ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பில்... 279 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரி புயல்!
- புயல், புதுச்சேரிக்குப் புதிதல்ல. கடந்த காலங்களில் தானே, வர்தா, கஜா எனப் பல புயல்களைச் சந்தித்துள்ளது புதுச்சேரி. குறிப்பாக, 1916 நவம்பரில் வீசிய புயற்காற்று குறித்து பாரதி எழுதிய ‘புயற்காற்று’, ‘பிழைத்த தென்னந்தோப்பு’, ‘மழை’ ஆகிய கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை. மேலும், 279 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய புயற்காற்று புதுச்சேரியைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
- இது பற்றித் தனது நாட்குறிப்பில், பத்திரிகையாளர் போன்று வர்ணனையுடன் பதிவு செய்திருக்கிறார் ஆனந்தரங்கப்பிள்ளை: “1745 நவம்பர் 4 அற்பிசி 21 வியாழக்கிழமை, அஸ்தமித்தவுடனே துவக்கி, பெருங்காற்றடித்தது. அந்தக் காற்று வியாழக்கிழமை நாள் ராத்திரி முப்பது நாழிகையும் அடித்தது. ஆனால், இந்தக் காற்றினுடைய பிரதாபம் இன்னமட்டென்று ஒருவிதமாய்ச் சொல்லக்கூடாது.
- அதெப்படி யென்றால், இந்த முப்பது நாழிகைக்குள்ளே பட்டணத்திலே ஒரு மரமாகிலும் தப்பவிடாமல் ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்துபோனதும், சிறிது மரங்களை முறித்துப் போட்டதும், அதுவுமல்லாமல் பட்டணத்துக்குள்ளே தோட்டந் துரவுகள், தென்னை மரம், மா மரங்கள் எப்பேர்ப்பட்ட மரமும் ஒன்றாகிலும் தப்பாமல் படுகாடாய் விழுந்து போச்சுது. அதினாலே வெகுபேர் கெட்டுப்போனார்கள்.
- இதல்லாமல் உப்பாற்றிலே அவரவருக்கு மனைவிட்டு, அவரவர்கள் கல்வீடும் கூரைவீடுமாய் அவரவர் சக்திக்கான சரமாய்க் கட்டிக்கொண்டு குடியிருந்தார்கள். அப்படியிருக்கச்சே இந்தப் பெருங்காற்றிலே மேல்வெள்ளம் வந்து உப்பாற்றுத் தண்ணீர் வெளியே போகத்தக்கதாய்க் கட்டியிருந்த மதகு மூடியிருக்கச்சே அந்த மதகைப் பிடுங்கிக்கொண்டு அந்த வெள்ளம் ஓடிட்று.
- அந்த வெள்ளத்திலே வீடுகள் வந்து விழுந்து உப்பாற்றிலே கட்டியிருந்த வீடுகள் பேரிலே ஒருமுழ வெள்ளம் வந்து விழுந்து அங்கே கட்டியிருந்த மூன்று தெருவும் படுகாடாய் விழுந்து போய் வீடுகள் வெள்ளத்திலே முழுகிப்போய் அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துப் போனதும், மாடுகள் கன்றுகள் செத்ததும், மனுஷர் செத்ததும் இப்படியாக வெகு சேதப்பட்டு அந்த வெள்ளம் இப்படி பட்டணத்து மேலே திரும்பினபடியினாலே பள்ளத்துத் தெருக்களிலேயெல்லாம் அரை மட்டும் தண்ணியும் பெருந்துடை மட்டும் தண்ணியும் நின்றபடியினாலே பள்ளத்தாக்கிலே யிருந்த வீடுகளெல்லாம் அநேகமாய் விழுந்து போச்சுது.
- இதல்லாமல் இந்தக் காற்றிலே காக்காய், குருவிகள், பின்னையுமிருக்கப்பட்ட தோட்டந் துரவுகள் சகலமும் அடியோடே விழுந்து போய்விட்டது. வீடு வாசல்களும் அநேகஞ் சேதம். இதல்லாமல் அவரவரது வெளியிலேயிருக்கப்பட்ட ஆடுமாடுகள் ஒன்றாகிலும் தப்பிப்பிழைப்பதற் கிடமில்லாமல் தரந்தரமாய் உளைந்து போச்சுது.
- அந்தச் செத்த ஆடுகளைப் பட்டணத்துக்குள்ளே அவரவர் வாங்கி வந்து வீடுகளிலே காயப்போட்ட படியினாலே அதுகள் காய்கிறதுக்கு இடமில்லாமல் மழையிலே நனைந்து பட்டணமெல்லாம் தெருவுக்குத் தெரு பிண நாற்றமாய் இரண்டு மூன்று நாள் மட்டுக்கும் வீதியிலே புறப்படக்கூடாமல் இப்படி அவஸ்தைப்பட்டுப் போச்சுது.
- ஆனால், திருவுள எத்தனத்தாலே பொழுது விடிந்தவுடனே காற்றும் மழையும் நின்றுபோனபடியினாலே ஒரு சாமத்துக்குள்ளே எல்லா தண்ணீரும் வாங்கிப்போய் அவரவர் வீடு வாசலும் தப்பித்ததல்லாமல் மறுநாளைக்கும் அப்படிக் காற்று அடித்ததால் பட்டணத்திலே ஒரு வீடாகிலும் தப்ப மாட்டாது... சுவாமி காத்தார்.”
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)