TNPSC Thervupettagam

ஆகஸ்ட் 23: டாக்டர் தருமாம்பாள் பிறந்த நாள்

August 20 , 2023 380 days 335 0
  • தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவந்த காலம். இன்றைய சென்னையின் தங்கசாலை தெருவில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகிருந்து இந்தி எதிர்ப்பு வீரர்கள் சிலர் ‘தமிழ் வாழ்க!’ ‘இந்தி ஒழிக!’ ஆகிய முழக்கங்களுடன் கைகளில் தமிழ்க் கொடியுடன் புறப்பட்டனர். தங்கசாலை தெருவைத் தாண்டி ஆதியப்பன் தெருவில் நுழைந்த அவர்கள் அங்கிருந்த இந்து தியாலஜிகல் பள்ளியின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களில் ஐந்து பேர் பெண்கள். அந்த ஐவரில் ஒருவர்தான் டாக்டர் தருமாம்பாள்.
  • மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. வேலூர் சிறை சென்றவர்களில் மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், பட்டம்மாள், மலர்முகத்தம்மாள் ஆகியோருடன் தருமாம்பாளின் மருமகள் சீதம்மாளும், ஒரு வயதுப் பேரனும், நான்கு வயதுப் பேத்தியும் அடங்குவர். அதற்கு அடுத்த வாரத்திலேயே தருமாம்பாளின் இன்னொரு மருமகளும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்றார். இவ்வாறு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற பெண்கள் மொத்தம் 73 பேர். அவர்களுடன் சிறை புகுந்த குழந்தைகள் 32 பேர். பெண்களை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தவர் தந்தை பெரியார்.
  • டாக்டர் தருமாம்பாள் 1890ஆம் ஆண்டு, நாச்சியார் – சாமிநாதன் இணையருக்கு தஞ்சாவூரில் உள்ள கருந்தட்டாங்குடியில் பிறந்தவர். சென்னை தங்கசாலை தெருவில் 330ஆம் எண் கொண்ட வீட்டின் மாடியில் தங்கி, சித்த மருத்துவராகப் பணியாற்றி, சித்தானந்த வைத்திய சாலையை நடத்திவந்தவர் டாக்டர் தருமாம்பாள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சென்னை வந்த தமிழர் பெரும்படையை தருமாம்பாள் விருந்தளித்து உபசரித்ததும் இந்த வீட்டில்தான். சென்னைப் பெத்துநாயக்கன்பேட்டை இந்தி எதிர்ப்பின் கோட்டையாக அன்று விளங்கி வந்தது.

ஊதிய உயர்வுப் போராட்டம்

  • அக்காலத்தில் பள்ளிகளில் மற்ற ஆசிரியர்களைக் காட்டிலும் தமிழாசிரியர்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டுவந்தது. 07.11.1947 அன்று திரு.வி.கல்யாணசுந்தரனார் தலைமையில் சென்னை முத்தையா உயர்நிலைப் பள்ளியில் தென்னிந்திய மொழியாசிரியர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பெறும் அதே ஊதியமும் சலுகைகளும் பிற மொழி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து தருமாம்பாள் பேசினார். ஆனாலும் அரசு செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து ‘துக்க வாரம்’ என்கிற போராட்டத்தை நடத்தப்போவதாக தருமாம்பாள் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழாசிரியர்களின் ஊதியம் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக உயர்த்தப்பட்டது.
  • மாணவர்களின் தமிழறிவையும் கல்வித்திறனையும் வளர்ப்பதற்காகச் செயல்பட்ட மாணவர் மன்றத்தின் தலைவராக ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர் தருமாம்பாள். தமிழ்மொழி முன் னேற்றம் மட்டுமல்லாது சமூகநீதிக் களத்திலும் அயராது பணியாற்றியவர். தருமாம்பாள் குறித்துத் தனது வாழ்க்கைக் குறிப்பில் திரு.வி.க. குறிப் பிடும்போது ‘மருத்துவர் தருமாம்பாள் முயற்சியால் கலப்பு மணங்கள் நிகழ்ந்துவருவதைச் சென்னை அறியும்’ என்று பாராட்டுகிறார்.
  • தருமாம்பாள் மறைந்தபோது, ‘1938இல் சென்னை நகர வீதி வழியே வீரநடை போட்டு ‘போவோம் புறப்படுங்கள்’ என்கிற எழுச்சி கீதம் பாடி, இந்தி எதிர்ப்புப் போரின் முன்னணித் தலைவியாகப் பணியாற்றிப் பல நூற்றுக்கணக்கான தாய்மார்களுடன் சிறைக்கோட்டம் புகுந்த வீரச்செயலை எவர் மறக்க முடியும்?’ என்று பேரறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் எழுதினார். மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கைம்பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்துக்கு டாக்டர் தருமாம்பாளின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

நன்றி: தி இந்து (20 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories