ஆட்சிச் சொல் அகராதிக்குத் தற்காலத் தமிழோடு வந்த ஒவ்வாமை
- தமிழ் வளர்ச்சித் துறையின் சொல்லாக்கப் பணிகள் பல தளங்களில் முனைப்பாக நடைபெறுகின்றன. அதைப் பாராட்டலாம். நாற்பத்து ஆறாயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆட்சிச் சொல் அகராதியாகத் தொகுத்துள்ளது (2022). விமர்சனம் விரோதமாகாது. இதைச் சொல்லி ஆட்சிச் சொல் அகராதி பற்றி என் கருத்துகளாக நான்கை மட்டும் தருகிறேன்:
- அகராதி, ஆங்கிலச் சொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அவற்றைத் துறை வல்லுநர்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம். தமிழின் இணைச் சொற்களுக்கு அது தேர்ந்துகொண்ட தமிழும் மொழிநடையும் தற்காலத் தமிழை விலக்கிவைக்கிறது. அகராதிக் கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை. இணைச் சொற்களுக்கான பயன் எவ்வளவு என்பதை அவதானித்ததாகத் தெரியவில்லை.
மொழி வளர்ச்சிக்குப் பயன்படுமா?
- அகராதியின் சொற்கள் மொழிக்கு என்ன பங்களிப்பு செய்யும்? ‘கைது செய்’ என்பதற்குப் பதிலாக அகராதி தருவதுபோல் ‘தளை செய்’ என்று எழுதினால், ‘கைதி’ என்கிற ஒற்றைச் சொல்லைத் தவிர்த்து ‘தளை செய்யப்பட்டவர்’ என்று எப்போதும் எழுத வேண்டிவரும். அது மற்ற சொற்களோடு பாந்தமாக இணையாது. ‘தளை செய்யப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார்’ என்று எழுத நீங்கள் தயங்கமாட்டீர்களா? அகராதியைப் பின்பற்றி ‘நிவாரணம்’ என்பதை விடுத்து ‘இடருதவி’ என்று சொல்கிறேன்.
- ஆனால், ‘நிவாரணம்’ பயன்படுவதுபோல் அல்லாமல் ‘இடருதவி வரவில்லை’, ‘இடருதவி இன்னும் செல்லவில்லை’, ‘பேரிடருக்கு இடருதவி கேட்டுள்ளோம்’ என்று நிவாரணப் பொருள்களைச் சொல்கிறேனா வேறெதையுமா எனத் தெளிவில்லாமல் சொல்ல வேண்டியிருக்கும். Conscience என்பதன் ‘உளச்சான்று’, ‘மனச்சான்று’ என்கிற அகராதி இணைகளை வைத்து ‘அவர் மனச்சான்றை விற்றுவிட்டார்’ என்று சொல்வோமா? அகராதி தரும் இணைச் சொற்கள் பல இப்படித் தொடர் ஆக்கும் திறன் குறைந்தவையாக உள்ளன.
- Agriculturists debt relief என்பதை, அகராதி தருவதுபோல் ‘உழவர் கடன் இடருதவி’ என்று கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் சொல்லுமா? வாக்காளர்களுக்குப் புரிய வேண்டும் என்றால் ‘விவசாயிகளுக்குக் கடன் நிவாரணம்’ என்றே எழுதுவார்கள். அகராதி, சொல் இல்லாத இடத்தில் புதுச் சொல் படைக்கும் முயற்சியல்ல; வேறு வகை. எழுதுபவர்களின் முதல் அக்கறை படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதா அல்லது மொழித் தூய்மையா?
- தூய தமிழ் பனிப்புகைபோல் தன் பொருளை மறைக்கும். ஊடகங்கள் தங்கள் மொழியின் பனிப்புகை அளவை (fog index) கவனமாகச் சோதிக்கும். அகராதியின் சொற்கள் இந்தச் சோதனையில் தேறாது. புரியும்படி எழுத நினைக்கும் எல்லாருக்குமே இந்தப் பனிப்புகையின் அளவு கவனத்தில் இருக்கும்.
பொருள் இளைக்குமே!
- தவறாகப் பொருள்கொண்ட ஆங்கிலச் சொற்கள் அகராதியில் மலிந்து கிடக்கின்றன. Hindsight ‘பிற்காட்சி’ என்று வருகிறது; அது ‘பின்புத்தி’. Commonwealth இரண்டு சொற்களாகிப் ‘பொது நலம்’ என்றாகிறது. Mock Parliament, mock test இரண்டும் ‘போலி நாடாளுமன்றம்’, ‘போலித் தேர்வுகள்’.
- தற்காலத் தமிழில் ‘போலி’ என்பது ஏமாற்றும் நோக்கம் உடையது. Modernism ‘புதுமைப் பாங்கு’ என்றும் modernization ‘புதுமைப்படுத்தல்’ என்றும் வழக்கமான ‘நவீனத்துவம்’ என்கிற சொல்லைத் தவிர்த்துத் தரப்பட்டுள்ளன. தற்காலத் தமிழில் ‘புதுமை’ என்பது கிட்டத்தட்ட ‘அதிசயம்’ என்ற பொருளில் புழங்குகிறது; நவீனத்துக்கும் புதுமைக்கும் இடைவெளி அதிகம்.
- Purse strings ‘சுருக்குக் கயிறு’ என்கிறது (அமைச்சரவையின் கையில் purse strings - நிதி வழங்கும் அதிகாரம் - இருப்பதாகச் சொல்வார்கள்). Bad blood என்பதற்கு அகராதி தரும் இணை ‘கெட்ட குருதி’. இப்படிச் சில உருவ வழக்குகள் நேர் சொற்களாகக் கையாளப்பட்டுள்ளன. Adviser என்ற சொல் ‘அறிவுரையாளர்’, ‘அறிவுரைஞர்’, ‘கருத்துரையாளர்’. ஆளுநருக்கு ஒரு adviser இருந்தால் அவரை இப்படி அழைக்க முடியுமா? News story என்பது ‘செய்திக் கதை’ என்று வருவதால் இந்த அகராதிக்குச் செய்திகள் எல்லாம் கதைகள்தானோ!
வல்லுநர்கள் உண்டா?
- Competent court குறிப்பிட்ட விசாரணைக்கு அதிகாரம் உள்ளது என்பதாக இல்லாமல், ‘தகுதியான நீதிமன்றம்’ என்று வருகிறது. Non-cognizable offence, ‘சாட்சியில்லாக் குற்றம்’. அகராதியில் ordinance என்பது ‘நெருக்கடி நிலைச் சட்டம்’. சட்டப்பேரவை கூடாதபோது தேவை கருதிப் பிறப்பிக்கப்படுவது ordinance. ‘அவசரகால’ என்பதைத் தவிர்க்கும் ஆர்வத்தில் அகராதி பெரிய குளறுபடிக்கு வழிசெய்திருக்கிறது. அகராதியில் prorogue ‘தள்ளிவைப்பது அல்லது ஒத்திவைப்பது’. இதன்படி சபாநாயகரே சபையை prorogue செய்துவிட இயலும்!
- Abatement of charges என்பது ‘கட்டணக் குறைப்பு’, ‘செலவுக் குறைப்பு’, ‘வரிக் குறைப்பு’ என்று வருகிறது. ஒருவர் மீது நடைபெறும் குற்ற விசாரணை அவர் இறந்துவிடும்போது, அப்படியே இற்றுப்போவதே இந்தத் தொடருக்கான பொருள். Ex-parte என்பதற்கு ‘ஒரு சார்பான’, ‘ஒரு தலையான’ என்று ஒரு தவறான தமிழ் இணை.
- ஆங்கிலச் சொல்லின் அகராதிப் பொருளைத் தனித்தனியாகக் கண்டு தமிழ் இணையைத் தனித்தனியாக உருவாக்குவதை மொழியியல் அறிந்தவர்கள் செய்ய மாட்டார்கள். சொற்கள், மற்ற சொற்களைத் தொட்டு நிற்கும் வலைப்பின்னலில்தான் தங்கள் பொருளை உருவாக்கிக்கொள்கின்றன. இவ்வகை அகராதி முயற்சிகளைப் பற்றி இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
பழந்தமிழே தூய தமிழ்!
- அகராதியில் கணிசமான இணைச் சொற்கள் உயர் வழக்கு, இலக்கிய வழக்கு, அருகிய வழக்கு அல்லது பழந்தமிழ்ச் சொற்கள். எடுத்துக்காட்டுகள்: Aggrieved person, உறுகுறைத் தரப்பினர், உறுகுறையர்; air hostess, வானூர்திப் பாங்கி; blonde, பொன் கூந்தலாள்; Miss. Universe, பேரண்டப் பேரழகி; blood, அரத்தம், குருதி; maintenance work, பேணுகைப் பணி; federalism கூட்டாட்சி மெய்மம்; railway accident, தொடரி நேர்ச்சி; terrorist, தீங்கியலர்; chain smoker, புகையறா வாயர்.
- அகராதிக்குத் தற்காலத் தமிழைப் பொறுத்தவரை ஓர் ஒவ்வாமை. அநேகமாகத் தற்காலத் தமிழ் என்கிற கருத்தாக்கமே அதற்கு அந்நியமாக உள்ளது. அகராதியின் ஆங்கிலத் தலைப்பு glossary என்றும், தமிழில் அதுவே ‘அகராதி’ என்று இருப்பதும், உண்மையில் இந்த அகராதி இந்த இரண்டுமே இல்லாததான வேறு ஒரு வகையாக இருப்பதும் (‘அகராதி’ சொற்களைத் தானே உருவாக்கிக்கொள்வது இல்லை), நோக்கத்தில் தெளிவின்மையைக் காட்டுகிறது. இந்த அகராதி dictionary, glossary என்கிற சொற்களுக்குத் தான் கொடுக்கும் தமிழ் இணைகளைத் தன் தலைப்பில் தானே மறுதலித்திருக்கிறது!
- தமிழைத் தூய தமிழாக்கும் முயற்சியும் நிர்வாகத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியும் ஒன்றேதான் என்பது இந்த அகராதியின் கொள்கை. இந்த அனுமானம் யதார்த்தத்தைப் புறக்கணிக்கிறது. தற்காலத் தமிழை நீக்கிப் பழந்தமிழைக் கைக்கொள்வதுதான் தூய தமிழ் என்பதும் இதன் கொள்கை. தன் Social Dimensions of Modern Tamil (2011) என்கிற நூலில், இ.அண்ணாமலை தூய தமிழ் அதீதமாகப் பழைய தமிழைச் சார்ந்திருப்பதைப் பற்றிப் பேசுகிறார்.
- தமிழ் அடையாளம் பாதிக்கப்படுமோ என்கிற அச்சத்தாலும், தமிழர்களின் உன்னதமான பழைய காலத்தோடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவும் தூய தமிழ் என்கிற ஒற்றைத் தமிழ் நடையை ஊக்குவிக்கிறோம் என்பது இ.அண்ணாமலையின் கருத்து.
- கூடவே, ஒரே மொழிநடையை வற்புறுத்துவது தமிழ் நவீனமாவதற்கு எதிர்ப்போக்காக அமையும் என்றும் சொல்கிறார். தற்காலத் தமிழ் இந்த ‘ஒற்றை மொழிநடை’ என்கிற போக்கிலிருந்து விலகி நிற்பது. அது இலக்கியத் தமிழைப் பேச்சுத் தமிழுக்கு நெருக்கமாக்குவது. ஆட்சிச் சொல் அகராதிக்குத் தற்காலத் தமிழ் மீது வந்த ஒவ்வாமைக்கு வேறு என்ன விளக்கம் இருக்கும்?
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 12 – 2024)