- உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் என்கிற புற உலகச் சிந்தனை குறைபாடு மிக முக்கியமானது. ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி தொடர்பான குறை பாடே தவிர நோயல்ல. ஆட்டிசம் குறைபாடு குறித்துப் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2 ஆம் நாள் ஆட்டிசம் விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஆட்டிசம் பாதித்த குழந்தைகளைப் பெற்றோரின் சரியான கவனிப் பின் மூலம் திறமைசாலிகளாக மாற்ற முடியும் என இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் ஆட்டிசம் குறித்துப் பெற்றோர் கவலையடையத் தேவையில்லை.
- இந்தியாவில் மட்டும் பத்து லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். ஆட்டிசத்தில் பெண் குழந்தை களைவிட ஆண் குழந்தைகளே நான்கில் ஒரு பங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒன்றரை வயதிலிருந்து கணித்துவிடலாம்.
- முன்பெல் லாம் ஆட்டிசம் குறித்த புரிதல் மக்களிடையே குறைவாக இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பரவலாகியிருப்பது வரவேற்கத்தக்கது. நவீன மருத்துவத்தைப் போல் சித்த மருத்து வத்திலும் ஆட்டிசத்துக்குச் சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
ஆட்டிசம் என்றால் என்ன?
- ஆட்டிசம் குறைபாட்டினால் குழந்தையின் உடலில் எந்தக் குறைபாடும் ஏற்படாது. உடல் வளர்ச்சி இயல்பாகவே இருக்கும். ஆனால், குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் இருக்கும். மேலும், மரபுக்கூறுகள், சுற்றுச்சூழல் காரணிகளுக்கு இடையே உள்ள தொடர்பால் மரபணுவின் செயல்பாட்டிலும் வெளிப்பாட்டிலும் ஏற்படும் மாற்றமே ஆட்டிசம் குறைபாட்டிற்குக் காரணமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆட்டிசம் குறைபாட்டைக் கண்டறிவதற்கான மேம்பட்ட ஆராய்ச்சிகள் மருத்துவத் துறையில் நடந்துவருகின்றன.
என்ன காரணம்?
- கருத்தரித்த தாயின் வயது, கர்ப்ப காலத்தில் தாயின் உணவு, கர்ப்பிணியின் உடல் - மன ஆரோக்கியமின்மை, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, மன அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள், தீயப் பழக்க வழக்கங்கள், மன வேதனை உண்டாதல், வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களின் சமநிலை பாதிக்கப்படுவது போன்றவற்றால் குழந்தையின் உடலில் குறைபாடு உருவாகி, அது ஆட்டிசம் குறைபாட்டுக்கு வழிவகுக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
- ஆட்டிசம் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமான சவால்களைச் சந்திக்கிறது. அந்தக் குழந்தைகளைத் திறன்மிக்க ஆட்டிசம் நிபுணர்களிடம் அழைத்துச் செல்லும்போது அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானித்து, அதைத் தொடர்ந்து அளிக்கிறார்கள்.
- நவீன மருத்துவத்தில் செயல்சார்ந்த பயிற்சி, புலன் ஒருங்கிணைப்புப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, இசைப் பயிற்சி, படங்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்புப் பயிற்சி, ஆரம்ப தலையீட்டுப் பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகின்றன. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்துப் பெற்றோர்களுக்கும் ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
சித்த மருத்துவத்தில்
- சித்த மருத்துவத்தில் சமநிலையற்ற வளி, அழல் மற்றும் ஐயம் (வாதம், பித்தம், கபம்) போன்ற முக்குற்றத்தையும் சமன்படுத்தும் சிகிச்சைகள் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. கழிச்சலுண்டாக்கி மற்றும் மலமிளக்கியாகவும் மாந்த எண்ணெயை வளி பாதிப்பைச் சமன்படுத்த பயன்படுத்தலாம்
- சீரகத் தண்ணீர் மற்றும் எண்ணெய் தேய்த்து தலை முழுகுதல் அழல் பாதிப்பைச் சமன்படுத்த உபயோகிக்கப்படுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஆடாதோடை, தூதுவளை, கடுக்காய் போன்ற குடிநீர் வகை களும், மனசாந்தி அடைய மணமூட்டக்கூடிய புகை, வேது, பொட்டணம், தொக்கணம் போன்றவற்றை ஐயம் பாதிப்பைக் குணப்படுத்த பயன்படுத்தலாம்.
- மேலும், குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைக்குக் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றால் ஆன சூரணம், மாந்த எண்ணெய், சீரகக் குடிநீர், சோம்புக் குடிநீர், ஓமக் குடிநீர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்
- சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் அமுக்கரா சூரணம், கஸ்தூரி மாத்திரை, கோரோசனை மாத்திரை, பிரமி நெய், வல்லாரை நெய் போன்றவற்றைக் குழந்தைகளின் மூளை நரம்பை மேம்படுத்த உபயோகப்படுத்தலாம்.
- இவற்றைப் பயன்படுத்தும் முன்பு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அரசு சித்த மருத்துவமனை அல்லது அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவமனைக்கோ அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக் குழந்தையின் உடல் உபாதைக்கு ஏற்றவாறு தக்க மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சித்த மருத்துவ முறையில் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சையை மேற்கொண்டால் அக்குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மேலும், இக்குழந்தைகளை முற்றிலும் குணப்படுத்த இயலாது என்றாலும் அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைத்து இயல்பான வாழ்க்கையை வாழச் சித்த மருத்துவம் உதவுகிறது.
நன்றி: தி இந்து (30 – 03 – 2024)