TNPSC Thervupettagam

ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிப்பது யார்

January 24 , 2024 216 days 500 0
  • பொதுவாக உயிரினங்கள் பிறக்கும்போது அவை ஆணாக இருக்க வேண்டுமா, பெண்ணாக இருக்க வேண்டுமா என்பதைப் பெற்றோரின் மரபணுக்கள்தாம் தீர்மானிக்கின்றன.
  • மனிதர்களைப் பொறுத்தவரை கருவின் பாலினத்தைத் தேர்வு செய்வது பால் குரோமோ சோம்கள். மனிதர்களின் உடலில் 46 குரோமோசோம்கள் 23 இணைகளாக உள்ளன. இவற்றில் ஓர் இணைதான் பால் குரோமோசோம்கள்.
  • ஆண்களின் உடலில் உள்ள பால் குரோமோசோம்கள் XY என அறியப்படுகின்றன. பெண்களின் உடலில் உள்ளவை XX என அறியப்படு கின்றன. மனிதர்கள் கருத்தரிக்கும்போது, ஆணிடம் இருந்து ஒரு குரோமோசோமும், பெண்ணிடம் இருந்து ஒரு குரோமோசோமும் இணைந்து கரு உருவாகும்.
  • பெண்ணிடம் இருப்பது இரண்டுமே X என்பதால் கருவின் பாலினத்தைத் தேர்வு செய்வதில் ஆணின் குரோமோசோம்களுக்குத்தான் பங்கிருக்கிறது. பெண்ணிடம் இருந்து X-ம், ஆணிடம் இருந்து X-ம் இணைந்தால் உருவாவது பெண் குழந்தை. ஒருவேளை பெண்ணிடம் இருந்து x குரோமோசோமும் ஆணிடம் இருந்து Y குரோமோசோமும் இணைந்தால் உருவாவது ஆண் குழந்தை.
  • இந்த முறையில் உருவாகும் கரு ஆணாக இருப்பதற்கும் பெண்ணாக இருப்பதற்கும் சரி சமமான வாய்ப்பிருக்கிறது. இப்படித்தான் மனிதர்களின் பாலினம் தேர்வு செய்யப்படுகிறது.
  • மனிதர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான பாலூட்டிகளுக்கும் இந்த வகையில்தான் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தேர்வாகிறது. ஆனால், இது மட்டுமே வழியல்ல.
  • பறவைகளைப் பொறுத்தவரை மேற்சொன்ன நடைமுறை தலைகீழாக நடைபெறுகிறது. பறவைகளில் இருக்கும் பால் குரோமோசோம்கள் XX, XY என்பதற்குப் பதிலாக ZZ, ZW என அறியப்படுகின்றன. ஆண் பறவைகளுக்குப் பால் குரோமோசோம்கள் ZZ என இருக்கும். பெண் பறவைக்கோ ZW என இருக்கும். இதில் ஆணிடம் இருப்பது இரண்டுமே ZZ என்பதால் கருவின் பாலினத்தைத் தேர்வு செய்வதில் பெண்ணிற்குதான் முக்கியப் பங்கு இருக்கிறது. ஆணிடம் இருந்து Z-ம் பெண்ணிடம் இருந்து Z-ம் வழங்கப்பட்டால் பிறப்பது ஆண். ஒருவேளை ஆணிடம் இருந்து Z-ம், பெண்ணிடம் இருந்து W-ம் வழங்கப்பட்டால் பிறப்பது பெண்.
  • பூச்சி இனங்களில் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்கிற நிர்ணயம் வேறு வகையில் நடைபெறுகிறது. எறும்பு, தேனீ, குளவி போன்ற பூச்சியினங்களில் பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பதைப் பெண் இனம்தான் முடிவு செய்கிறது. ராணி எறும்பு, அதாவது பெண் எறும்பு முட்டை இட்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டால் அதில் இருந்து ஆண் எறும்பு மட்டுமே வெளிவரும். ஒருவேளை அந்த முட்டையைக் கருவுறச் செய்தால் பிறப்பது பெண் எறும்பாக இருக்கும். இந்த முறையை ஒற்றைமய - இரட்டைமய நிலை (Haplodiploidy) என்கிறனர் விஞ்ஞானிகள்.
  • இவை மட்டுமல்ல, இயற்கையில் வேறு சில பால் நிர்ணய முறைகளும் இருக்கின்றன. மேலே நாம் பார்த்த உயிரினங்கள் அனைத்திலும் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் மரபணுக்கள் வழியாகவே நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், சில உயிரினங்களில் மரபணுக்களைத் தாண்டி புறச்சூழலும் அவற்றின் பாலினத்தைத் நிர்ணயிக்கின்றன.
  • முதலை, ஆமை போன்ற உயிரினங்களின் கரு ஆணா, பெண்ணா என்பதை வெப்பம்தான் நிர்ணயிக்கிறது. ஆமை, முதலை ஆகியவை மணலில்முட்டை இடுகின்றன. அவை அடைகாக்கப்படும்போது, அந்த மணலில் இருக்கும் வெப்ப அளவைப் பொறுத்து அது ஆணா, பெண்ணா என்பது முடிவாகும். மணலின் வெப்ப அளவு 27.7 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருந்தால் முட்டையில் இருந்து வெளிவருவது ஆணாக இருக்கும். 31 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருந்தால் முட்டையில் இருந்து வருவது பெண்ணாக இருக்கும். இந்த வகை பால் நிர்ணயத்தை வெப்பநிலை சார்ந்த பால் நிர்ணயம் (TSD – Temperature Dependent Sex Determination) என அழைக்கிறார்கள்.
  • இந்த வகை பால் நிர்ணயம் இப்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகம் எங்கும் வெப்பம் அதிகரிப்பதால் கடல் ஆமை, முதலை ஆகியவற்றில் உருவாகும் தலைமுறைகள் பெரும்பாலும் பெண்ணாகவே இருக்கின்றன. அந்த உயிரினங்களில் புதிய ஆண்கள் பிறக்காததால் அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாமல் அவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
  • இவை தவிர வியப்பூட்டும் மற்றொரு பால் நிர்ணயமும் இருக்கிறது. சில மீன்களில் பிறப்பது ஆணா, பெண்ணா என்பது வளர்ந்த பின்னும் நிர்ணயிக்கப்படுவதில்லை. கோமாளி மீன்கள் பிறக்கும் போது அனைத்தும் ஆண்களாகவே இருக்கின்றன. ஆனால், வளர்ந்தவுடன் பெண்களாக மாறுகின்றன. கோமாளி மீன்கள் குடும்பமாக வாழ்பவை. அந்தக் குடும்பத்தின் தலைவி இறந்துவிட்டால், ஆண் மீன் பெண்ணாக மாறிவிடுகிறது. மற்றோர் ஆண் குடும்பத் தலைவர் பொறுப்பை எடுத்துக்கொள்கிறது.
  • இதேபோல கடலில் வாழும் புழு வகை ஒன்று (Greenspoonworm) வித்தியாசமான முறையில் ஆணாகவும் பெண்ணாகவும் மாறுகிறது. புதிதாகப் பிறக்கும் புழுக்கள் கடலின் தரையில் விழுந்தால், அவை பெண்களாகின்றன. இதுவே பெண் புழுக்களின் மீது விழுந்தால் அவை ஆண்களாகிவிடுகின்றன.
  • பாலைவனங்களில் வாழும் பல்லி இனம் ஒன்றில் (Whiptail Lizards) எல்லாப் பல்லிகளும் பெண்ணாகவே பிறக்கின்றன. ஆணின் துணை இல்லாமலேயே அவை கருவுற்று அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன.
  • இவ்வாறு இயற்கை, புதிதாகப் பிறக்கும் உயிரினங்களை ஆணாக உருவாக்க வேண்டுமா, பெண்ணாக உருவாக்க வேண்டுமா என்பதைப் பல வகையில் நிர்ணயம் செய்து வைத்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories