- அஸ்ஸாம் மாநிலம் காஸிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் உலக காண்டாமிருக தினமான செப்டம்பர் 22 அன்று 2,479 காண்டாமிருகக் கொம்புகள் தீயிலிடப்பட்டு அழிக்கப்பட்டன. அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்பு உலகம் முழுவதும் காணப் பட்டது.
- காண்டாமிருகங்களைக் கொன்று அதன் கொம்புகளை விற்பனை செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
- அஸ்ஸாமிலுள்ள காஸிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம், உலகிலேயே மிக அதிகமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படும் இடம். இறந்துபோன காண்டாமிருகங்களிலிருந்தும், காண்டாமிருகங்களைக் கொன்று கொம்புகளை கடத்த முற்படும் கடத்தல்காரர்களிடமிருந்தும் கிடைத்த கொம்புகள் சரணாலயத்தால் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்தன. கையிருப்பில் இருந்த கொம்புகளை துல்லியமாக பரிசோதனை செய்து அவற்றில் 94 கொம்புகளை ஆய்வுகளுக்காகப் பாதுகாப்பது என்று முடிவெடுத்தனர். ஏனைய கொம்புகள் எரிக்கப்பட்டன.
- கொம்புக்காக காண்டாமிருகங்களைக் கொல்பவர்களுக்கு அதன் மதிப்பு இவ்வளவுதான் என்று தெரிவிப்பதும், எரிப்பதன் மூலம் காண்டாமிருகக் கொம்புக்கு எந்தவித மருத்துவ, வர்த்தகப் பயனும் இல்லை என்பதை உணர்த்துவதும்தான் அதன் நோக்கம். அதன் மூலம் காண்டாமிருகங்களின் கொம்புகள் விலைமதிக்க முடியாதவை என்கிற மாயையை அகற்ற முடியும் என்று கருதியதில் தவறில்லை. மேலும், காண்டாமிருகக் கொம்புகளை பாதுகாப்பதன் மூலம் கள்ளச் சந்தையில் அவற்றின் விலை அதிகரித்து வந்தது என்பதையும் உணர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இது.
- சரணாலயத்தில் சேகரிக்கப்பட்ட கொம்புகளை அரசே வெளிநாட்டுக்கு விற்பதன் மூலம் அந்நிய செலாவணி ஈட்டலாம் என்கிற கருத்து ஏற்புடையதல்ல. காண்டாமிருகக் கொம்புகளுக்கு பரப்புரை செய்யப்படுவது போன்ற மருத்துவ குணங்கள் கிடையாது. சீனா, வியத்நாம் போன்ற நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் காண்டாமிருகக் கொம்புகள் சில நோய்களுக்கான மருத்துவமாக பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை.
- வனவிலங்குகளின் உறுப்புகளை கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுப்பதற்கு அவற்றை எரிப்பது என்பது நீண்டகாலமாகவே இருந்து வரும் உலக அளவிலான வழிமுறைதான். கென்யா 1989-இல் முதன்முதலில் அந்த வழிமுறையைக் கையாண்டது. 2016-இல் ஏறத்தாழ 8,000 யானை தந்தங்களையும் 300-க்கும் அதிகமான காண்டாமிருகக் கொம்புகளையும் கென்யா எரித்து சாம்பலாக்கியதன் மூலம், வனவிலங்கு உறுப்புகளை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இப்போது காஸிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம் அதே வழிமுறையைப் பின்பற்றி இருக்கிறது, அவ்வளவே.
- சுமத்திரன், இந்தியன், ஜாவன் காண்டாமிருகங்கள் தவிர, வெள்ளை, கறுப்பு என்று உலகில் ஐந்துவித காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. இப்போதைய நிலையில் உலகில் ஏறத்தாழ 3,500 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் இந்தியாவின் காஸிரங்காவில் 2,400-உம், நேபாளத்தின் சிட்வானில் 600 காண்டாமிருகங்களும் இருக்கின்றன. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஆப்கானிஸ்தானிலிருந்து பர்மா வரையில் ஆங்காங்கே காணப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து விட்டது.
- முகலாயர்கள் காலத்தில் தொடர்ந்து நடைபெற்ற குறுநில மன்னர்களுக்கு இடையேயான போர்களும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில் மிருகங்களை வேட்டையாடும் ஆங்கிலேயர்களின் மனோபாவமும் காண்டாமிருகங்களை அழிவின் எல்லைக்கு கொண்டு சென்றன. அவற்றின் எண்ணிக்கை மட்டுமல்ல, வாழ்விடங்களும் குறையத் தொடங்கின.
- தென்னிந்தியாவில் யானைகளை நாம் மதிப்பது போல, அஸ்ஸாமியர்கள் காண்டாமிருகங்களை நேசிக்கிறார்கள்.
- 1932 வங்காள காண்டாமிருகங்கள் பாதுகாப்புச் சட்டமும், 1954 அஸ்ஸாம் காண்டாமிருகங்கள் பாதுகாப்புச் சட்டமும் அந்த இனம் முற்றிலுமாக அழிந்துவிடாமல் காப்பாற்றின என்றுதான் கூற வேண்டும்.
- யானைகளைப் போலல்லாமல், காண்டாமிருகங்கள் தனிமை விரும்பிகள். அதிலும் கர்ப்பம் தரித்துவிட்டால் குட்டி ஈன்று, அந்தக் குட்டி வளரும் வரையிலான ஐந்து ஆண்டுகள் அவை குட்டிகளை வளர்ப்பதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றன. தனது குட்டி ஓரளவுக்குப் பெரிதாகி சுதந்திரமாக வாழும் பருவத்தை எட்டிய பிறகுதான் அடுத்தாற்போல கர்ப்பம் தரிப்பதை அனுமதிக்கின்றன. அதனால், யானைகளின் இனப்பெருக்கம்போல, காண்டாமிருகங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பது அவ்வளவு எளிதல்ல. போதாக்குறைக்கு அதன் கொம்புகளுக்காக வேட்டையாடுபவர்களின் துப்பாக்கி ரவைகளிலிருந்து அவற்றைக் காப்பாற்றுவதும் மிகப் பெரிய போராட்டமாகவே தொடர்ந்து வருகிறது.
- இரண்டு டன் வரை எடையுள்ள காண்டாமிருகங்கள், கற்கால பாறை ஓவியங்களிலிருந்து தொடங்கி இந்தியாவின் ஓவியங்கள், சின்னங்கள், நாணயங்கள் என்று அனைத்திலும் இடம் பெற்றுள்ளன. ஹரப்பா நாகரிக சின்னங்கள் உள்பட பரவலாகவே காண்டாமிருகத்தின் உருவ அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
- பருவ மழை தொடங்கிவிட்டால் காஸிரங்கா தேசிய வனவிலங்கு சரணாலயம் வெள்ளத்தில் மூழ்குவதும், காண்டாமிருகங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுவதும் ஆண்டு தோறும் வழக்கமாகிவிட்டது. அதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். ஏனென்றால் யானை, புலி, மயில் போலவே காண்டாமிருகமும் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று!
நன்றி: தினமணி (03 - 11 - 2021)