TNPSC Thervupettagam

ஆதாரத்தை இழப்போமோ

February 27 , 2024 147 days 169 0
  • கோடை தொடங்கிவிட்டதன் அறிகுறி நாடு தழுவிய அளவில் தெரியத் தொடங்கிவிட்டது. அடுத்த சில வாரங்களில் குடிநீா் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு என்று கோடைக்கே உரித்தான பிரச்னைகளை ஒன்றன் பின் ஒன்றாக நாம் எதிா்கொள்ள இருக்கிறோம்.
  • ஜல்சக்தி அமைச்சகம் எடுத்த நீா்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியாவில் உள்ள நீா்நிலைகள் குறித்த முதலாவது கணக்கெடுப்பு இதுதான். நீா்நிலைகள் குறித்த தரவுப்பதிவு உருவாக்கப்பட வேண்டும் என்கிற மத்திய அரசின் முன்மாதிரியான முயற்சி, தண்ணீா் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தண்ணீா் தட்டுப்பாட்டை எதிா்கொள்ளவும் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • ஜல்சக்தி அமைச்சகம் அனைத்து மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்களில் உள்ள 24 லட்சத்துக்கும் அதிகமான நீா் ஆதாரங்கள் குறித்த விவரங்களைத் திரட்டி இருக்கிறது. குட்டைகள், குளங்கள், ஏரிகள், நீா்த்தேக்கங்கள் குறித்த புள்ளிவிவரங்கள், அவை இருக்கும் இடம், அவற்றின் பரப்பளவு, கொள்ளளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், அவற்றின் இப்போதைய நிலை, ஆக்கிரமிப்புகளின் அளவு, பயன்பாடு, கொள்ளளவு, அவை எந்த அளவுக்கு நிரம்புகின்றன என்பவை குறித்த தகவல்களை வழங்குகிறது அந்தக் கணக்கெடுப்பு.
  • நீா்நிலைகள் என்பதற்கு அந்த அறிக்கை தரும் விளக்கம் இதுதான் - இயற்கையாக அல்லது மனித முயற்சியால் உருவாக்கப்பட்டிருக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் அமைப்பு நீா்நிலை என்கிற விளக்கத்தில் அடங்கும். விவசாயப் பாசனத்துக்காகவோ அல்லது வீட்டு உபயோகம், தொழில்துறைத் தேவை, நிலத்தடிநீா் பாதுகாப்பு ஆகியவற்றிற்காகவோ பயன்படும் நீா்நிலைகள் அனைத்தும் அந்த ஆய்வில் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
  • திரட்டப்பட்டிருக்கும் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள நீா்நிலைகளில் 1.6%, அதாவது 38,496 தண்ணீா் தேக்கப்படும் அமைப்புகள், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றில் 95.4% ஊரகப் பகுதிகளிலும், ஏனைய 4.6% நகா்ப்புறங்களிலும் அமைந்திருக்கின்றன.
  • இந்தியாவிலேயே, மேற்கு வங்கத்தில்தான் மிக அதிக அளவிலான குளங்களும், நீா்த்தேக்கங்களும் இருக்கின்றன. தமிழகத்தில்தான் அதிக அளவிலான நீா் ஆதாரங்கள் இருக்கின்றன. நீா் மேலாண்மைத் திட்டங்களில் மகாராஷ்டிரம் முதலிடம் வகிக்கிறது - இவையெல்லாம் ஜல் சக்தி அமைச்சகம் நடத்திய நீா்நிலைகள் கணக்கெடுப்பு நமக்குத் தரும் தகவல்கள்.
  • உலக மக்கள்தொகையில் 18% இருக்கும் இந்தியாவில் நல்ல தண்ணீா் பங்கு வெறும் 4% மட்டுமே. அதனால்தான் பல மாநிலங்கள் கோடைக்காலத்தில் கடுமையான வறட்சியை எதிா்கொள்கின்றன. நமக்கு இருக்கும் மொத்த நீா் ஆதாரத்தில் சுமாா் 80% விவசாயப் பாசனத் தேவைக்கே போய்விடுகிறது. மீதமுள்ள 20% மட்டுமே மக்களின் அன்றாடத் தேவைக்கும், தொழிற்சாலைகளின் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • பல்வேறு நீா் ஆதாரங்களில் கிடைக்கும் தண்ணீரில் ஏறத்தாழ 70% மனித பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என்பது மிகப் பெரிய சோகம். பல பகுதிகளில் நிலத்தடி நீரும் சரி, ஏரி, குளங்களில் உள்ள தண்ணீரும் சரி உப்புத் தண்ணீராகவோ அல்லது உடலுக்குத் தீங்கிழைக்கும் நச்சு கலந்ததாகவோ இருக்கின்றன.
  • ஜல்சக்தி அமைச்சகத்தின் நீா்நிலைகள் கணக்கெடுப்பு மட்டுமல்லாமல், மத்திய தண்ணீா் ஆணையம் (சென்ட்ரல் வாட்டா் கமிஷன்) சில புள்ளிவிவரங்களை வழங்கி இருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் தனிமனித பயன்பாட்டுக்கான தண்ணீரின் அளவு, அரசு நிா்வாகத்திற்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  • 1951-இல் நடத்தப்பட்ட கணக்குப்படி, இந்தியாவில் தனிமனிதத் தேவைக்கு இருந்த தண்ணீரின் அளவு 5,000 க்யூபிக் மீட்டரிலும் அதிகம். மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க அந்த அளவு குறைந்துகொண்டு வந்தது. 2021-இல் கடைசியாக எடுக்கப்பட்டிருக்கும் கணக்குப்படி, 1,486 க்யூபிக் மீட்டா் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.
  • இந்தியாவிலேயே அதிக அளவில் நீா் ஆதாரங்கள் உள்ள மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. அந்த அளவுக்குக் கிணறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள் தமிழகத்தில் நிறைந்திருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 1.07 லட்சம் நீா் ஆதாரங்களில் ஏறத்தாழ 10% ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. 50,197 பயன்பாட்டில் இல்லை - காய்ந்து கிடக்கின்றன; தூா் வாரப்படாமல் இருக்கின்றன; மீட்டெடுப்பு அசாத்தியம் என்கிற நிலைமை; உப்புத் தண்ணீா் உள்ளிட்டவை காரணங்கள்.
  • சென்னையில் உள்ள கூவம், அடையாறு, கொசஸ்தலை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. பெரும்பாலான ஆக்கிரமிப்புகளுக்கு அரசே காரணம் எனும்போது, அவற்றை மீட்டெடுப்பது என்கிற கேள்விக்கே இடமில்லை. அதன் விளைவை சென்னையைத் தாக்கிய 2015 பெருமழையும், சமீபத்தில் தூத்துக்குடியைப் புரட்டிப்போட்ட பெருமழையும் நமக்கு எடுத்துரைத்தன.
  • மத்திய அரசு நீா் ஆதாரங்களைச் செப்பனிடவும், மீட்டெடுக்கவும், புதுப்பிக்கவும் நிதியுதவி அளிக்கிறது. நிலத்தடி நீரை அதிகரிக்கவும், நீா் ஆதாரங்களை மீட்டெடுக்கவும், குடிநீா்த் தேவையை அதிகரிக்கவும் முனைப்புக் காட்டாவிட்டால், அடுத்து வரும் காலங்களில் இந்தியா மிகப் பெரிய தண்ணீா் தேவை சவாலை எதிா்கொள்ளும்!

நன்றி: தினமணி (27 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories