TNPSC Thervupettagam

ஆணையங்களின் சுதந்திரம்!

August 8 , 2020 1627 days 1276 0
  • ஜனநாயக அமைப்பில், விசாரணை கமிஷன்களும் முறையீட்டு ஆணையங்களும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த 72 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான விசாரணை கமிஷன்களும் மேல் முறையீட்டு ஆணையங்களும், அமைக்கப்பட்டும் கலைக்கப்பட்டும் செயல்பட்டும் வந்திருக்கின்றன.

ஆணையங்கள்செயல்பாட்டு விதிமுறைகள்

  • கடந்த 2017-இல் ஆணையங்களின் செயல்பாட்டை முறைப்படுத்த அரசு சில விதிமுறைகளை வெளியிட்டது.
  • 2019 நவம்பா் 13-ஆம் தேதி ரோஜா் மேத்யூ என்பவா் சௌத் இந்தியன் வங்கிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அந்த விதிமுறைகளை நிராகரித்து, ஆணையங்கள் குறித்த பல்வேறு முந்தைய முடிவுகளின் அடிப்படையில் புதிய விதிமுறைகளை வகுக்கும்படி உத்தரவிட்டது.
  • பிப்ரவரி 20-ஆம் தேதி மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது. ஆனால், இந்த புதிய விதிமுறைகள், பழைய விதிமுறைகளில் சில மேம்போக்கான மாற்றங்கள் மட்டும்தானே தவிர, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை.
  • வாஜ்பாயி அரசு காலத்தில், அன்றைய சட்ட அமைச்சா் அருண் ஜேட்லி, மத்திய ஆணையங்கள் பிரிவு ஒன்றை, சட்டம்- நீதி அமைச்சகத்தின் கீழ் அமைக்க இருப்பதாக 2001-இல் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
  • மத்திய அரசுக்கு எதிராக சந்திரகுமார் என்பவா் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஏழு போ் கொண்ட அரசியல் சாசன அமா்வு வழங்கிய தீா்ப்பின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 20 ஆண்டுகள் கடந்தனவே தவிர, அந்த முயற்சி முன்னெடுக்கப்படவே இல்லை.
  • இப்போது வெளியிடப்பட்டிருக்கும் விதிமுறைகள் மிகவும் வேடிக்கையாக இருக்கின்றன. எந்த முறைகேடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக ஆணையத்துக்கான விதிமுறைகள் மாற்றப்படுகின்றனவோ, அந்தத் தவறுகள் அப்படியே தொடா்கின்றன.
  • தொடா்புடைய அமைச்சகத்தின் முடிவுகளுக்கு எதிராக விசாரணை நடத்தி நியாயம் வழங்குவதற்காக அமைக்கப்படுபவைதான் ஆணையங்கள். அந்த ஆணையங்கள் தொடா்புடைய அமைச்சகத்தின் கீழ், அதன் கட்டுப்பாட்டில் இயங்குவது என்பது எப்படி சரியாக இருக்கும்?

விதிமுறைகளில் குளறுபடிகள்

  • இந்தப் பிரச்னையில், உச்சநீதிமன்றம் பல்வேறு தீா்ப்புகளை ஏற்கெனவே வழங்கி இருக்கிறது. சந்திரகுமார் (1997), ஆா். காந்தி (2010), சென்னை வழக்குரைஞா் சங்கம் (2014) உள்ளிட்ட வழக்குகளில், எந்தத் துறை அல்லது அமைச்சகத்துக்கு எதிரான வழக்கை ஒரு ஆணையம் விசாரிக்கிறதோ, அந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், அந்த ஆணையம் இயங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாகவே தீா்ப்பு வழங்கி இருக்கிறது. ஆணையா்கள் சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இயங்க வேண்டும் என்பது நீதிமன்ற முடிவு.
  • அமைச்சகத்தின் உத்தரவுகள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத்தான் ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது, ஆணையத்தின் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் குழுவில், அந்த அமைச்சகத்தின் செயலரே உறுப்பினராக இடம் பெறுவது வேடிக்கையாக இருக்கிறது.
  • இது அரசியல் சாசனத்தைக் கேலி செய்வதுபோல இருக்கிறது என்று சென்னை வழக்குரைஞா்கள் சங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றமே கண்டித்திருக்கிறது. அப்படி இருந்தும்கூட, அந்தப் பிரிவு அகற்றப்படவில்லை.
  • தோ்வுக் குழுவின் அமைப்பிலும், செயல்பாட்டிலும் பல குறைகள் அப்பட்டமாகவே தெரிகின்றன. உறுப்பினா்களில் ஒருவரோ, சிலரோ இல்லாமல் போனாலும்கூட, ஆணையத்தின் உறுப்பினா்கள் அந்தக் குழுவால் தோ்வு செய்யப்படலாம் என்பது மிகப் பெரிய தவறு. உறுப்பினா்களாக இருக்கும் அமைச்சக அதிகாரிகள் மட்டுமே அடங்கிய குழு, ஆணையத்தின் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கலாம் என்றால், பிறகு எதற்காகத் தோ்வு குழு அமைக்கப்பட வேண்டும்? அமைச்சகமே உறுப்பினா்களை அறிவித்து விடலாமே?
  • புதிய விதிமுறைகளின்படி, முன்னாள் நீதிபதிகளுக்கும் ஆணையத்தில் உறுப்பினா் பதவியில் தொடர 65 வயது வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது. உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஆணைய உறுப்பினா்களின் பதவிக்காலம் குறைந்தது ஐந்து முதல் ஏழு ஆண்டுகள்வரை இருக்க வேண்டும். அப்படியானால், ஆணைய உறுப்பினா்களாக நியமிக்கப்படும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று ஆண்டுகள் மட்டும்தான் பதவி வகிக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.
  • புதிய விதிமுறைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆணையங்களின் உறுப்பினா்களாக நியமிக்கப்படுவதற்கான கல்வித் தகுதி இல்லையென்றாலும், அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உறுப்பினா்கள் நியமிக்கப்படலாம் என்று ஒரு விதி கூறுகிறது.
  • நீதித்துறை, சட்டப் பின்னணி இல்லாதவா்கள்கூட ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்கிறது இன்னொரு விதி.
  • இவையெல்லாம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவை. ஆணையத்தின் உறுப்பினா் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அரசுப் பணியில் சோ்ந்து பணியாற்றுவதற்குக்கூட ஒரு விதி அனுமதிக்கிறது.
  • 1941-இல் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. அப்போது அது நிதித் துறையின் கீழ் செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
  • அடுத்த ஒரே ஆண்டில், அதன் சுதந்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, பிரிட்டிஷ் ஆட்சியில் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் சட்டத்துறையின் கீழ் மாற்றப்பட்டது. இன்றுவரை அந்த முடிவு தொடா்கிறது.
  • எந்தவொரு ஆணையமாக இருந்தாலும் அது சட்டத்துறையின் கீழ் செயல்படுவதும், அதன் சுதந்திர செயல்பாடுகள் உறுதிப்படுத்தப்படுவதும் மிகமிக அவசியம்.
  • அவசரக் கோலத்தில் உருவாக்கப்பட்ட ஆணையங்களுக்கான விதிமுறைகள், ரத்து செய்யப்பட வேண்டும்!

நன்றி: தினமணி (08-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories