TNPSC Thervupettagam

ஆட்கொல்லி ரோபாட்கள்: ஆபத்தை உணராத உலகம்

August 31 , 2023 499 days 454 0
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இன்றைக்குப் பல துறைகளில் மாற்றங்களை ஏற்படுத் திவருகிறது. தொழில்நுட்பம் மனிதர்களுக்கு நண்பனாகவும் பாதுகாவலனாகவும் இருக்க வேண்டும். ஆனால், அதன் கையில் துப்பாக்கியைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன உலக நாடுகள். எந்தவொரு தொழில்நுட்பத்தையும் ஆயுதமாக மாற்றுவது ராணுவத்தின் முக்கிய இலக்கு. செயற்கை நுண்ணறிவு மட்டும் இதில் விதிவிலக்காக இருக்குமா என்ன?
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு ராணுவத்தைப் பலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் ஒரு துறையை உருவாக்கியது. அதன் முக்கிய ஆலோசகராகப் பணிபுரிபவர், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் முதன்மைச் செயலாளரான எரிக் ஸ்மித் என்பதிலிருந்து இவ்விஷயத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
  • அமெரிக்கா என்றல்ல, பல நாடுகள் செயற்கை நுண்ணறிவை ராணுவப் பயன்பாட்டில் ஈடுபடுத்தும் ஆய்வுகளில் இறங்கியிருக்கின்றன. ஆயுதங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்ட ‘ஸ்மார்ட்’ ஆயுதங்களாக மாற்றிக்கொண்டி ருக்கின்றன. தொழில்நுட்பத்தை ராணுவம் பயன் படுத்துவது காலம்காலமாக நடப்பதுதான். இப்போது என்ன புதுச் சிக்கல்?

கடவுளின் கட்டளை

  • நேற்றுவரை தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் மனிதர்களால் தான் இயக்கப்பட்டன. அதிநவீன ஏவுகணை உருவாக்கப்பட்டிருந்தாலும், அது எந்த இடத்தில் தாக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தது என்னவோ மனிதர்கள்தான். ஆனால், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய போர்க் கருவிகள் அப்படிச் செயல்படாது.
  • “முந்தைய தொழில்நுட்பங்கள்/கருவிகள் எவையும் முடிவுகள் எடுக்காது. ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முதல் முறையாகத் தானாகவே முடிவுகளை எடுக்கிறது. இதுதான் அச்சப்பட வேண்டிய விஷயம்” என்கிறார் சிந்தனையாளர் யுவால் நோவா ஹராரி.
  • இன்று செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நுழைந்து ஏற்கெனவே முடிவுகளை எடுத்து நம் வாழ்க்கையின் மீது தாக்கத்தைச் செலுத்திக் கொண்டு தான் இருக்கிறது. உங்களுக்கு வங்கிக் கடன் கொடுக்க வேண்டுமா என்பதில் தொடங்கி, வேலைக்கான உங்கள் விண்ணப் பத்தைத் தேர்வுசெய்வது வரை செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்கள்தான் முடிவெடுக்கின்றன.
  • ஆனால், அந்த அல்காரிதங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று கேட்டால், அதை உருவாக்கிய நிபுணர்களே ‘தெரியாது’ என்கிறார்கள். செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அல்காரிதங்கள் செயல்படும் விதத்தை ‘பிளாக் பாக்ஸ்’ என்கிறார்கள். அதாவது, அது எப்படி இயங்குகிறது என்று தெரியாது. ஆனால், அதன் முடிவுகளை மட்டும் கடவுளின் கட்டளையாக அப்படியே அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

சுயமாகத் தாக்கும் ட்ரோன்கள்

  • இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. தாக்குதலுக்கு ராணுவங்கள் பயன்படுத்தும் டிரோன்கள் முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களால் இயக்கப் படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை டிரோன்கள்யாரைச் சுட வேண்டும், எங்கு வெடிகுண்டு வீச வேண்டும் என்பதை அந்தக் குழுவின் ராணுவ கமாண்டோ முடிவுசெய்வார்; வல்லுநர் சரியான இடத்தில் வெடிகுண்டை வீசுவார்.
  • ஆனால், இப்போது உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு ராணுவ மென்பொருள்களும், செயற்கை நுண்ணறிவு ரோபாட்களும் முழுக்க முழுக்கத் தாமாகவே இயங்குபவை; மனிதர்கள் இயக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் கொடுக்கப்படும் தகவல்களை வைத்து தாமாகவே முடிவெடுக்கும் திறனும் இவற்றுக்கு உண்டு.
  • அமெரிக்கா தொடங்கிப் பல நாடுகள் ராணுவத்துக்கு அதிகமான நிதியை ஒதுக்குவதால், நீங்கள் ராணுவக் கருவி உற்பத்திசெய்யும் ஒப்பந்தத்தைப் பெற்றுவிட்டால் லாபத்தைக் குவித்து விடலாம். சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியில் உருவாகும் செயற்கை நுண்ணறிவு ‘ஸ்டார்ட் அப்’-களின் இலக்கே ராணுவம்தான்.
  • ஏற்கெனவே, தொழில்நுட்பங்கள்மீது மிகுந்த ஆர்வம் காட்டும் ராணுவத் துறையும் புதிதாக வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்து பணத்தைச் செலவழிக்கத் தயங்குவதில்லை. ஏற்கெனவே, தங்கள் நிறுவனங்களில் வலைதளம், செயலிகளில் பயன்படுத்தப் படும் செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களை ராணுவத்துக்காகச் சிறிதளவு மேம்படுத்தி விட்டால் போதும்.
  • ஏற்கெனவே கூகுள் நிறுவனம் தானியங்கிச் செயற்கை நுண்ணறிவு கார்களுக்காக உருவாக்கி வரும் ‘கணினி கண்கள்’ (Computer vision) அல்காரிதங்களைச் சிறிதளவு மேம்படுத்தினால், தானியங்கிடிரோன்களுக்கு அவற்றைப் பொருத்திவிடலாம். குற்றவாளிகளைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களை அமேசான் நிறுவனம் முன்பே உருவாக்கியுள்ளது. அதைக் காவல் துறைக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.
  • கொடுக்கப்படும் தகவல்களிலிருந்தும், ஒரு நபரின் நடவடிக்கைகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும் இவர் குற்றவாளியாகவோ தீவிரவாதியாகவோ இருக்கலாம் என்று முடிவெடுக்கும்செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் சந்தைக்கு வந்துவிட்டன. ‘பிரெடிக்டிவ் போலீஸிங்’ (Predictive policing) எனும் இந்த மென் பொருள்களை ராணுவத்துக்கு விற்பது பெரிய காரியமில்லை!

நிறுவனங்களின் லாபவெறி

  • ‘தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும் முன்பே கணித்து அவர்களை ஒழித்துக்கட்டுவதன் மூலம், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்’ - இதுதான் ராணுவத்தினர் முன்வைக்கும் முதல் வாதம். அடுத்தது, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் வரும்போது ராணுவத்தில் இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றலாம் - இது இரண்டாவது வாதம்.
  • ஆனால், செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களில் பல சிக்கல்கள் இருப்பதாக விமர்சனங்கள் உண்டு. செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்கள் கறுப்பின மக்களைத் தவறுதலாகக் குற்றவாளிகள் ஆக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கறுப்பின மக்களைத் தவறாகக் கைதுசெய்யும் வழக்குகள் அமெரிக்காவில் அதிகமாகிவிட்டன. இதைத் தொடர்ந்து அமேசான் போன்ற நிறுவனங்களே தங்களின் மென்பொருள்களைத் திரும்பப் பெற்ற வரலாறும் உண்டு.
  • ஆனால், செல்வாக்குமிக்க இந்த நிறுவனங்கள், இத்தகைய சிக்கல்களைத் தீர்க்காமல் லாபத்துக்காகத் தவறான செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை அரசுக்கு விற்பதிலேயே குறியாக இருக்கின்றன. இவற்றை எப்படிச் சரிசெய்வது என்கிற வாதம் நடந்து கொண்டிருக்கும் போது, இதே மென்பொருள்கள் அடிப்படையில் ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு நுழைவது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.
  • நாட்டின் பாதுகாப்பு என்கிற அம்சத்தில் மட்டும்கண்ணை மூடிக்கொண்டு செயற்கை நுண்ணறிவு சார்ந்த போர்க் கருவிகளையும், போர் இயந்திரங்களையும் அனுமதிக்கலாமா? இதைப் பற்றிய விவாதங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
  • இப்போதைய செயற்கை நுண்ணறிவு மனிதனைப் போல முழுமையாகச் சிந்திக்கக் கூடியதோ பொது அறிவு கொண்டதோ அல்ல. அது வெறும் கணிதம் அடிப்படையிலானது மட்டும்தான். கணிதத்தின் அடிப்படையில், கட்டுப்பாடில்லாமல் முரட்டுத்தனமாக இயங்கும் ஒரு தொழில்நுட்பத்திடம் துப்பாக்கியையும் வெடிகுண்டையும் கொடுக்கலாமா?

மீறப்படும் விதிகள்

  • அமெரிக்க எழுத்தாளர் ஐசக் அசிமோவ் ரோபாட்களைப் பற்றி எழுதிய சிறுகதை ஒன்றில், சில விதிகளை உருவாக்கினார். இன்றளவும் ரோபாட்களுக்கு அடிப்படையான விதியாக அசிமோவின் விதிதான் கூறப்படுகிறது. அதன் முதல் விதி: மனிதனின் கட்டளைகளை எந்த விதக் கேள்வியும் கேட்காமல் ஒரு ரோபாட் செய்ய வேண்டும்; மனிதர் களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது.
  • இன்றைய ஆட்கொல்லி ரோபாட்களின் அடிப் படையே, அசிமோவின் இந்த விதியை மீறுவதாகத்தான் உள்ளது. ‘எந்திரன்’ திரைப்படத்தில்கூட, கதாநாயகன் உருவாக்கும் ரோபாட்டை அவர் ராணுவத்துக்குத்தான் பயன்படுத்த விரும்புவார். சொல்லப்போனால், பனிப்போர் காலத்தில் ராணுவத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையிலே நிதி கொடுத்து உருவாக்கப்பட்டதுதான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். அதை நிச்சயம் ராணுவத்தினர் பயன்படுத்தவே முனைவார்கள்.
  • நம் கேள்வி எல்லாம் அணுகுண்டுக்கு நிகரான அழிவை ஏற்படுத்தும் இந்தத் தொழில் நுட்பத்தைத் தவறான நபர்களும் தீவிரவாதிகளும் கையில் எடுத்தால் என்ன ஆகும்? அழிவுக்கு யார் பொறுப்பு ஏற்பது? மனிதத்தன்மை இல்லாத இந்த ரோபாட்களின் கையில் ஏன் கொலை ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும்?

நன்றி: இந்து தமிழ் திசை (31– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories