TNPSC Thervupettagam

ஆணவக் குற்றங்களுக்குத் தனிச் சட்டம் அவசியம்

January 18 , 2024 223 days 218 0
  • பட்டியல் சாதி இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, தஞ்சாவூர் அருகே நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்கிற 19 வயதுப் பெண்ணை அவரது பெற்றோரே தூக்கிலிட்டுக் கொலைசெய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக் கொலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வதற்கு இந்தச் சம்பவம் மற்றொரு சாட்சியமாகியிருக்கிறது.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2020இல் இந்தியாவில் 25 பேர் ஆணவக் கொலையால் உயிரிழந்திருக்கின்றனர். 2021இல் இது 33ஆக அதிகரித்திருக்கிறது. அதேவேளையில், ஆணவக் கொலை வழக்குகள் முறையாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகமானது, 2014க்கு முன்பு வரை ஆணவக் கொலை மரணங்களைக் குற்றப் பிரிவின் கீழ்தான் ஆவணப்படுத்திவந்தது என்பதும் கவனத்துக்குரியது. ஆணவக் கொலைகளுக்குத் தனியாகச் சட்டம் இல்லாததால், பெரும்பாலான வழக்குகள் சாதாரண கொலை வழக்குகளாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன.
  • பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் பழங்குடி, பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக இருந்தால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமே பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரணப் பிரிவுகளிலேயே வழக்குப் பதிவுசெய்யப்படும். அதன்படி பார்த்தால், ஆணவக் கொலை மரணங்கள் ஆவணங்களில் உள்ளதைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.
  • 2012இல் இந்தியச் சட்ட ஆணையம் ஆணவக் கொலைக் குற்றங்களுக்குத் தனிச் சட்டம் இயற்றப் பரிந்துரைத்தது. அந்த அறிக்கையின் பகுதியாக, ‘திருமண உறவுச் சுதந்திரத்தில் குறுக்கிடத் தடைசெய்யும் சட்டத்திருத்த முன்வரைவு உருவாக்கப்பட்டது.
  • ஆனால், இந்தச் சட்டத்திருத்தம் இன்றுவரை நிறைவேறவில்லை என்பது வருத்தத்துக்குரியது, இந்தியச் சட்ட ஆணையத்தின் முன்மாதிரியில் ராஜஸ்தானில் இதற்கான சட்டத்திருத்தம் 2019இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் அந்தச் சட்டத்திருத்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
  • அரச, நீதி அமைப்பைச் சேர்ந்தவர்களே சட்டம் வலியுறுத்தும் திருமண உரிமைக்கு எதிராக இருக்கிறார்கள். கலப்பு மணம் செய்த தம்பதிகள் பலரும் காவல் நிலையங்களில் சரணடையும் தருணங்களில் அங்கு பெரும்பாலும் பஞ்சாயத்துதான் நடக்கிறது எனக் குற்றச்சாட்டுகள் உண்டு.
  • ஐஸ்வர்யா விஷயத்திலும் கொலை செய்யும் முன்திட்டத்துடன் வந்த தந்தை, உறவினரிடமே பேசி அப்பெண்ணை அனுப்பியிருக்கிறார் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர்; இப்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாட்டத்திக்கோட்டை காவல் நிலையத்தில், ஐஸ்வர்யாவின் கணவர் நவீன் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில்தான் அந்தப் பெண் கொல்லப்பட்டதைக் காவல் துறை உறுதிசெய்தது.
  • திருமணம் செய்துகொள்ளும் உரிமை தொடர்பானசக்தி வாகினி எதிர் இந்திய ஒன்றியம்வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை ஒரு தீவிரமான பிரச்சினையாக அங்கீகரித்துள்ளது கவனம் கொள்ளத்தக்கது. இதன்வழி பிரச்சினைக்குத் தனிச் சட்டம் அவசியம் என்பது தெளிவானது. அதுபோல் ஆணவக் கொலை குறித்த முழுமையான ஆவணப்படுத்துதலும் அவசியம். இந்தப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த இன்னும் தீவிர முயற்சிகள் அவசியம்!

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories