TNPSC Thervupettagam

ஆதித்யா எல் - 1: ஆதவனை ஆராயும் கலம்

September 1 , 2023 368 days 430 0
  • சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் மலைத்துப்போகின்றனர். இந்த விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லக்ராஞ்சியன் புள்ளி எல்-1என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
  • இஸ்ரோவிடம் வலிமை குன்றிய ராக்கெட்டுகள்தான் உள்ளன. எனவே, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் பூமியிலிருந்து புறப்பட்டு, செல்ல வேண்டிய இடத்தை வேகமாகச் சென்றடைய முடியாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கவண்கல் எறிதல்நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் இலக்கை அடையும். நாளை (செப்டம்பர் 2) ஏவப்படும் இந்த விண்கலம், சுமார் 127 நாள்கள் பயணித்த பின்னரே, தான் நிலைகொள்ள வேண்டிய எல்-1 புள்ளியை அடையும்.

லக்ராஞ்சியன் புள்ளி எல்-1 என்றால் என்ன?  

  • பூமிக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது, சூரியனுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள நேர்க்கோட்டில் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டின் ஈர்ப்பும் சமமாக இருக்கும், இல்லையா? அந்த ஈர்ப்பு விசை சமப்புள்ளிதான் லக்ராஞ்சியன் புள்ளி எல்-1. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியனை நோக்கி இந்தப் புள்ளி அமைந்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு 1,510.7 லட்சம் கி.மீ. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் நூறில் ஒருபங்கு தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும்.

என்ன பயன்?  

  • சூரியன், பூமி இரண்டின் ஈர்ப்பு விசையில் சமமாக இழுபட்டு நிற்பதால் பூமியோடு சேர்ந்து இந்தப் புள்ளியில் உள்ள விண்கலம் சூரியனைச் சுற்றிவரும். எனவே, ஒவ்வொரு கணமும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இந்த விண்கலம் நிலைநிற்கும். சூரியப் புயல் அல்லது சூரியச் சூறாவளி ஏற்படும்போது முதலில் இந்த விண்கலத்தைத் தாக்கும். இந்த விண்கலம் அதனை உணர்ந்து காந்தப் புயல் குறித்த முன்னெச்சரிக்கையை நமக்குத் தரும். நாம் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.

சூரியக் காற்றும் புயலும்

  • சூரியனின் இயல்பான இயக்கம் அவ்வப்போது மாறி, சீற்றம் கொள்ளும். சூரியச் சூறாவளி (solar storm), சூரிய ஒளிப்புயல் (solar flash), சூரிய வெடிப்பு (coronal mass ejections) என்கிற மூன்று முக்கியச் சீற்றங்கள் காந்தப்புயலை ஏற்படுத்தி பூமியின் மீது தாக்கம் செலுத்தும். சூரியனின் இயல்பு இயக்கத்தில் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து சூரியக் காற்று எனப்படும் காந்தப்புலத்துடன் கலந்த மின்னூட்டம் கொண்ட அயனித் துகள்களின் வீச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தக் காற்று, கோள்களுக்கு இடையே உள்ள விண்வெளியில் நொடிக்குச் சுமார் 200 முதல் 400 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.
  • சூரியன் தன்னைத் தானே சுற்றிக்கொள்வதால் அதன் காந்தப்புலக்கோடுகளில் அவ்வப்போது முறுக்கம் ஏற்படும். குறிப்பிட்ட வரையறையைக் கடக்கும்போது இந்த முறுக்கம் வெட்டிக் கொள்ளும். அப்போது சில வேளை மிக உக்கிரமாக - நொடிக்கு 800 கி.மீ. வேகத்தில் துகள்கள் பாயும். இதுவே சூரியச் சூறாவளி. சில வேளை முறுக்கிய காந்தப்புலக் கோடுகள் வெடித்துப் புதிய இணைப்பைப் பெறும்.
  • அப்போது பெருமளவில் ஒளி, எக்ஸ் கதிர், காமா கதிர் முதலிய பெரும் ஆற்றலுடன் வெளிப்படும். இதுவே சூரிய ஒளிப்புயல். முறுக்கிய காந்தப் புலம், பால் பொங்குவதுபோலப் பொங்கி சூரியனின் மேற்புறத்தில் எழுந்தால் அதுவே சூரிய எரிமலை வெடிப்பு அல்லது சூரிய நிறை வெளியேற்ற வெடிப்பு (coronal mass ejection). இந்த மூன்று நிகழ்வுகளின்போதும் சூரியக் காற்றின் வேகம் வெகுவாகக் கூடும்; பூமியின் மீது காந்தப் புயல் ஏற்படும்.

காந்தப் புலப் புயலால் என்ன ஆபத்து?

  • காந்தப் புயலின் விளைவாக மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை. தீவிர காந்தப் புயல் பூமியைச் சுற்றியுள்ள அயனி மண்டலத்தை ஆட்டம்கொள்ள வைக்கும். இதன் தொடர்ச்சியாக சிற்றலை ரேடியோ தகவல்தொடர்பில் பாதிப்பு ஏற்படும். நாடு விட்டு நாடு செல்லும் விமானங்கள், சரக்குக் கப்பல்கள் முதலியவை சிற்றலை ஒலிபரப்பைப் பயன்படுத்துகின்றன.
  • விண்வெளியில் செயற்கைக்கோள் மீது எலெக்ட்ரான் பரவி நிலை மின்னூட்டத்தை ஏற்படுத்தி, மின்னணுக் கருவிகளைப் பாதிக்கும். செயற்கைக்கோளில் உள்ள சூரியத் தகடுகள் பாதிப்புக்கு உள்ளாகும். குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) தரும் தகவலில் பல மீட்டர் அளவுக்குத் துல்லியம் சார்ந்த பிழை ஏற்படும். பூமியில் உள்ள மின் விநியோக மின்மாற்றிகளில் மீஅதிக மின்னோட்டத்தை உருவாக்கிச் செயலிழக்கச் செய்து தற்காலிக இருட்டடிப்புகூட ஏற்படலாம்.

விண்வெளி வானிலை

  • பூமிக்கு அருகே காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்கள், சூரியனிலிருந்து வரும் சூரியக் காற்றின் வேகம் முதலியவற்றை அறிந்துகொள்வதைத்தான் விண்வெளி வானிலை என்கிறார்கள். பல ஆயிரம் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவருகின்றன. எனவே, இன்று விண்வெளி வானிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது செயற்கைக் கோள்கள் பூமியில் தகவல்தொடர்பு, ஜிபிஎஸ் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

நீடிக்கும் மர்மம்

  • சூரியனின் மேற்புற வெப்பம் சுமார் 5,600 டிகிரி செல்சியஸ். ஆனால், அதைத் தாண்டி சூரியனைச் சுற்றிப் படர்ந்துள்ள கரோனா எனும் வளிமண்டலப் பகுதியில் வெப்பநிலை பல லட்சம் டிகிரி செல்சியஸ். விளக்கின் அருகே வெப்பம் கூடுதலாக இருக்கும்; தொலைவு செல்லச் செல்ல வெப்பம் குறையும். சூரியனின் கரோனா மிகமிக உயர் வெப்பநிலையில் அமைந்துள்ளது பெரும் புதிர். இது குறித்தும் ஆதித்யா எல்-1 ஆய்வு நடத்தும்.

என்னென்ன கருவிகள்?

  • புற ஊதா நிறத்தில் சூரியன் உமிழும் ஆற்றலை, சூரிய புற ஊதாக் காட்சித் தொலை நோக்கி (Solar Ultra-violet Imaging Telescope - SUIT) வழியே அளவிடுவதன் மூலம் சூரியனில் ஏற்படும் சீற்றங்கள் குறித்து ஆய்வு செய்யலாம். சூரிய எரிமலைகள் வெடித்து எழும்புவதைப் படம்பிடிக்கும் Visible Emission Line Coronagraph – VELC எனும் கருவி, சூரிய ஒளிப்புயல் ஏற்படுத்தும் எக்ஸ் கதிர்களைப் பதிவுசெய்யும் தாழ் ஆற்றல் எக்ஸ் கதிர் நிறமாலைமானி (Solar Low Energy X-ray Spectrometer), உயர் ஆற்றல் எக்ஸ் கதிர் நிறமாலைமானி (High Energy L1 Orbiting X-ray Spectrometer) முதலிய கருவிகள் உள்ளன. இந்த மூன்று கருவிகளும் சூரிய இயக்கத்தை ஆய்வு செய்யும்.
  • இதைத் தவிர, விண்கலம் உள்ள பகுதியில் விண்வெளி வானிலையைக் கண்காணிக்கச் சூரியக் காற்று ஆய்வுக் கருவி (Aditya Solar wind Particle Experiment), பிளாஸ்மா துகள் பகுப்பாய்வுக் கருவி (Plasma Analyser Package for Aditya) முதலியவை உள்ளன. இவை அந்தப் புள்ளியில் சூரியக் காற்றின் வேகம், திசை, மின்னேற்றம் முதலியவற்றை ஆராயும்.
  • சூரியப் புயல் அல்லது சூரியச் சூறாவளி கடந்துசெல்கிறதா என அறிய முடியும். மேலும், காந்தப்புல அளவைமானி (Magnetometer) வழியே காந்தப் புயல் ஏற்படுகிறதா எனவும் முன்கூட்டியே அறிய முடியும். இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா மட்டுமே சூரியனை ஆய்வுசெய்ய விண்வெளித் தொலைநோக்கிகளை அனுப்பியுள்ளன. இந்த முயற்சி வெற்றியடையும்போது இந்தியா ஐந்தாவது நாடாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (01– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories