ஆக்கிரமிப்பை அகற்றாமல் வெள்ளப் பாதிப்பைக் குறைக்க முடியுமா?
- வட கிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடங்குவதற்கு முன்பே மழையால் தமிழ்நாட்டில் குளம், ஏரிகளின் கரைகளை உடைத்து, சாலைகளைச் சேதப்படுத்தி, வீட்டுக்குள் புகுந்து, மக்களுக்குப் பெரும் சிரமத்தை வெள்ளநீர் ஏற்படுத்திவிட்டது. ஏறக்குறைய 347 டிஎம்சி நீரை சேமிக்கக்கூடிய 41,127 குளம், ஏரிகளைக் கொண்டுள்ள தமிழகத்தில் வெள்ளச் சேதங்கள் ஏன் ஒவ்வோர் ஆண்டும் தொடர்கின்றன? நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க முடியுமா?
குளங்களின் பயன்கள்:
- பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட குளங்கள், நீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்ததோடு, மழை வெள்ளப் பாதிப்புகளையும் குறைத்துவந்தன. நீர்ப்பிடிப்புப் பகுதியில் மட்டுமல்லாமல், மழைநீரைக் குளங்களுக்குக் கொண்டு செல்லும் வாய்க்கால்களும், நீர் சேமிப்புப் பகுதிகளிலும் அரசு நிறுவனங்களாலும் தனிமனிதர்களாலும் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பாலும், நீர்நிலைகளை ஆழப்படுத்திச் செம்மை செய்யாத காரணங்களாலும், குளங்களின் நீர்க் கொள்ளளவு பெரிதும் குறைந்துவிட்டது. இதனால், சிறிய மழையளவைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துவிடுகிறது.
- நவீன கால்வாய், நிலத்தடி நீர்ப்பாசன முறைகள் வருவதற்கு முன்னால், விவசாயம், கால்நடை வளர்ப்பு, குடிநீர்த் தேவை போன்ற பயன்பாடுகளுக்காகக் குளங்கள் பயன்பட்டு வந்துள்ளன. நவீன நீர் ஆதாரங்களிலிருந்து குளங்கள் பல வகைகளில் மேம்பட்டவை. குளங்கள் சிறியவை, இவற்றை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும்.
- புதிதாகக் குளங்களை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் தேவைப்படும் செலவு, நவீன நீர் ஆதாரங்களுக்கான செலவைவிட மிகவும் குறைவு. குளங்கள் மூலமாக வேளாண் துறையில் நீர்ப்பகிர்வு மேலாண்மை செய்வதும் மிகவும் சுலபம். கால்வாய்ப் பாசனத்தில் ஏற்படுவதுபோல் இல்லாமல், நீர்ப்பகிர்வு தொடர்பான சண்டைச் சச்சரவுகள் குளத்துப் பாசனப் பகுதிகளில் குறைவு.
- சிறு நீர்நிலைகளான குளங்கள், வசதி குறைவான சிறு-குறு விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கு இன்றும் முக்கிய நீர் ஆதாரமாகத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திகழ்ந்துவருகின்றன. மழை பெய்கின்றபோதெல்லாம் குளங்கள் மூலமாகச் சேமிக்கப்படும் நீர், கிணறுகளின் நீர்ச்சுரப்பை அதிகரித்து கிணற்றுப் பாசனம் வளர்வதற்கும், விவசாயம் தங்குதடையின்றி நடைபெறுவதற்கும் உதவுகிறது. இப்படியாகப் பல நன்மைகளைக் கொடுக்கும் குளங்களின் குரல்வளைகள் இன்று நசுக்கப்படுகின்றன.
- குளங்களின் மகத்துவத்தை அறிந்து, அவற்றின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை உருவாக்கி உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், குளங்கள் அதிகம் உள்ள கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பியப் பொருளாதாரக் குழுமங்களின் உதவியுடன் குளங்களைச் சீர்ப்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- இதற்கான புத்துயிர்த் திட்டத்துக்காக 2004-05 மத்திய பட்ஜெட்டில் அதிக நிதியும் அப்போது ஒதுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் குடிமராமத்து, குளங்களின் நவீனமயமாக்கல் திட்டங்கள் மூலமாக, தமிழ்நாடு அரசு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது. எனினும், மழைக்காலத்தில்கூட அவை நிரம்பாமலும், பாசனப் பரப்பளவில் வளர்ச்சி இல்லாமலும் உள்ளன.
குளங்களின் நிலைமை:
- அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளநீர் சேமிப்புக் கிடங்காக இருந்த குளங்கள், தற்போது அழிக்கப்பட்டுவருகின்றன. தொடர் ஆக்கிரமிப்பாலும் தேவையான நிதி ஒதுக்கிக் குளங்களை ஆண்டுதோறும் பராமரிக்காத காரணத்தாலும், நீர்க் கொள்ளளவு குறைந்து பாசனப் பரப்பளவும் கிடுகிடுவெனக் குறைந்துவிட்டது.
- குளங்கள் மூலமாக 1960-61இல் இந்தியா பெற்ற மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவு 46.30 லட்சம் ஹெக்டேர். இது 2019-20இல் 16.68 லட்சமாகக் குறைந்துவிட்டது. இதே காலக்கட்டத்தில், தமிழ்நாட்டின் குளத்துப் பாசனப் பரப்பளவு 9.36 லட்சத்திலிருந்து 3.72 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதாவது, தமிழகத்தின் மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் குளத்தின் பங்களிப்பு 38%லிருந்து 12.66%ஆகக் குறைந்துவிட்டது.
- இதனால், குளத்துப் பாசனம் மூலமாகப் பயிர்ச் சாகுபடி செய்துவந்த விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறியிருக்கக்கூடும். சராசரி அளவைவிட அதிகம் மழைபெய்த ஆண்டுகளில்கூடத் தமிழகத்தில் குளத்துப் பாசனப் பரப்பளவு அதிகரிக்கவில்லை; ஆக்கிரமிப்புகளால் குளங்கள் தொடர்ந்து மூடப்படுகின்றன என்பதை இத்தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
- வேகமான நகர வளர்ச்சியால், நகரங்களுக்கு அருகில் உள்ள குளங்கள் மீது அரசுத் துறைகள், கட்டிடங்கள் கட்டி அடைத்துவிட்டன. பல இடங்களில் குளங்களுக்கு மழை நீர் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுவிட்டன. இந்திய அரசின் நீர்வள நிலைக் குழு 2012-13இல் வெளியிட்டுள்ள 16ஆவது அறிக்கை (Repair, Renovation and Restoration of Water Bodies), அரசின் அமைப்புகளால் குளங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
- இந்தியாவில் மொத்தமாக 5.92 லட்சம் குளங்கள், சிறு நீர்நிலைகள் உள்ளதாகவும், ஆக்கிரமிப்பு, போதிய பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இவற்றில் தற்போது 72,853 பயன்பாட்டில் இல்லை என்றும் சொல்கிறது ஐந்தாவது குறுநீர்ப்பாசனக் கணக்கெடுப்பு (Minor Irrigation Census, 2013-14).
- மத்திய நீர்வள அமைச்சகம் 2023இல் வெளியிட்டுள்ள நீர்நிலைகள் பற்றிய முதல் மொத்தக் கணக்கெடுப்பின்படி (First Census on Water Bodies), தமிழ்நாட்டில் மட்டும் 7,828 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் ஏறக்குறைய 21% ஆகும். அதாவது, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மொத்த நீர்நிலைகளில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதி தமிழ்நாட்டில் உள்ளது.
செய்ய வேண்டியவை:
- தமிழ்நாட்டில் குளங்கள் பெரும்பாலும் சங்கிலித்தொடர்புடன் (cascade system) அமைக்கப்பட்டுள்ளன. மேல் பகுதியில் உள்ள குளம் நிரம்பினால், அதன் உபரிநீர் கீழ் உள்ள குளத்துக்கும், அதன் பிறகு அடுத்த குளத்துக்கும் செல்லும். ஆனால், ஒருபுறம் அரசுத் துறைக்குத் தேவைப்படும் கட்டிடங்கள் (சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், பொதுக்கழிப்பிடம், சுகாதார நிலையங்கள்) கட்டப்படுவதாலும், மறுபுறம் அரசியல்வாதிகளும், ஆதிக்க வர்க்க விவசாயிகளும், நீர்வழித் தடங்களை விவசாயம் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வதாலும், இந்தச் சங்கிலித்தொடர்பு பெரும்பாலான இடங்களில் சிதைக்கப்பட்டுள்ளது.
- குளங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள செல்வாக்கு படைத்த பெரிய தனியார் நிறுவனங்கள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பணக்கார ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், குளங்களில் தண்ணீர் பெருகுவதை விரும்பாத காரணத்தால், குளத்துக்குச் செல்லும் நீர்வழிப் பாதையைச் சுயலாபத்துக்காக அடைத்துத் திசைதிருப்பிவிடுகின்றன. இதனால், குறைந்த அளவு மழை பெய்யும் காலத்தில்கூட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.
செய்ய வேண்டியவை:
- மதுரை உயர் நீதிமன்றக் கிளை செப்டம்பர் 6, 2014இல் அளித்துள்ள தீர்ப்பை மதித்து, நீர்நிலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
- பல்வேறு காரணங்களால் பொதுப்பணித் துறை குளங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பல காலமாகப் பாவித்துவருகிறது. எனவே, தமிழ்நாட்டு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம் 2000 (சட்ட எண் 7/2006) கூறியுள்ளதுபோல், அனைத்துக் குளங்களையும் மேலாண்மை செய்யும் அதிகாரத்தை விவசாயிகளிடம் ஒப்படைத்தால், குளங்கள் புத்துயிர் பெறுவதோடு, வெள்ளப் பாதிப்பையும் குறைக்க முடியும்.
‘குளங்களை நவீனமயமாக்கல்
- மறுசீரமைப்புத் திட்ட’த்தில் குளங்களில் உள்ள வண்டல் மண்ணை நீக்கி நீர்க் கொள்ளளவை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது போதாது, ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ள, திருப்பிவிடப்பட்டுள்ள நீர்வரத்து வாய்க்கால்களைச் சரிசெய்து, மழைநீர்க் குளத்துக்குத் தங்குதடையின்றிச் சென்றுசேர முக்கியத்துவம் கொடுத்தால், மழை வெள்ளம் ஏற்படாமல் குறைக்க முடியும்.
- குளங்களைத் தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் அவற்றின் நீர்க்கொள்ளளவை அதிகரித்து வெள்ளச் சேதத்தைக் குறைக்க முடியும். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது குளங்களைப் புனரமைப்பு செய்ய வேண்டும். பெரிய தொழில் நிறுவனங்கள் நடத்தும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலமாக, குளங்களைச் சீரமைத்துப் பாதுகாக்க அரசு முயல வேண்டும். புனரமைப்புப் பணிகளுக்கான பொறுப்பைக் கிராம நிர்வாகத்திடமும், மதிப்புமிக்க அரசுசாரா அமைப்புகளிடமும் கொடுத்தால், குளங்களின் பராமரிப்பு மேம்படும்.
- அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தால், மழைப் பொழிவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, சில மணி நேரத்திலேயே பெய்துவிடுகிறது. அந்தப் பின்னணியில் குளங்களை முறையாகப் பராமரித்தால் பாதிப்புகளையும் நிச்சயமாகக் குறைக்க முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 11 – 2024)