TNPSC Thervupettagam

ஆக்கிரமிப்பு உயிரினங்களும் அச்சுறுத்தும் நோய்த் தொற்றும்

October 28 , 2023 436 days 399 0
  • ஒரு மனிதரிடம் இருந்து சக மனிதருக்கும், விலங்குகளிடமிருந்தும் (zoonotic), தாவரங்களிடமிருந்தும் (phytonoses) மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பரவுவதே தொற்றுநோய். நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருப்பது நுண்ணுயிரிகளான வைரஸ், பாக்டீரிய வகைகள், பூஞ்சைக் காளான்கள், புரோட்டோசோவாக்கள். காற்று, மாசடைந்த குடிநீர்/ உணவுப் பொருள்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகமை மூலம் தொடர்ச்சியாக இந்த நுண்ணுயிரிகள் பரவுகின்றன. பருவகால சுழற்சி, காலநிலை மாற்றம் போன்றவை கிருமிகள் அதிவேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றன.

பெருந்தொற்றின் தாக்கங்கள்

  • அயர்லாந்தில் 1840களில் Phytophthora infestans என்கிற பூஞ்சைக் காளான் ஏற்படுத்திய தொற்று காரணமாக உருளைக்கிழங்கில் ஏற்பட்ட பின்/ தாமத கருகல் நோய் (potato blight) மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அயர்லாந்தின் மக்கள்தொகையில் 25% இறந்துபோயினர்.
  • 1918-20 காலகட்டதில் ஸ்பானிஷ் ஃபுளூ வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் 3-5 கோடி, இறந்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி என மதிப்பிடப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் வைரஸ் மூலமாகப் பரவிய கோமாரி நோய் (foot & mouth disease) காரணமாக 40 லட்சம் கால்நடைகள் கொல்லப்பட்டன.
  • அதன் விளைவால் பெரும் பொருளாதார இழப்பைப் பிரிட்டன் சந்தித்தது. கரோனா பெருந்தொற்று காரணமாக 20 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மடிந்ததும், 8.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பை உலகம் சந்தித்ததும் சமீபத்திய வரலாறு.
  • தொற்று நோயினால் ஏற்படும் உயிர்-பொருளாதார இழப்புகளைக் கருத்தில் கொண்டு 2015இல் உலக சுகாதார நிறுவனம் நோய்த் தொற்றுகளைத் தடுப்பது குறித்த கருத்தரங்கை நடத்தியது. அழிந்துவரும் காடுகள், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கம் எவ்வாறு நோய்த்தொற்றுகளை அதிகரிக்கும் என அந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது; எனினும், அயல்/ ஆக்கிரமிப்பு உயிரினங்கள் எவ்வாறு நோய்த்தொற்றுகளைப் பரப்புகின்றன என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. ஆனால், காலநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு இனங்கள் வரும்காலங்களில் நோய்த்தொற்றுகளை அதிகரிக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

நோய் பரப்பும் ஆக்கிரமிப்பு இனங்கள்

  • அயல் உயிரினங்கள் புதிய பகுதியில் இயற்கையாகவோ மனித முயற்சியின் மூலமாகவோ அறிமுகமாகும்போது கண்ணுக்குப் புலப்படாத நோய்க்கிருமிகளையும் சுமந்துதான் வருகின்றன. அயல் உயிரினங்களால் அறிமுகப்படுத்தப்படும் நோய்ப் பரப்பும் கிருமிகள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் காட்டுயிர்கள், கால்நடைகள், இதர வளர்ப்பு விலங்குகளுக்கும் நோய்களைப் பரப்பி அவற்றின் அழிவுக்குக் காரணமாகின்றன; மேலும், உயிர்ப்பன்மைச் சிதைவுக்கும் பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கின்றன.
  • உதாரணமாக பிரிட்டனின் இயல் இனமான சிவப்பு அணில்கள் (Sciurus vulgaris) பெரும் எண்ணிக்கையில் குறைவதற்குக் காரணமாக இருந்தது அம்மை நோயைப் பரப்பும் அயல் வைரஸே. இந்த வைரஸ் பரவுவதற்கு, அமெரிக்காவைப் பூர்விகமாக கொண்ட தற்போது பிரிட்டனில் ஆக்கிரமிப்பு இனமாக மாறிய பழுப்பு அணில்களே (Sciurus carolinensis) காரணம்.

இந்தியாவின் நிலை

  • இந்தியாவின் நன்னீர் நிலைகளில் உயிர்ப்பன்மையைப் பாதித்து மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு உயிரினமாக ஆகாயத்தாமரைகள் உள்ளன. நகரங்களில் ஆகாயத்தாமரைகளில் அடர்த்தி அதிகமாகக் காணப்படுவதால் மலேரியா நோய்க்கிருமிகளின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. ஆக்கிரமிப்புப் தாவரமான பார்த்தீனியம், மனிதர்களிடையே ஆஸ்துமா, சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகளையும் கால் நடைகளில் வயிற்றுப்போக்கு, ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, மூச்சுத் திணறல், சருமத்தில் படை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
  • அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட ஆஸ்கர் மீன் (Astronotus ocellatus), வடகிழக்கு மாநிலங்களில் அலங்கார மீனாக அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. இவற்றின் உடலில் மோனோஜீனியா வகுப்பைச் சார்ந்த தட்டைப்புழுக்கள் பரவலாக இருப்பது கண்டறியப் பட்டிருக்கிறது. இந்தப் புழுக்கள் வெளிப்புற செதில், கண்கள், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் சுவாசப் பிரச்சினை, நரம்பு மண்டல பாதிப்புகள், நீந்தும் முறைகளில் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தும். இறுதியில் மீன்கள் மரணிக்கும்.
  • இந்தியாவில் ஏழுக்கும் மேற்பட்ட அந்நிய மோனோஜீனியா தட்டைப்புழுக்கள் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே பதிவுசெய்யப் பட்டுள்ளன. இயல்மீன் இனங்களின் மீது இவற்றின் தாக்கம் பற்றி ஆராய்ச்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மக்காச்சோளத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு இனமான படைப்புழுக்கள் (fall army worm), 2018-20 ஆண்டுகளில் இந்தியாவில் 23 மாநிலங்களில் 75 ஆயிரம் டன் அளவுக்குப் பயிர்ச் சேதத்தை விளைவித்தன. படைப்புழுக்கள் சோளக் கதிர்களை அரித்துத் தின்றுவிடுவதால் நடுவில் முத்துகள் இல்லாத சோளம் உருவானது.
  • இவ்வாறு பாதிக்கப்பட்ட சோளத்தில் பூஞ்சைக்காளான் தொற்று எளிதில் ஏற்படும் என்பதை ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந் துள்ளது. பாதிக்கப்பட்ட சோளத்தில் வளரும் பூஞ்சைகள் அஃப்ளடாக்சின் (aflatoxins) என்கிற இயற்கையான வேதிப்பொருள்களை உற்பத்தி செய்யும், பாதிக்கப்பட்ட சோளத்தை உட்கொள்பவர்களுக்கு வாந்தி, அடிவயிற்றில் வலி, புற்றுநோய் போன்ற பாதிப்புகளை அஃப்ளடாக்சின் ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவில் இது தொடர்பான நேரடி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதே வேளை, 2020இல் பஞ்சாபில் உள்ள குரு அங்கத் தேவ் கால்நடை-விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் முடிவானது, பால் பொருள்களில் அதிகளவு அஃப்ளடாக்சின் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • மேலும் பஞ்சாப், பிற பகுதிகளில் இருக்கும் மாட்டுப் பண்ணைகளில் சோளம் மிக முக்கியமான தீவனமாகக் கால்நடைகளுக்கு வழங்கப்படுவதை அது சுட்டிக்காட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கால்நடை உணவில் அதிகளவு அஃப்ளடாக்சின் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படைப்புழுவின் தாக்கம், அதனால் சோளப் பயிர்களில் பூஞ்சை, அஃப்ளாடாக்சின் உற்பத்தி ஆகியவற்றைப் பற்றி நேரடியாக ஆய்வுகளைத் துரிதப்படுத்த வேண்டியது அவசியம்.
  • இந்தியாவில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அயல் உயிரினங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு உயிரினங்களும் பல சூழலியல் தொகுதிகளில் வசித்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் பதிவுசெய்துள்ளார்கள். அதே வேளை, இந்த உயிரினங்களுடன் பயணிக்கும் தொற்றுநோய்க் கிருமிகளைப் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்த உயிரினங்களால் மனிதர்களுக்கும் உயிர்ப்பன்மைக்கும் ஏற்பட்டிருக்கும்/ ஏற்படப்போகும் நோய்த்தொற்றுகள் பற்றி ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம், அரசு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories