- தனக்கான இணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த பெண்ணுக்குக் கற்பு என்கிற இலக்கணம் வகுத்து நான்கு சுவருக்குள் அமரவைத்தாகிவிட்டது. அவள் தன் வாரிசுகள் பலசாலியாக, அறிவில் சிறந்தவராக இருக்க வேண்டி அப்படிப்பட்ட இணையர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தாள். தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே என்பதற்காக ஆணும் தன்னை அவள் எதிர்பார்ப்புக்கு இணங்க வடிவமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினான். ஆனால், அவள் உள்ளே அடைபட்ட பிறகு, அவளுக்கான உரிமைகள் அத்தனையும் பறிக்கப் பட்டன.
- தந்தை கை காட்டும் மனிதருக்கு அவள் உடைமையானாள். அந்தத் தந்தையின் தேர்வுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தனக்கான லாப நோக்குகள் இருக்கலாம். இல்லை, பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தான் விடுபட அவளை எவனோ ஒருவனிடம் தாரை வார்த்துத் தரலாம். அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானித்தார். இதனால், ஆண்கள் வாழ்வு கொஞ்சம் சுலபமானது. தன் பலமோ, குணமோ, அறிவோ அவ்வளவு அவசியமாகப் பேணிக் காக்க வேண்டாத சூழலுக்குள் புகுந்தான். தனக்கான பெண்ணை அவன் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்தான்.
உடைமைப் பொருளல்ல பெண்
- தன் தேவைகளுக்குத் தன் தந்தையையோ, சகோதரர்களையோ, கணவரையோ, தன் மகனையோ சார்ந்திருக்கும் நிலைக்குள் தள்ளப்பட்ட பெண், சுயம் இழந்து, குடும்பத்து மனிதர்களுக்கான உணவுத் தேவை, கணவருக்கான தேவை, வீட்டைப் பராமரிக்கும் வேலைகள் உள்ளிட்டவற்றைக் கவனிப்பதில் தன்னை மூழ்கடித்துக்கொள்ளத் தொடங்கினாள். அவள் ஒரு மனிதப்பிறவி என்கிற நிலை மாறி, மற்றவரின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட உடைமையானாள்.
- இது ஆணுக்குப் பெண்ணின் மீதான அதிகாரத்தை வழங்கியிருந்தாலும், அவளுக்கான உணவு, உடை மற்றும் இத்தியாதிகளின் தேவைகளைக் கவனிக்கும் பொறுப்பும், அவளைத் தன் அதிகாரத்துக்குள் அல்லது பாதுகாப்பிற்குள் வைத்திருக்க வேண்டிய அவசியமும் ஆணுக்குக் கூடிப்போயின. பொருள் ஈட்டாத அவளை வைத்துத் தான் காப்பாற்ற வேண்டிய சூழலையும், தனக்கான பெண்ணைத்தான் தேர்ந்தெடுக்கக் கிடைத்த உரிமையையும் ஆண் பெற்று விட்டான். அதனால், தான் மணக்கப்போகும் பெண்ணுடன் தன் வசதிக்கு ஏற்பவோ இல்லை அதிகமான பொருள் தனக்கு வரும் என்றால் மட்டுமே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய இயலும் என்கிற விதிகளையெல்லாம் வகுத்தான்.
- திருமணம் ஆகும்வரை ஒரு பெண் கற்புடன் இருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாதபடிக்கு அமலுக்கு வந்தது. சந்தர்ப்பவசமாகத் தன்னிலை இழந்து ஒரு பெண் ஓர் ஆணுடன் உறவு கொண்டுவிட்டால், அவள் திருமணத்துக்கு மட்டுமின்றி உயிருடன் வாழவே தகுதியற்றவளாகிவிடுவாள். ஒரு பெண்ணின் கற்பு என்பது அவளுக்கு மட்டுமல்லாமல் அவள் சார்ந்திருக்கும் குடும்பத்தின் கெளரவத்துக்கும் இழுக்கு என்பதால், சமயத்தில் அந்தக் குடும்பமே வாழத்தகுதியில்லாத குடும்பமாவதும் உண்டு.
- இப்படிப் பலவிதங்களிலும் ஒரு பெண்ணின் வாழ்வு சிக்கலாக்கப் பட்டுவிட்டதால், பெண் குழந்தையின் பிறப்பே ஒரு குடும்பத்துக்குச் சுமையாக உருவெடுத்துவிட்டது. இந்தச் சிக்கல்களில் இருந்து பிறந்தவையே இவை:
- கருப்பையில் உருவாகியிருக்கும் கரு பெண் என்று தெரிந்தால் கருவையே அழித்துவிடுவது.
- பெண் குழந்தை பிறந்தவுடன் சிசுக்கொலை செய்வது.
- பெண் குழந்தை பெற்றோருக்குப் பாரமாகவும், ஆண் குழந்தை பெற்றோரைக் காப்பவனாகவும் உருவகம் பெற்றது.
- ஆண் குழந்தை பெற்றுத்தர இயலாத காரணத்தால் மனைவியைத் தள்ளி வைத்து வேறு பெண்ணை மணக்கும் மூடத்தனங்கள் உருவானது.
- பெண்ணை வீட்டிலேயே வைத்து வெளியே செல்லவிடாமல் வளர்ப்பது.
- வெளியே செல்லக் கூடாது என்பதால், பள்ளிக்கும் அனுப்ப வேண்டியதில்லை.
- விவரம் தெரிவதற்கு முன், பூப்படையும் முன் அவரவர் வசதிக்கேற்ப சிறியவனோ, வயதானவனோ, செல்வந்தனோ, ஏழையோ, நல்லவனோ, கெட்டவனோ யாருக்காவது திருமணம் செய்து அனுப்பிவிடுவது.
- ஆண் வீட்டில் தங்கள் வசதிக்கு மேல் பொருளும் பணமும் கேட்டாலும், கடன் வாங்கியாவது அவர்கள் கேட்பதைக் கொடுத்துப் பெண்ணையும் ஒரு பொருளாக அவற்றுடன் அனுப்பி வைப்பது.
- இவையும் இன்னும் பலவும் இயல்பான நிகழ்வுகளாக்கப்பட்டன. திருமணம் வரையிலானவை மட்டுமே இவை.
அடிமைப்படுத்தும் மூளைச்சலவை
- பெண்ணின் கற்பைக் காப்பாற்ற வேண்டி அவளுக்கென ஒழுக்கம் என்கிற பெயரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண் புனிதமானவள், தெய்வம் போன்றவள் எனப் போற்றப்படுவதன் மூலம்தான் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைக்குப் பெண்ணே தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் வகையில் மூளைச்சலவைகளும் நடத்தப்பட்டன. அதனாலேயே இன்று கட்டுப்பாடுகளை உடைத்து வெளிவரும் பெண்களின் மேல் முதல் கல்லை எறிபவர் இன்னொரு பெண்தான் என்கிற நிலையில் உள்ளோம்.
- ஆணுக்கு இல்லாத கட்டுப்பாடுகள் அத்தனையும் இங்கே பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. பெண்ணை முடக்கி வைத்ததில் மதங்களும், அதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சடங்குகளும் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன. ஒவ்வொரு மதமும் அதன் சடங்குகளும் அதனதன் வழியில் பெண்ணை ஓர் இரண்டாந்திர பிரஜையாகவே வைத்திருக்க, ஆணுக்கு அடிபணிந்து நடக்க, அவளுக்கென்று உணர்வுகளோ, விருப்பங்களோ இல்லாதிருக்க, அப்படியிருந்தாலும் குடும்ப நலனைக் கருதி, அவற்றை ஆழ குழி தோண்டிப் புதைத்து வாழ எத்தனை உத்திகள் உண்டோ அத்தனையையும் அவை உபயோகித்திருக்கின்றன.
- இதெல்லாம் எப்போதோ நடைமுறையில் இருந்தவை, இன்று அத்தனை பெண்களும் சுதந்திரம் பெற்றுவிட்டனர் என்று யாராவது நினைத்தால், சில பெண்களின் போராட்டக் குணத்தால், சில ஆண்களின் பகுத்தறிவால் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதென்னவோ உண்மைதான். இருப்பினும் முழுவதுமாக இவையெல்லாம் வழக்கொழிந்துவிட்டன என்று சொல்வதற்கில்லை. ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் முழுமையானவையும் அல்ல.
- பெண்ணை அடிமைப்படுத்தியதால் ஆண் இங்கு முழு சுதந்திரத்துடன் இன்புற்று வாழ்கிறானா என்றால் அதுவும் இல்லை. அடிமைப்படுபவரும் நிம்மதியாக வாழ்வதில்லை, அடிமைப் படுத்துபவரும் நிம்மதியாக வாழ்வதில்லை. சுதந்திரம் என்பதுதான் இங்கு ஒவ்வோர் உயிரின் வேட்கையுமே. அதை முடக்குவதன்மூலம் பெறப்படும் பலன் இங்கு யாருக்குமே நன்மை பயக்காது என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய அவசியமிருக்கிறது.
- ஒரு மாற்றம் வரவேண்டுமென்றால் முதலில் அந்தப் பிரச்சினை எங்கு, எதற்கு, யாரால் உருவானது என்பதும் தெரிய வேண்டும். அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் யாரையெல்லாம் தாக்குகின்றன, அதனால் நாம் வாழும் குடும்பத்தின், சமூகத்தின் முன்னேற்றம் எப்படித் தடைபடுகிறது என்பதையெல்லாம் உணர்ந்தாலே மாற்றம் தேவை என்கிற எண்ணமும் அதற்கான முன்னெடுப்பும் தனிமனிதரிடத்திலிருந்து தொடங்கி மேலும் மேலும் தொடரும்.
நன்றி: தி இந்து (12 – 06 – 2023)