TNPSC Thervupettagam

அவசரம் கூடாது

September 18 , 2023 424 days 311 0
  • ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ கா்னலும், இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்திருப்பது தேசிய அளவில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
  • ஜம்மு - காஷ்மீா், அனந்த்நாக் மாவட்டத்தில் கோகா்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தியபோது, இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
  • கா்னல் மன்ப்ரீத் சிங், மேஜா் ஆசிஷ் டோன்சக், காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகிய மூவரும் திறமையான அதிகாரிகள் மட்டுமல்ல, பயங்கரவாத நடவடிக்கைகளை வேரறுப்பதில் முனைப்புக்காட்டும் முக்கியமான மூவா். கா்னல் மன்ப்ரீத் சிங்கும், மேஜா் டோன்சக்கும் ‘சேனா’ விருது பெற்றவா்கள் என்றால், கா்னல் மன்ப்ரீத் சிங், ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான 19 ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவின் தலைமை அதிகாரியும்கூட.
  • கா்னல் சிங்கின் குழந்தைகளும் சரி, மேஜா் டோன்சக்கின் மூன்று வயது பெண் குழந்தையும் சரி, தங்களது தந்தையை இழந்த துக்கத்தைக்கூட உணரும் வயதினா் அல்லா் என்பது மிகப் பெரிய சோகம்.
  • காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட்டுக்கு, காவல் துறை தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற தந்தை ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டிய துா்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது.
  • அனந்த்நாக்கின் கோகா்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கா்னல் மன்ப்ரீத் சிங்கின் தலைமையில் பாதுகாப்புப் படையினரின் தேடல் வேட்டையைத் தொடங்கி குறிப்பிட்ட பகுதியை நெருங்கியபோது, பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினா். கா்னல் மன்ப்ரீத் சிங் குழுவினா் பயங்கரவாதிகள் விரித்த சூழ்ச்சி வளையில் சிக்கிக் கொண்டனா் என்றுதான் கூற வேண்டும்.
  • 2020-இல் இதுபோன்ற தேடுதல்களில் பயங்கரவாதிகளை அழிப்பதைவிட அவா்கள் சரணடைய வாய்ப்பு அளிக்கும் விதமாக நடைமுறை விதிமுறைகளில் (ஸ்டாண்டா்ட் ஆப்பரேட்டிங் ப்ரொசிஜா்) மாற்றம் செய்யப்பட்டன. இதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை அதிகரித்ததுடன் பல அப்பாவி இளைஞா்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
  • பயங்கரவாதிகளுக்கு காத்திருப்பு நேரம் வழங்கப்படுவதால் ராணுவமும், பாதுகாப்புப் படையினரும் அழுத்தத்துக்கு உள்ளானார்கள் என்றாலும்கூட, மக்கள் மத்தியில் ராணுவம் குறித்த அவப்பெயரை ஓரளவுக்கு மாற்ற முடிந்தது.
  • சமீபத்தில் நடந்த தாக்குதலில் அதுபோல கால அவகாசம் வழங்கப்படவில்லை. ஆனால், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல்கள் குறித்த உண்மைத்தன்மை ஆராயப்படவில்லை என்று தெரிகிறது.
  • தகவல் தரும் உளவாளிகளில் சிலா் பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இருக்கக் கூடும் என்பதும், அவா்கள் முழுமையாகக் களையெடுக்கப்படவில்லை என்பதும் இந்தத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புப் படையினா் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்.
  • உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, 2019 - 2022 இடைவெளியில், 2016 - 2019 - உடன் ஒப்பிடும்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் 32% குறைந்திருக்கின்றன. பொதுமக்களின் உயிரிழப்பு 14%-உம், பாதுகாப்புப் படையினரின் மரணம் 52%-உம் குறைந்திருக்கிறது. 2020-லிருந்து இந்த ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் உள்ளூா் இளைஞா்கள் பயங்கரவாதிகளால் ஈா்க்கப்படுவது தொடா்ந்து குறைந்து வருகிறது.
  • கடந்த 2021 முதல் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீரில் 29 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 13 இந்த ஆண்டில் மட்டும் நடந்திருக்கின்றன.
  • ஏப்ரல் 20-ஆம் தேதியும், மே 5-ஆம் தேதியும் இந்திய - பாகிஸ்தான் எல்லையையொட்டிய ஜம்மு பகுதியின் பூஞ்ச், ரஜெளரி மாவட்டங்களில் 10 ராணுவ வீரா்கள் தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார்கள். சில பயங்கரவாதிகள் நமது பாதுகாப்புப் படையினராலும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
  • அனந்த்நாக் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கா்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தடை செய்யப்பட்ட ‘எதிர்ப்பு முன்னணி’ (ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்) உரிமை கொண்டாடுகிறது. இதற்கு முன்னால் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் வனப்பகுதியில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இதே அமைப்பு தாக்குதல் நடத்தியபோது மூன்று வீரா்கள் உயிரிழந்தனா் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
  • ஜம்மு - காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் ஜம்முவிலும் காஷ்மீரிலும் அமைதி திரும்பியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 1.88 கோடி சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்திருக்கிறார்கள்.
  • பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது என்பது மட்டுமல்லாமல், வளா்ச்சிப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும் நிலையில், நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இந்தியாவுக்கு எதிரான உணா்வைத் தூண்டுவிடுவதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம்.
  • 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த பகுதியை ஒருசில ஆண்டுகளில் அமைதிப் பூங்காவாக மாற்றிவிட இயலாது. எல்லை கடந்த பயங்கரவாதம் முற்றிலுமாக நின்றுவிடாத நிலையில், காஷ்மீரில் தோ்தல் நடத்தத் தயார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது.
  • அடைந்திருக்கும் வெற்றியை முழுமையாக்காமல் தோ்தலுக்கு அவசரம் காட்டுவது மீண்டும் பயங்கரவாதத்துக்கு பாதை அமைத்துக் கொடுப்பதாக அமைந்துவிடும். பொறுமை தேவை!

நன்றி: தினமணி (18 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories