- இறுக்கமாகவும் அதீத அழுத்தமாகவும் சமூகத்தில் விரவிக் கிடக்கிறது சாதியம். சாதிச் சங்கங்களும் சாதியரீதியிலான சிலஅரசியல் கட்சிகளும் மக்கள் சமூகத்திடையே சாதியஉணர்வுக்குத் தீனியிட்டுப் பெருந்தீயாய் வளர்த்துக் கொண்டிருக்கின்றன. விளைவு, சாதியம் பற்றுடன் மட்டும் நின்றுவிடாமல் வெறியாகவும் வேரூன்றி வெகு ஆழமாகப் புரையோடிப் போய்க் கிடக்கிறது.
- நகர்ப்புறங்களில் வெளிப்படையாக என்ன சாதி என்று கேட்கப்படாவிட்டாலும் சாதிய உணர்வு என்பது இங்கும் பலரது மனங்களிலும் உள்ளூரப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டுதான் இருக்கிறது. சாதியமும் ஆணவமும் கலந்து ஏற்படுத்தப்பட்ட வன்மக் கொலைகள், இதுவரை கிராமங்கள், சிறு நகரங்களை மட்டுமே ஆக்கிரமித்திருந்த நிலை மாறி, சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரத்தையும் இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி. மதம், சாதி கடந்து சமூகத்தையும் மக்களையும் நேசிப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் இடையே இது பெருத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நவீன யுகத்திலும் சாதி:
- திரும்பும் திசையெங்கும் சாதிவாரியாகத் திருமணத் தகவல் மைய விளம்பரங்கள், தங்கள் சாதியக் குழுக்களுக்குள் மட்டுமே வரன் தேடுவதும் திருமணங்கள் நடத்துவதும் இப்போதும் பெருவாரியாகவே நிகழ்கின்றன. மாற்றுச் சாதி அல்லது மதம் சார்ந்தவர்களிடையே நிகழும் திருமணங்கள் இந்திய அளவில் 5 சதவீதத்தைக்கூடத் தாண்டவில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள்.
- மிகக் குறைந்த அளவில் நிகழும் இத்தகைய திருமணங்களுக்குத்தான் எத்தனை எத்தனை எதிர்ப்புகள்? பெரியார் தலைமையில் நிகழ்த்தப்பட்ட சுயமரியாதைத் திருமணங்கள், பொதுவுடைமை இயக்கத்தவர்களிடையே நிகழ்த்தப்பட்ட சாதி, மதம் கடந்த திருமணங்கள் ஒரு பெரும் திறப்பாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியவையாகவும் இருந்தன.
- கல்வியும் சிந்தனை வளமும் மேம்பட்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நவீனமயமான இக்காலத்தில்தான் சாதி, ஆணவம், கௌரவம் என இல்லாதனவற்றின் பெயரால் நிகழ்த்தப்படும் மனசாட்சியற்ற கொடூரக் கொலைகள் பெருமிதத்துக்கு உரியதாக, அந்தந்தச் சாதிக் குழுக்களிடையே நெய்யூற்றி அக்னியாய் வளர்க்கப்படுகின்றன; கொண்டாடப்படுகின்றன. உண்மையில், பெருமிதத்துக்கு உரியனவா இத்தகைய கொலைகளும் அவை சார்ந்த நடவடிக்கைகளும்?
- இதோ... ஆணவக்கொலைக்குத் தன் அன்பான இணையைப் பறிகொடுத்த ஓர் இளம் குருத்து, தன்னையே மாய்த்துக்கொண்டு பலியாகியிருக்கிறது. இப்போது உங்கள் கௌரவம் பாதுகாக்கப்பட்டுவிட்டதா?
- ஆணவக்கொலைகளுக்கு அந்தஸ்தா - கிராமப்புறங்கள்தோறும் மக்கள் தெய்வங்கள் என்பவை எப்போது உருவாக்கப்பட்டனவோ அப்போதிருந்தே ஆணவக்கொலைகளும் தன் கணக்கை வீரியமாகத் தொடங்கிவிட்டன. பொருளாதார உயர்நிலை மற்றும் சாதியரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட வன்கொலைகளின் நிறம் இப்போது மாறிவிட்டது.
- சோற்றுக்கு வழியற்றவர்களும், கூலி வாங்கி அன்றாடப் பிழைப்பை நடத்துபவர்களும்கூட இன்றைக்கு ஆணவக்கொலையாளிகளாக மாறிப் போயிருப்பதன் பின்னணியில் இருப்பவை சாதியப் பெருமிதமும் சாதிய வெறியும் அல்லாமல் வேறென்ன? இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று.
- எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவரை மணந்துகொண்டால், அது ஆணோ பெண்ணோ எவராயினும், குறி வைக்கப்படுபவர்கள் பட்டியல் சாதியினர்தான்.
- இப்போதோ வெவ்வேறு இடைநிலைச் சாதிகளைச் சார்ந்த இருவர் மணந்துகொண்டாலும் எந்தப் பேதமுமில்லாமல் கொல்லப்படுகிறார்கள். தங்கள் பிள்ளைகளை மணந்துகொண்ட எதிர் சாதியினரைக் கொல்வது என்பதும் மாறி தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கொல்லும் நிலை ஏற்பட்டுப் பல ஆண்டுகளாகிவிட்டன.
என்னதான் தீர்வு?
- 2017இலிருந்து 2021 வரை 203 ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலோ 2003 முதல் 2019ஆம் ஆண்டுவரை 23 ஆணவக்கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அப்போது தெரிவித்தது. இந்தப் புள்ளிவிவரக் கணக்குகளை எல்லாம் கடந்து மேலும் அதிகக் கொலைகள் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
- சாதி ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்குத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்று சட்ட ஆணையம் தயாரித்தளித்த வரைவு ஏற்கெனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுள்ளது. தமிழ்நாட்டிலும்கூட அதற்கான வரைவு பல்வேறு அமைப்புகளால் தயாரிக்கப்பட்டு, அரசிடம் கையளிக்கப்பட்டபோதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை.
- சட்டம் இயற்றுவதால் மட்டுமே இத்தகைய கொலைகள் நிகழாமல் தடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், வரதட்சணை, குடும்ப வன்முறை, பெண்ணுக்கான சொத்துரிமை, பாலியல் வல்லுறவுத் தடைச்சட்டம் எனப் பல்வேறு தடைச்சட்டங்கள் இங்கு மீறப்படுவதற்காகவே இயற்றப்பட்டவையோ என்ற எண்ணம் எழுவதைத் தடுக்க இயலவில்லை.
- இத்தகைய குற்றங்களுக்குத் தண்டனை உண்டு என்பதை அறிந்துதானே மீறல்களிலும் ஈடுபடுகிறார்கள். இந்தப் பிரச்சினைகள் அனைத்திலும் பெண்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பெண்ணைத் தாயாகவும் தெய்வ மாகவும் மதிப்பதாக அலங்காரமாகப் பேசலாம். ஆனால், சக மனிதப் பிறவியாகப் பெண்ணை மதிப்பவர்கள் எத்தனை சதவீதத்தினர் என்பதுதானே இங்கு கேள்வி?
- பெண்ணை ஒரு பொருளாக, பண்டமாக, உடைமையாக நினைக்கும் மனநிலை சமூகத்தில் முற்றிலும் மாற வேண்டும். ஆணைப் போல் பெண்ணுக்கும் மனம் உண்டு; அதில் ஆசைகள், அபிலாஷைகள், சொந்தக் கருத்துகள், விருப்பங்கள் உண்டு என்பதை ஏற்க வேண்டும். அது இங்கு இல்லாததால்தானே பெண் விருப்பத்துக்கு மதிப்பில்லாமல் போகிறது.
- பொதுவாகவே, ஆணோ பெண்ணோ எவராயினும் திருமணம் அவர்களின் சுய விருப்பத்தின்படி நிகழ வேண்டும்; அந்த விருப்பத்துக்கு ஆதரவையும் மதிப்பையும் அளிக்க வேண்டும் என்ற மனநிலையைப் பெற்றோர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
- ஆணும் பெண்ணும் சமம் என்பதுபோலவே அனைத்துச் சாதியினரும் மனிதப் பிறவிகளே என்பதையும் மனமார ஏற்க வேண்டும். காதல் திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்களை அவர்கள் பாதையில் பயணிக்க அனுமதியுங்கள்.
- நன்மையோ தீமையோ எதுவாயினும் அவர்கள் எதிர்கொள்வார்கள். நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக நின்றால் போதும். இதில் மான அவமானங்கள் என எதுவும் இல்லை. இத்தகைய விழிப்புணர்வே சமூகத்தில் மாற்றங்களை விதைக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 04 – 2024)