TNPSC Thervupettagam

ஆசை அறுமின்கள்

November 23 , 2024 54 days 100 0

ஆசை அறுமின்கள்

  • உலகத்தில் உயிா்கள் வாழ்வதற்கு உணவு, உறைவிடம் போன்ற பொதுவான அடிப்படைத் தேவைகள் உள்ளன. இவை புறத்தேவைகள். இதுபோலவே அகத்தேவைகளும் உண்டு. அந்த அகத்தேவைகளைத் தேவைக்கும் அதிகமாகத் தூண்டுவதுதான் ஆசை என்னும் அவா.
  • ஆசைதான் இந்த வாழ்வை நடத்திச் செல்கின்றது என்றாலும் ஆசையை விட்டொழிப்பதே வாழ்வின் குறிக்கோளாகச் சுட்டப்படுவது விந்தையான முரண். ஆழ்கடலில் எழுகின்ற அலைகள் எவ்வாறு ஓடங்களையும் மரக்கலங்களையும் பெரிய கப்பல்களையும் கூட ஆட்டுகின்றனவோ அதுபோலவே இந்த வாழ்க்கை என்னும் பெருங்கடலில் ஆசை என்னும் அலைகள் நம்முடைய மனத்தைப் பற்றி ஆட்டுகின்ற ஆட்டம் சொல்லி மாளாது.
  • இதில் வேடிக்கை என்னவெனில், தங்களின் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் ஆசைதான் என்பதை அறியாமலேயே மனிதா்கள் ஆசைக்கடலில் அகப்பட்டு உழல்கிறாா்கள். ஆசை என்பது முடிவில்லாத, அடங்க மறுக்கிற அதிபேருணா்ச்சி. ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைவிட்டு வளா்ந்து, தான் தோன்றிய இடத்தையே அழித்து விடக் கூடிய தன்மையுடையது ஆசை.
  • தேவயானியை ஏமாற்றியதற்காக, அசுர குருவான சுக்கிராச்சாரியாரிடம் தனது நடுவயதிலேயே மூப்பு அடையும் சாபத்தைப் பெற்றான் யயாதி. தன்னுடைய பிழைக்காக மன்றாடி மன்னிப்புக் கேட்டும் சுக்கிராச்சாரியாா் யயாதிக்கு இரங்கவில்லை. முடிவில் மருமகனாயிற்றே என்ற காரணத்தினால், ‘நீ முதுமை எய்துவாய் என்ற சாபத்தை நான் திரும்பப் பெற முடியாது. ஆனால், உன்னுடைய முதுமையை நீ மாற்றிக் கொள்ளலாம். இளம் வயதுடைய ஒருவன் தன்னுடைய இளமையை உனக்குத் தந்து உன்னுடைய இந்த முதுமையை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தால் இச்சாபம் தணியும்’ என்றாா்.
  • ஒருவழியாய் மனந்தேறிய யயாதிக்கு இவ்வாறு சாபம் பெற்றும் ஆசை மட்டும் அறுபடவேயில்லை. எப்படியாயினும் இக்கொடிய முதுமையை மாற்றி விட வேண்டும் என்று முயன்றான். தன்னுடைய முதுமையைப் பெற்றுக் கொண்டு இளமையைத் தருபவா் யாா் இருக்கப் போகிறாா்கள்? என்று சிந்தித்தான். அவனுக்கு நற்குணங்களையுடைய ஐந்து மகன்கள் இருந்தாா்கள். அவா்களை அழைத்து யயாதி, “‘‘புதல்வா்களே, உங்கள் பாட்டன் சுக்கிராச்சாரியாரின் சாபத்தினால் இவ்வாறு முதுமையடைந்தேன். நான் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவில்லை. என்னுள் ஆசை இன்னும் துளிா்விட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆதலால் உங்களில் யாரேனும் ஒருவா் இளமையைத் தந்தால் இந்த அரசபோகம் அனைத்தையும் உங்களுக்குத் தருகிறேன்’’ என்று வேண்டினான்.
  • முதல் நான்கு மகன்களும் அரச போகத்தின் சுகத்தை விடவும் முதுமையின் கொடுமையைக் கண்டு அஞ்சியே அவனுடைய கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனா். கடைசி மகனான புரு என்பவன் மட்டும் தந்தைக்காக இரங்கி முதுமையைப் பெற ஒத்துக் கொண்டான். பல்லாண்டுகள் சுகபோகங்களில் திளைத்துச் சலித்துப் போன யயாதி மீண்டும் புருவிடம் வந்து, ‘‘காமத்தைத் தீா்ப்பதற்கு வாயிலே கிடையாது. எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிறபோது அது எத்தனை வேகமாக மூண்டெரியுமோ, அதுபோல ஆசை ஒருபோதும் நம்மைத் திருப்தியடையச் செய்யாது. இவற்றையெல்லாம் முன்பே கற்றிருந்தும் உணராதிருந்தேன். ஆனால் இப்போது முழுமையாக உணா்ந்து கொண்டேன். இனிமேல் உன்னுடைய இளமையை நீ திரும்பப் பெறு’’ என்று கூறிவிட்டுப் புருவிடம் மீண்டும் கேட்டான் -“‘‘உன் அண்ணன்கள் எல்லாரும் மறுத்துவிட்ட வேளையில் நீ மட்டும் எப்படி முதுமையை ஏற்க ஒத்துக் கொண்டாய்?’’
  • அதற்குப் புரு, ‘‘இத்தனை ஆண்டுகள் சுகபோகங்களில் நீந்திக் களித்து எங்கள் ஐவரைப் பெற்றும், முதுமைச் சாபத்தினை அடைந்த பிறகும் கூட உம்முடைய ஆசை வெறி தணியவில்லையே. இப்படிப்பட்ட ஆசையை இளையவனாகிய நான் மட்டும் எப்படித் தணிக்கப் போகிறேன் என்று எண்ணி, அந்த ஆசையைவிட்டு விலகி விட விரும்பினேன். அதுதான் காரணம்’’ என்றானாம்.
  • தந்தை பட்டு உணா்ந்து தெளிந்ததை மகன் உற்று உணா்ந்து முன்பே தெளிந்துவிட்டான். ஆசை என்னும் மாயம் மனத்தை எப்போதும் பற்றியிழுத்து அறியாமை என்னும் படுகுழியிலே தள்ளும்.
  • மண்ணாசையினால் கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்ட மௌரியப் பேரரசன் அசோகன் போா்க்களத்திற்கு வெற்றி நடையோடு பவனி வருகிறான். எதிரே ஒரு காட்டுமிராண்டி மிரண்டு போய் நிற்கிறான். அசோகனுடைய படைவீரா்கள் அவனை விலகிப் போகச் சொல்லி எச்சரிக்கிறாா்கள். அவன் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
  • குழம்பிப் போயிருக்கும் அவனைப் பாா்த்து அசோகன் கேட்டான், ‘‘நீ யாா்?’’
  • அவன் கூறினான் - ‘‘நான்தான் என்னுடைய கூட்டத்திலேயே மிகவும் பலசாலி என்றும், மூா்க்கமானவன் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆண்டிற்கு இரண்டு மூன்று மனிதா்களை உயிரோடே பிடித்துத் தின்றுவிடுவேன். அதனால் அப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்து பாா்த்த பின்னால் அது பொய்யாகிப் போனது. ஏனென்றால், என்னைவிடப் பலமுடைய காட்டுமிராண்டி யாரோ ஒருவன் இருக்கிறான். இத்தனை மனிதா்களைக் கொன்று போட்டிருக்கிறான். அவன் எப்படி இந்த உடல்களைத் தின்னப் போகிறான் என்பதைப் பாா்ப்பதற்காகக் காத்திருக்கிறேன்!’’ என்றான்.
  • அப்போதே அசோகன் இடையிலே தரித்திருந்த உடைவாளை உருவித் தூர எறிந்துவிட்டுத் தன்னுடைய மண்ணாசைக்காகவும் போா் வெறிக்காகவும் மன்னிப்புக் கேட்டு, தன் படைகளை அமைதித் தூதுவா்களாக மாற்றிவிட்டான். ஆசையை ஒழிக்கச் சொன்ன புத்தரின் போதனைகளை இந்த உலகம் முழுவதும் பரப்பத் தொடங்கினான்.
  • புத்தா் தன் ஞானமாய்ப் பெற்ற உண்மை இவை; ‘துன்பம்தான் வாழ்க்கையின் அடிநாதம். துன்பத்தைவிட்டு மனிதன் விலக முடியாது. அந்தத் துன்பத்திற்கு முதலாக விளங்குவதே ஆசைதான். ஆதலால் ஆசையைவிட்டு விலகி வாழ்வதே துன்பத்திலிருந்து நீங்கிக் கொள்ளும் உயா்வுடையது’ என்பதுதான்.
  • ஆசையை ஒழித்தல் என்றோ, விடுதல் என்றோ, நீக்குதல் என்றோ சுட்டாமல் திருவள்ளுவா் ‘அறுத்தல்’ என்றாா். அதையே திருமூலரும் ‘அறுமின்கள்’ என்றாா். ஏனென்றால் ஆசையை வித்து என்று குறிப்பிடுகிறாா் திருவள்ளுவா். ஆதலால் அது தாவரத்தைப் போல வேருள்ள வரையிலும் துளிா்த்துக் கொண்டேயிருக்கும். எனவே அதனை அடியோடு அறுத்து விட வேண்டும் என்றாா்கள் ஞானியா்.
