஆண்களுக்கு நிகராக பெண் குழந்தைகளின் பிறப்பு இல்லையென்றாலும்கூட, கணிசமான அளவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவையெல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் இடைவிடாத முயற்சியால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்.வளர்ச்சி குறைவான குழந்தைகளின் அளவும் ஏறத்தாழ 10% குறைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
புள்ளிவிவரம்
- கடந்த 8 ஆண்டுகளில் எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையும் 42.5%-லிருந்து 35.7%-ஆகக் குறைந்திருக்கிறது. மருத்துவமனைப் பிரசவங்கள் வெறும் 38.7%-ஆக இருந்தன. பரவலான விளம்பரங்கள், விடா முயற்சியுடன் கூடிய மத்திய - மாநில சுகாதாரத் துறைகளின் முனைப்பு ஆகியவற்றால் இப்போது மருத்துவமனைப் பிரசவங்களின் எண்ணிக்கை 78.9%-ஆக 10 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது.
நாடு தழுவிய அளவில் தடுப்பூசித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருகக்கிறது என்பதில் ஐயப்பாடில்லை.
- 2005-06-இல் 44% குழந்தைகள்தான் தடுப்பூசித் திட்டத்தால் பயனடைந்தனர் என்றால், இப்போது அதுவே 65%-ஆக அதிகரித்திருக்கிறது.
சுகாதாரத் துறையில் கவனம் செலுத்தி ஓரளவு ஒதுக்கீட்டை அதிகரிப்பதும், தடுப்பூசித் திட்டங்கள் போன்ற இன்றியமையாத அடிப்படை முயற்சிகளில் ஈடுபடுவதும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்தியம்புகின்றன.
- பொருளாதாரத்தில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் சுகாதாரத்தில் நாம் வளரவில்லை என்கிற உண்மையை உணர வேண்டும். இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை மிக அதிகமுள்ள ஒரு தேசத்தில், அனைவருக்கும் அடிப்படை சுகாதார வசதிகளை உறுதிப்படுத்துவது என்பது எளிதானதல்ல. ஆனால், அடித்தட்டு மக்கள் அடிப்படை சுகாதாரத்தை பெறுவதை உறுதிப்படுத்தாத வரை பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் கானல்நீர்த் தோற்றம்.
நிதி ஒதுக்கீடு
- சுகாதாரத் துறைக்கான அரசு ஒதுக்கீடு என்பது இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 1%-க்கு சற்று அதிகம், அவ்வளவே. சுகாதாரத்துக்கான உலக சராசரி ஒதுக்கீடு 5.99% எனும்போது, ஜிடிபியில் 1% ஒதுக்கீடு பாராட்டும்படியானதல்ல.
- நகர்ப்புறங்களில் தரமான தனியார் துறை மருத்துவப் பாதுகாப்பு இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் இருப்பதும், தேவையான கட்டமைப்பு வசதி இல்லாதிருப்பதும், அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த இரட்டை நிலையால் மருத்துவத்திற்கான செலவுகள் கடுமையாக அதிகரித்து பெரும்பான்மையான மக்கள் மிகப் பெரிய பொருளாதார, சுகாதார பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
- இவையெல்லாம் போதாதென்று, இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் தட்டுப்பாடு காணப்படுகிறது. புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகள் என்பதால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. அரசின் புதிய மருத்துவக் கொள்கையின்படி, பாதிக்குப் பாதி இடங்கள் நிர்வாக ஒதுக்கீடுகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகமான நன்கொடை கொடுத்து மருத்துவம் படிப்பவர்கள் பட்டம் பெற்றவுடன் வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுவார்கள் என்கிற எதார்த்த உண்மை சுடுகிறது.
முன்னேற்றம்
- தடுப்பூசித் திட்டமிடலில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்றாலும், இந்தியாவின் செயல்பாடு இன்னும்கூட பாராட்டும்படியாக இல்லை. மொத்த மக்கள்தொகையில் நாம் 65% குழந்தைகளுக்குத்தான் தடுப்பூசிப் பாதுகாப்பு வழங்குகிறோம். சீனாவில் அதுவே 99%. அதுமட்டுமல்ல, தடுப்பூசி மருந்துகள் வாங்குவதும், தேவையான முன்னெச்சரிக்கை மருத்துவமும் பொது சுகாதாரத்தின் கீழ் இன்னும் கொண்டுவரப்படவில்லை.
- இந்தியாவில் தடுப்பூசித் தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். சீனாவிலிருந்தும், கொரியாவிலிருந்தும் எந்தவித வரம்பும் இல்லாமல் தடுப்பூசி மருந்துகள் இந்தியச் சந்தையில் விற்பனையாகின்றன. கடுமையான தரக் கட்டுப்பாடு அல்லது சோதனைக்கு அவை உட்படுத்தப்படுவதில்லை.
- சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியத் தயாரிப்பாளர்கள் நுழைய வேண்டுமானால், அங்கேயுள்ள உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்களை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, அவர்களுடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். அதே நேரத்தில், அவர்கள் இந்தியச் சந்தையில் நுழைவதற்கும், மருந்துகளை விற்பதற்கும் எந்தவிதமான தடையோ, தரக் கட்டுப்பாடோ கிடையாது.
- ஏனைய நாடுகளைப் போல, இந்திய அரசும் இறக்குமதி செய்யும் தடுப்பூசி மருந்துகளின் தரத்தை முறையாகப் பரிசோதிப்பதும், இந்திய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு அவர்களும் உட்படுத்தப்படுவதும் அவசியம்.
மருத்துவ வசதிகளைப் பெருக்குவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதும், வெற்றிகரமாக தடுப்பூசித் திட்டங்களை அமல்படுத்துவதும்.
- இந்தியாவில் லட்சக்கணக்கானோர் மருத்துவச் செலவினங்களால்தான் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இந்தியாவில் தரமான தடுப்பூசி மருந்துத் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதும், தரமில்லாத இறக்குமதிகளை தயவுதாட்சண்யமில்லாமல் தடுப்பதும் உடனடித் தேவை.
நன்றி: தினமணி(30-08-2019)