- தமிழகத்தில் இன்று ஆசிரியர் சமூகத்தினரிடையே விவாதிக்கப்பட்டுவரும் இரண்டு முக்கியமான விஷயங்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெரும்பான்மையினர் தழுவியிருக்கும் தோல்வியும் விரைவில் நடத்தப்படவிருக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வும்தான். தேசிய கல்விக் கொள்கை பற்றிய விவாதங்கள்கூட அதற்குப் பிறகுதான்.
- ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும், ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரைக்கும் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஏறக்குறைய 99% ஆசிரியர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். தற்போது நடத்தப்பட்டது தகுதித் தேர்வு மட்டுமே, பணி நியமனத்துக்கான தேர்வு அல்ல என்றும், ஏற்கெனவே தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களே காத்திருப்போர் பட்டியலில் இருப்பதால், சமீபத்தில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
பகிரங்க ஏலங்கள்
- மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பள்ளிகளில் பணிபுரிந்துவந்த ஆசிரியர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்குப் பணிமாற்றம் செய்துள்ள அரசின் நடவடிக்கைகளும் ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. மேனிலைப் பள்ளி ஆசிரியர்களை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாகப் பதவியிறக்கம் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. முந்தைய ஊதியமே தொடர்ந்து வழங்கப்படும் என்று அரசு சொன்னாலும், மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுத்துப் பழகிய ஓர் ஆசிரியர், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்வது அவ்வளவு எளிதானதல்ல. இன்னொருபக்கம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் நீண்ட காலமாகப் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் இன்னமும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சிபெறவில்லை என்பதும், அதன் காரணமாகப் பணியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
- அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் பகிரங்கமாக ஏலம்போட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. பணியிட மாறுதலை விரும்பாமல் சொந்த ஊரிலேயே இருக்க விரும்புபவர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணம் கொடுத்து வேலைவாங்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை யதார்த்தம். ஆனால், அவ்வாறு பணி வாய்ப்பைப் பெற்ற பிறகும்கூட தகுதித் தேர்வு எழுதி வெற்றிபெறும் நிலையை அவர்கள் அடையவில்லை என்பது, தாம் ஏற்றுக்கொண்ட பணியின் மீது அவர்களுக்கு அக்கறையோ ஆர்வமோ இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இத்தனைக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் என்பது, பள்ளிப் பாடநூல்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண் குறைந்துவிட்டது என்று மாணவர்களுக்கு அறிவுரை சொல்லும் ஆசிரியர்கள், அதே பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் தோல்வியைத் தழுவுவதை என்னவென்பது?
உழைப்புச் சுரண்டல்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. ஏறக்குறைய 20 ஆண்டுகளாகக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததன் விளைவு இது. தகுதியுள்ள பல ஆசிரியர்கள் மிகவும் குறைவான மதிப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுவருகிறார்கள். உயர் கல்வித் துறையில் அரசாங்கமே முன்னின்று நடத்திய உழைப்புச் சுரண்டல் இது. ஒப்பீட்டளவில், தனியார் கல்வி நிறுவனங்கள் சில ஆயிரங்களைக் கூடுதலாகக் கொடுத்து இன்னும் பல மடங்கு கூடுதலாக உழைப்பைச் சுரண்டுகின்றன.
- கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கௌரவப் பேராசிரியர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பூதியத்தைக் கொண்டு அவர்களது அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை நிலை. உயர் கல்வி என்பது உலகளவில் தினந்தோறும் தத்தம் துறைகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வதையும் விவாதிப்பதையும் உள்ளடக்கியது.
- ஆய்வு நூல்கள், பன்னாட்டு ஆய்விதழ்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்பதைக் கணக்கில்கொண்டே பேராசிரியர்களுக்கான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கௌரவப் பேராசிரியர் தனக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தைக் கொண்டு சில புத்தங்களைக்கூட வாங்க முடியாது.
ஆய்வுத் துறை அவலங்கள்
- ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, ஆட்சிப் பணித் துறை அதிகாரிகளுக்கு இணையாகப் பேராசிரியர்கள் ஊதியம் பெறுகிறார்கள். அவர்களாவது, துறைசார்ந்த அறிவை விரிவுபடுத்திக்கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளின்படி துணைப் பேராசிரியராகவும் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெறுவதற்கு முனைவர் பட்டத்தோடு ஆய்விதழ்களில் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், முனைவர் பட்டத்துக்கான ஆய்வேடுகளைச் சமர்ப்பிப்பதில் நடைமுறையில் உள்ள அத்தனை முறைகேடுகளும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதிலும் நடந்தேறுகின்றன.
- பன்னாட்டு ஆய்விதழ்கள் எனும் பிரிவில் மானியக் குழுவால் பட்டியலிடப்பட்டுள்ள பல இதழ்கள், பிரசுரத்துக்காக அனுப்பப்படும் கட்டுரைகளுக்குப் பரிசீலனைக் கட்டணமாகப் பல ஆயிரங்களைக் கோருகின்றன. கட்டுரைகளின் உள்ளடக்கத்தைக் காட்டிலும் நுழைவுக் கட்டணமே பிரசுர வாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன. இந்த நடைமுறைகள், பேராசிரியர்கள் தங்களது துறைசார்ந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற மானியக் குழுவின் நோக்கத்துக்கே எதிராக இருக்கின்றன. பணம் வாங்கிக்கொண்டு ஆய்வுக் கட்டுரை எழுதித் தரவும் பிரசுர வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் முகவர்கள் இருக்கிறார்கள் என்பது இன்றைய உயர் கல்வி ஆய்வுத் துறைக்கே ஓர் அவமானம்.
நம்பகத்தன்மை தேவை
- விரைவில் நடத்தப்படவிருக்கும் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வில் பணியனுபவம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால், நூற்றுக்கணக்கான கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வில் காலம் தாழ்ந்த பிறகாவது ஒரு வசந்தம் வீசக்கூடும். ஆனால், அந்த நேர்முகத் தேர்வும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வுகள்போல அமைந்துவிடுமோ என்ற அச்சமும் அவர்களிடையே நிலவுகிறது.
- எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டிருந்தால் தகுதியான மாணவர்கள் மேலும் சிலர் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு ஓர் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இவ்வளவு காலமும் கௌரவப் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் ஒரு எழுத்துத் தேர்வை எதிர்கொண்டால் அதை வெற்றிகொள்ளும் நிலையில் இருக்கிறார்களா என்பதும் சந்தேகமே. அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் நிலையில்தான் அவர்களும் இருக்கிறார்கள்.
- ஆசிரியர் என்பவர் தொடர்ந்து கற்பிப்பவர் மட்டுமல்ல: தொடர்ந்து கற்க வேண்டியவரும்கூட. தான் சார்ந்திருக்கும் அறிவுத் துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு வித்திடுபவர். அதற்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்துக்கொள்பவர். ஊதியம் என்பது அவரது அறிவுப் பங்களிப்புக்கு அளிக்கப்படும் சிறு சன்மானம்தான். ஆனால், இன்று ஆசிரியர் பணி என்பது நிரந்தரமான பணிவாய்ப்பு, கை நிறையச் சம்பளம் என்பதாக மட்டுமே பொருள்கொள்ளப்படுகிறது.
- கற்றறிந்து பெற்ற அறிவை மறக்காமல் இருக்கவும் மேலும் மேலும் அதை விஸ்தரித்துக்கொள்ளவுமே கல்விப் பணியைத் தேர்ந்தெடுத்தார்கள் நம்முடைய முன்னோர்கள். ஆனால், இன்று நாம் அதை வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளில் ஒன்றாக மட்டுமே சுருக்கிக்கொண்டிருக்கிறோம். வேலை கிடைத்ததோடு கல்வி முற்றுப்பெற்றுவிடுகிறது. ஆசிரியர் என்பவர் தன் வாழ்நாள் முழுவதும் மாணவராக இருக்க வேண்டும். அதற்குத் தயாராக இல்லாதவர்கள் தகுதியானவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கியாவது நிற்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05-09-2019)