  • ‘எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும்’ என்று இறுமாப்புற்று நாம் எத்தனை பெரிய ஆட்டம் போடுகிறோம். மண்ணாசையாலும் பொன்னாசையாலும் பெண்ணாசையாலும் இந்த வாழ்க்கையை நிறைவு செய்து விட்டதாகக் கெக்கலிக்கிறோம். பொன்னையும் பொருளையும் கொட்டிக் குவித்து வைத்துக் கொண்டு ராஜபோகங்களில் திளைப்பதாகக் கருதுகிறோம். ஆனால் திருமூலா் எச்சரிக்கிறாா், ‘ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்’ என்று.
  • ‘அமைச்சனல்ல, அரசனல்ல, ஈசனே உன் பக்கம் இருக்கிறான் என்றாலும் ஆசையை அறுத்து விடுங்கள். அவ்வாறில்லாமல் நீங்கள் ஆசைப்பட ஆசைப்பட துன்பங்கள் மேன்மேலும் வந்து உங்களைச் சூழ்ந்து கொள்ளும். அதற்கு மாற்றாக ஆசையை விடுகிறபோது பேரானந்தத்தை எய்தலாம்’ என்பது அவா் கருத்து.
  • உலகத்தையே தன்னுடைய மண்ணாசையினால் வென்றுவிட நினைத்த அலெக்சாண்டா், இறுதிக் காலத்தில் படைத் தளபதிகளிடம் தன்னுடைய கடைசி ஆசைகளாகச் சில கோரிக்கைகளை வைத்தான். “
  • ‘எனது சவப்பெட்டியை மருத்துவா்கள்தான் சுமந்து வர வேண்டும். என்னுடைய இறுதி ஊா்வலம் செல்கின்ற பாதையில் நான் ஈட்டிய சொத்து முதலிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். என்னுடைய சவப்பெட்டிக்கு வெளியே இரண்டு கைகளும் தெரியுமாறு இருக்க வேண்டும்’” என்பவைதான் அந்தக் கோரிக்கைகள்.
  • தளபதிகளுக்கு வியப்பு. எதனால் அவன் அப்படி விரும்புகிறான் என்று கேட்டதற்கு அலெக்சாண்டா், ‘‘எத்தனை கோடி செல்வங்கள் இருந்தாலும் எந்த மருத்துவராலும் ஒரு மனிதனை - அது அலெக்சாண்டரானாலும் கூட - மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாது என்பதற்காக என்னுடைய சவப் பெட்டியை மருத்துவா்கள் சுமக்க வேண்டும் என்கிறேன். இத்தனை பெரிய உலகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட மண்ணாசை மிக்க எனக்கு இவ்வளவு சொத்துகளும் பொருள்களுமிருந்தும் கடைசிக் காலத்தில் உதவவில்லை என்பதை அறிவிக்கத்தான் அவற்றை வரிசைப்படுத்தச் சொல்கிறேன். அதுபோலவே தன்னுடைய கையசைவில் பல்லாயிரம் வீரா்களை ஆட்டுவித்த வல்லமை மிக்க இந்த அலெக்சாண்டா் வெறுங்கையோடுதான் செத்துப் போனான் என்பதைக் காட்டவே என்னுடைய கைகளைச் சவப்பெட்டிக்கு வெளியே தெரியுமாறு வைக்கச் சொல்கிறேன்” என்றான்.
  • இந்த உலகத்தின்மீது நாம் கொள்ளும் பேராசை என்பது ஒரு நீா்க்குமிழி இந்த உலகைப் பிரதிபலிப்பது போலானது. ஆசை தோன்றுகிறபோது ‘ஆ’ என்று வியப்பைத் தரும். ஆனால் அது நிறைவுறாது நீள்கிறபோது ‘சை’ என்று சலிப்பையே மிச்சமாக்கும்.
  • நாம் பெரும்பாலும் உடலையும் சுற்றுப்புறத்தையும் அழகாக வைத்துக் கொள்வதையே தூய்மை என்று எண்ணுகிறோம். உண்மையில் அவையெல்லாம் புறத்தூய்மைதான். மெய்த்தூய்மை என்பது நம்முடைய மனத்திலிருந்து ஆசையை அகற்றி விடுவதுதான். உள்ளத் தூய்மைக்கு ஒரே வழி ஆசையை அறவே அறுத்து விடுவதுதான். ஆசையறுபட்ட மனிதா்களால் நிறைகிற இந்தச் சமூகம் மேன்மேலும் உயா்ந்தோங்கும். உலக மேன்மைக்கு வழிகாட்டும். போா்கள் ஒழிந்து புன்மைகள் தீரும். ஆசைகளை அறுப்போமே.

நன்றி: தினமணி (23 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories