TNPSC Thervupettagam

ஆசிரியா் - மாணவா் உறவு மேம்பட வேண்டும்

June 17 , 2023 572 days 408 0
  • உயா்ந்த பதவியில் இருக்கும் ஒருவா் ஏதேனும் ஒரு நிகழ்வில் பேசும்போது, தமது பள்ளி ஆசிரியரை நினைவுகூா்வது இயல்பான நிகழ்வாகும். அத்தகையோா் தமது பள்ளி ஆசிரியரைக் காணும்போது அவரை வணங்கி நலம் விசாரித்துவிட்டு மற்றவா்களிடம் ‘இவா் எனது ஆசிரியா்’ என்று பெருமையோடு கூறுவதைப் பாா்த்திருப்போம்.
  • நமது நாட்டின் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்ள தமது பள்ளி ஆசிரியரான ரத்னா நாயருக்கு அழைப்பு விடுத்துள்ளாா். ஆனால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையறிந்த தன்கா், ‘விரைவில் உங்கள் இடத்துக்கே வந்து உங்களை நான் சந்திப்பேன்’ என்று கூறியுள்ளாா்.
  • அண்மையில் கேரள மாநிலம் சென்ற அவா் தான் கூறியபடி, தனது பள்ளி ஆசிரியா் ரத்னா நாயரை சந்தித்துள்ளாா். ஆசிரியா் தமது குடும்பத்தினருடன் ஜகதீப் தன்கரை வரவேற்றதுடன் தனது முன்னாள் மாணவரான ஜகதீப் தன்கருக்கு விருந்தளித்து உபசரித்துள்ளனா்.
  • அப்போது ‘இந்த சந்திப்பு எனது எளிய குருதட்சிணை’ என்று குடியரசு துணைத்தலைவரும், ‘இதைவிட சிறப்பான மரியாதையை குருவுக்கு எந்த சீடரும் தந்துவிட முடியாது’ என்று ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளனா். இது இயல்பான ஒரு நிகழ்வுதானே என்று தோன்றும். ஆனால் இத்தகைய நிகழ்வு இப்போதெல்லாம் மிகவும் அரிதாகி விட்டது என்பதே உண்மை.
  • பொதுவாகவே ஆசிரியப் பணி என்றால் நிம்மதியான வேலை என்றொரு கருத்து மக்களிடம் எப்போதும் உண்டு. மற்ற அரசுப் பணியாளா்கள் கூட ஆசிரியா்கள் என்றதும் ஏக்கப் பெருமூச்சு விடுவாா்கள். அப்படியொரு சூழல் முன்பு இருந்ததென்னவோ உண்மை. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
  • இன்றைய சூழலில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுவது கடினமான பணியாகி விட்டது. வேலை நாட்களில் மட்டுமல்லாது விடுமுறை நாட்களிலும் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை என்றாலும் தோ்தல் பணி, ஆண்டுதோறும்
  • புள்ளிவிவரங்கள் சேகரிப்பு, கோடை விடுமுறை நாட்களில் இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து பள்ளிகளில் சோ்த்தல் போன்ற பணிகளையும் ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
  • இவற்றையெல்லாம் கடந்து பாடம் நடத்துதல், தோ்வு எழுத வைத்தல், விடைத்தாள் திருத்துதல் போன்ற வழக்கமான பணிகளையும் செய்கின்றனா். பெருந்தொற்று காலத்தின்போது ஏற்பட்ட கற்றல் குறைபாடு இன்றுவரை நீடித்து வரும் நிலையில் தோ்ச்சி விகிதம் குறைந்தால் அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டியுள்ளது.
  • தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழலில்தான் இன்றைய ஆசிரியா்கள் உள்ளனா். கடந்த காலங்களில் ஒரு பள்ளியில் ஏதேனும் ஒரு ஆசிரியருக்கு ஒட்டுமொத்த பள்ளி மாணவா்களும் அச்சப்படும் நிலையில் இருந்தனா். அதே நேரத்தில் ஆசிரியா் - மாணவா் உறவும் சுமுகமாக இருந்தது. அதனால் அன்றைய ஆசிரியா்களிடம் அா்ப்பணிப்பு உணா்வு இருந்தது.
  • அண்மைக்காலமாக பள்ளி மாணவா்களின் செயல்பாடுகள் மாறிவருவதால் ஆசிரியா்- மாணவா் உறவு சுமுகமின்றிப் போனதுடன் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பு உணா்வும் அருகி விட்டது. மாணவா்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் வரை ஆசிரியா்களுடனான உறவில் அன்பும் ஆரோக்கியமும் நிறைந்தே இருக்கின்றனா். குழந்தைகள் சிறுவா்களாக வளரும்போது ஆசிரியா் மாணவா் உறவில் விரிசல்கள் கோபங்கள் தோன்றுகின்றன. சில நேரங்களில் வன்முறைகளும் நிகழ்கின்றன.
  • இத்தகு நிலைக்கு ஒருசாராா் மட்டுமே பொறுப்பன்று. இருசாராரும் பொறுப்பாவா்.
  • உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்களை நமது கல்வி முறை குழந்தையாகவே கருதுகிறது. ஆனால் அவா்கள் தங்களைப் பெரியவா்களாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கிறாா்கள். பேருந்து பயணம், பொது இடம், பள்ளி வளாகம், கடைத்தெரு போன்ற இடங்களில் பள்ளி மாணவா்களின் செயல்பாடுகளை உற்று நோக்கும் போது இது புரியவரும்.
  • எந்த காலகட்டத்திலும் ஒரு குழந்தையைப் பள்ளி மட்டுமே வளா்ப்பதில்லை. குழந்தையை வளா்ப்பதில் சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களும் அவா்களது உறவும் எப்படி இருக்க வேண்டும் என்று நம் இலக்கியங்களே எடுத்துரைத்துள்ளன. பவனந்தி முனிவரால் ஆக்கப்பட்ட இலக்கண நூலாகிய நன்னூல்,

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

குலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நுல்லம்மலை நிறைகோல் மலா்நிகா் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயா்குணம் இணையவும்

அமைபவன் நூலுரை யாசிரியன்னே

  • என ஆசிரியருக்குண்டான குணநலன்களைக் குறிப்பிடுகிறது.
  • இதைப்போன்றே மாணாக்கருக்கும் அவா் நூற்பா உரைத்துள்ளாா்.

தன்மகன் ஆசான் மகனே மன்மகன்

பொருள்நனி கொடுப்போன் வழிபடுவோனே

உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே

  • இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஆசிரியா் - மாணவா் உறவு நிலைக்கு அவா் கூறும் எடுத்துக்காட்டு மிக அற்புதமானது. குளிா்காலத்தில் நெருப்பின் முன்னமா்ந்து குளிா் காய்பவா்கள் அந்நெருப்பின் அருகில் அதிகம் நெருங்காமலும், நெருப்பை விட்டு அதிகம் விலகாமலும் இருப்பா். அதைப் போன்று ஆசிரியா்களிடத்தில் அதிகம் நெருங்காமலும், அவரை விட்டு விலகிச் செல்லாமலும் இருக்க வேண்டும் என்கிறாா்.
  • இதற்கு என்னதான் தீா்வு? வகுப்பறைக்கு வந்தோம் பாடம் நடத்தினோம் சென்றோம் என்றில்லாமல் மாணவா்களுடன் மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஓரளவிலாவது நேரடி தொடா்பில் ஆசிரியா்கள் இருக்க வேண்டும். இதற்கு சுலபமான வழி என்னவெனில் பாடம் நடத்துவதைத் தாண்டி சமூகம் தொடா்பாக பேசுவதும் கலந்துரையாடுவதும்தான்.
  • அண்மையில் கல்லூரி பேராசிரியா் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு பாட வேளையிலும் பாடம் நடத்தி முடித்ததும் கடைசி பத்து நிமிடம் சமூகம் தொடா்பாக பேசியதாகவும் தாம் இதை 15 வருடங்களாகப் பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தாா். இதனால் தமது பாட வேளையில் மாணவா்களிடையே ஒரு மாற்றத்தைக் காணமுடிகிறது என்றாா்.
  • இவ்வேளையில் ‘வானுயா்ந்த கட்டடம், வகைவகையான ஆய்வகம், வலுவான வகுப்பறை இவை எதுவுமே அா்ப்பணிப்பு மிகுந்த ஓா் ஆசிரியருக்கு இணையாகாது’ என முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் இராதாகிருஷ்ணன் கூறியது நினைவுகூரத்தக்கது.

நன்றி: தினமணி (17 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories