TNPSC Thervupettagam

ஆந்த்ரோபோசீன் காலத்தில் ஆடம் ஸ்மித்

June 25 , 2023 375 days 394 0
  • 1776 மார்ச் 9. நவீன உலகைப் பிரசவிக்கவிருக்கும் தொழிற்புரட்சி கருக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், வரும் காலத்தின் பொருளியல் முறையாக முதலாளித்துவத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மைப் பங்களிப்பை வழங்கவிருக்கும் நூல் ஒன்று வெளியானது. ‘பொருளியல்’ தனித் துறையாகப் பரிணமிப்பதற்கும் முக்கியப் பங்காற்றிய அந்த நூல்: ‘நாடுகளின் செல்வ இயல்பையும் காரணங்களையும் பற்றிய ஆராய்ச்சி’ [An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations]. சுருக்கமாக ‘நாடுகளின் செல்வம்’ என அறியப்படுகிற, இன்றுவரை செல்வாக்கு குறையாத அந்த நூலை எழுதியவர் ஆடம் ஸ்மித் [Adam Smith, 1723-1790] என்பதைப் பள்ளி மாணவர்களும் அறிவர்.
  • விலைகளின் ஆட்சியால் எவ்வாறு ஒரு பொருளியல் சமுதாயம் இயங்க முடியும் என்பதை விவரிப்பது; அந்த விலைகள் அல்லது பொருள்களின் மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பது; அந்தப் பொருளியல் கருத்துகள் மூலம் உள்நாட்டிலும் நாடுகளுக்கு இடையேயும் தடையில்லா வணிகம் நல்விளைவுகளை விளைவிக்கும் என்று விளக்குவது; அந்த விலைகளின் ஆட்சியால் வளர்ச்சியுறும் சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கத்தினரிடையே எவ்வாறு வருவாய் பகிர்வு நிகழ்கிறது என்பனவற்றை நிறுவுவது ஆகியவை செவ்வியல் பொருளாதாரத்தின் மையக் கூறுகள்.
  • ஆடம் ஸ்மித்தின் ‘நாடுகளின் செல்வம்’ இந்தக் கருத்துகள் அனைத்தையும் உள்ளடக்கியிருப்பதால், அதை அரசியல் பொருளாதாரச் செவ்வியலின் மூலநூல் என்று அறிஞர்கள் வர்ணிக்கின்றனர் (எஸ்.நீலகண்டன்: ‘ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை’).
  • முதலாளித்துவ தத்துவத்துக்கு இலக்கணம் வகுத்தவர் ஆடம் ஸ்மித் என்று பலர் கருதினாலும், தான் ஒரு புதிய தத்துவத்தை வழங்குவதாக ஸ்மித் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. தானறிந்த வரையில் முதலாளித்துவம் என்கிற சொல்லையே ஆடம் ஸ்மித் பயன்படுத்தியதில்லை என்று அமர்த்திய சென் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், பிற்பாடு ‘முதலாளித்துவம்’ என வரையறுக்கப்பட்ட ஒரு பொருளாதார நடவடிக்கை, வளர்ந்து நீடிப்பதற்கான அடித்தளமாக ஆடம் ஸ்மித்தின் சிந்தனைகள் அமைந்தது உண்மை.
  • அந்த வகையில், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற தொழிற்புரட்சியைத் தொட்டு வளர்ந்த முதலாளித்துவப் பொருளியல் முறை, பூவுலகின் இன்றைய முதன்மைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்துக்கு முதன்மைக் காரணமாக அமைந்துவிட்டதும் உண்மை.
  • அனைத்துத் தொழில்களும் வளர்ந்து, பரிவர்த்தனை தடையில்லாமல் நடந்தால், நாடுகள் வளர்ச்சி பெறும் என ஆடம் ஸ்மித் நிறுவியுள்ளார். ஸ்மித்தின் பொருளியல் மாதிரியானது தொடர்ந்து விரிவடைந்துவரும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், யதார்த்த உலகமோ வரையறுக்கப்பட்ட வளங்களாலும் திறன்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • பெருவாரியான மக்களைப் பொறுத்தவரை அவர்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைய வேண்டும். வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். அதன் காரணமாகவே அவர்கள் ‘வளர்ச்சி’ என்கிற கருத்தை விரும்புகிறார்கள். ஆனால், அவர்களது வாழ்க்கைத் தரத்தைச் சிறிய அளவு மேம்படுத்துவதற்கு முன்னால் பெரிய அளவில் நகர்ப்புற மேல்தட்டு, மத்தியத் தர வர்க்கத்தின் வாழ்க்கை நுகர்வுமயமாக வேண்டும் என்பதை ‘வளர்ச்சி’க்கான நிபந்தனையாக முதலாளித்துவம் விதித்துள்ளது என்கிறார் ராஜன் குறை.
  • ஆக, நுகர்வை ஆதாரமாகக் கொண்ட பொருளியல் முறையாக முதலாளித்துவம் வலுப்பெறப் பூவுலகின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டன. உற்பத்தித் துறையில் கட்டுப்பாடற்ற புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு, வளிமண்டலத்தில் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்தது. ஆடம் ஸ்மித் பிறந்த 300ஆம் ஆண்டு இது. அவர் வாழ்ந்த 18ஆம் நூற்றாண்டில், வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு 300 பிபிஎம் (parts per million/ பத்து லட்சத்தில் ஒரு பங்கு) என்ற நிலையில் இருந்தது. புவியில் மனிதக்குலம் தோன்றியதிலிருந்தே ஏறக்குறைய இதே அளவுக்குத்தான் அது தொடர்ந்துவந்தது.
  • ஆனால், தொழிற்புரட்சியின் விளைவால், ‘வளர்ச்சி’யை நோக்கிய பயணத்தில், வளிமண்டலத்தில் சேர்ந்த கரியமில வாயு இன்று 421.15 என்ற அளவை எட்டியிருப்பதுதான் மனிதக்குலம் வந்தடைந்திருக்கும் இடம். இதனால் புவி வெப்பமாதல் தொடங்கி சூழலியல் தொகுதிகளின் சிதைவு வரை ஏற்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் இன்று கைமீறிச் சென்றுகொண்டிருக்கின்றன.
  • இந்தப் பின்னணியில், “நாம் உருவாக்கி வைத்திருக்கும் பொருளியல் அமைப்பென்பதும் புவி வெப்பமாதலுக்கு ஒரு முக்கியக் காரணமாகிவிட்டிருக்கிறது. நானாக உருவாக்கி இதைச் சொல்லவில்லை. நம் ஒட்டுமொத்த அமைப்பே சீர்கெட்டிருக்கிறது. மிக அதிகமாக இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வும், எரிசக்தி நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற தன்மையும் பேரழிவைத்தான் உருவாக்கும்” என வாதிடும் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான நவோமி கிளைனின் விமர்சனம் கவனிக்கத்தக்கது.
  • காலநிலையில் ஏற்படும் மாற்றம் இயல்பானது; புவி தோன்றிய கணத்திலிருந்தே இயற்கையாக அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், தொழிற்புரட்சி காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது. மனிதச் செயல்பாடுகள் புவியில் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் புவியியல் சகாப்தத்துக்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயரிடப்பட்டிருக்கிறது; ஹோலோசீன் (Holocene) என்கிற வெப்பநிலைக் காலகட்டத்தை, சமகாலத்தில் குறிப்பதற்கான சரியான சொல் இதுவே என அறிவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • அந்த வகையில், மனித ஆதிக்கக் காலநிலை மாற்றத்தின் வரலாறு என்பது, கடந்த 300 ஆண்டுகளில் முதலாளித்துவம் உருப்பெற்று நிலைப்பெற்ற காலகட்டத்தின் வரலாறும்கூட. ஆக, ஆந்த்ரோபோசீன் காலத்தில் ஆடம் ஸ்மித்தின் பொருத்தப்பாடு என்ன என்பதும் ஆய்வுக்குரியது.
  • இன்றைய உலகின் பொருளியல் அமைப்பு, ஆடம் ஸ்மித்தின் சிந்தனைகளிலிருந்து மிகப் பெரிய அளவில் மாறிவந்திருக்கிறது. எனினும், காலநிலை மாற்றத்தின் பின்னணியிலும் ஆடம் ஸ்மித்தின் சிந்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், 2021 காப்-26 காலநிலை மாநாட்டின்போது வெளியிடப்பட்ட ‘The Wealth of Nations in the 21st Century’ என்கிற குறுநூல் ஒரு முக்கிய முன்னெடுப்பு. ஐந்து பகுதிகளாக அமைந்திருக்கும் ‘நாடுகளின் செல்வம்’ நூலின் ஒவ்வொரு பகுதியின் அடிப்படையிலும் துறைசார் வல்லுநர்கள், ஆடம் ஸ்மித்தின் பார்வையில் காலநிலை மாற்றத்தை அணுகும் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். கொள்கை வகுப்பாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கையேடாக இது உள்ளது.
  • தொழிற்புரட்சியால் உருவான வேலைப் பகுப்பு முறையால் ஏற்பட்ட உற்பத்தி அதிகரிப்பை 1776இல் நுட்பமாகக் கவனித்த ஆடம் ஸ்மித்துக்கு, தொழில்நுட்பம் சார்ந்த விளைவுகளைக் கவனித்துப் பதிவு செய்வதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. தொழிற்புரட்சியின் எதிர்விளைவுகளையும் முதலாளித்துவம் கொண்டுவரும் சிக்கல்களையும் (சூழலியல் கண்ணோட்டத்திலும்) அவதானிக்க ஒருவர் வந்தார், அவர்தான் கார்ல் மார்க்ஸ்!

நன்றி: தி இந்து (25 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories