TNPSC Thervupettagam

ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல அறிவியல்!

September 28 , 2019 1931 days 1565 0
  • தங்கள் குழந்தைகள் பிற்காலத்தில் அறிவாற்றலும், பொருளாதார வளமும் பெற்று வாழவேண்டும் என்பதையே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
  • உயர்கல்வி என்று செல்லும்போது, ஆண்டுக்கு இரண்டுமுறை பருவத்தேர்வுகள் என்ற பல்கலைக்கழகங்களின் புதிய நடைமுறைகளோடு மாணவர்கள் இணைந்து விடுகின்றனர்.
  • சுயமேம்பாட்டுக்கான சிறப்பு வகுப்புகள், வேலைவாய்ப்புகளுக்காக பிரத்தியேகப் பயிற்சிகள் உள்ளிட்டவை அங்கே புதிதாக வந்துவிடுகின்றன.
  • உயர் கல்வியைச் சிறப்பாக முடிக்கும் இந்திய மாணவர்கள் பலர்  உலகின் பல்வேறு நாடுகளில், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களில், அரசின் நிர்வாகப் பணிகளில் உயர்ந்த வேலைவாய்ப்பினைப் பெற்று வருவதைக் காண முடிகிறது.
  • உயர் கல்விக்குச் செல்லும்போது பல்கலைக்கழகங்களின் புதிய நடைமுறைகளோடு மாணவர்கள் இணைந்துவிடுவது அவசியமாகிறது.  
கல்வித் திட்டம்
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் 2017-ஆம் ஆண்டு கல்வித் திட்டத்தை எதிர்த்து, பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் அண்மையில் போராட்டம் நடத்தினர்.
  • புதிய நடைமுறையில் தேர்வு எழுதி வெற்றிபெறுவது சிரமம் என்றும், தேர்வில் தோல்வியடைந்தால் மீண்டும் தேர்வெழுதி வெற்றிபெற பல வாய்ப்புகள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
  • கடினமான பாடங்களைக் கற்பதில் மாணவர்களுக்கு இருக்கும் சிரமம் மற்றும் தன்னம்பிக்கைக் குறைபாட்டினை இது காட்டுகிறது. கற்றல் கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகளைக் கையாள வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. 
வாழ்க்கையின் நோக்கம்
  • பொறியியல் கல்வியில் தெளிவான புரிதலும், நுட்பமான செயல்பாடுகளுமின்றி மாணவர்களின் மூளைகளில் விடைகளைத் திணித்து, தேர்வு நேரத்தில் அவற்றை விடைத்தாள்களில் நிரப்ப பயிற்சியளிப்பத்தால் பயனேதுமில்லை.
  • வாழ்க்கையின் நோக்கத்திற்குத் தகுந்தவாறுதான் கல்வியின் நோக்கமும், பாடத்திட்டங்களும் அமைய வேண்டும். இதை அங்கீகரிக்கும் அடையாளமாகவே பட்டங்கள் இருக்க வேண்டும்.
  • பட்டம் பெற்றால் போதும், வாழ்க்கைக்கும் படித்த படிப்புக்கும் தொடர்பில்லை என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. பொறியியல் படிப்பில் கூறப்படும் அறிவியல் விளக்கங்கள் அனைத்தும், வாழ்வியலை விளக்கும் தத்துவங்களாகவும், மனிதனின் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணங்கள் சொல்லும் ஆற்றல்மிக்க கருவியாகவும் உள்ளன.
  • உதாரணமாக மனித உடல், உயிர், மனம், ஜீவகாந்தம் போன்றவற்றுக்கான தத்துவ விளக்கங்களை, பாமர மக்கள்கூட பல்வேறு பொறியியல் கருவிகளின் செயல்பாடுகளைப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும். 
  • கண்ணால் காணமுடியாதபடி இருக்கும் உயிர் உள்ளவரைதான் மனித வாழ்வு, உடல் இயக்கம் நடைபெறும். இதை விளக்குவதற்கு மின்சாரப் பொறியியல் துறை உதவுகிறது. மின்சாரம் மின்கம்பிகளில் ஓடுவதைப் போலவே, உடலில் உயிர் ஓடிக்கொண்டிருக்கும்.
தற்கால மருத்துவம்
  • மின்னோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் அந்தக் கருவி பழுதாகிவிடும். இதைப் போலவே உயிர் ஓட்டத்தில் மாற்றமோ, தடையோ எற்பட்டால் உடலில் வலி, நோய் என அந்த உறுப்புகள் பாதிக்கப்படும்.
  • மின்சாரம் செல்லும் கம்பியைச் சுற்றி காந்தம் உருவாவதைப்போலவே, மனித உடலைச் சுற்றி காந்த அடர்த்தி இருக்கும். இந்த ஜீவகாந்த அடர்த்தி ஒருவரின் அறிவாட்சித் திறனோடு தொடர்பு கொண்டது என்பதை தற்கால மருத்துவம், மனோவியல் மற்றும்  தத்துவ முறைகள் நிரூபித்துள்ளன. 
  • மாணவர்களின் உடல், மன ஆற்றல்களை மேம்படுத்தும் வகையில், பொறியியல் கல்வியை மனவிரிவு கொண்டு கற்க வேண்டும். பொறியியல் பாடங்களில் கூறப்படும் அறிவியல் விளக்கங்கள் அனைத்தும், வாழ்வியல் தத்துவங்களோடு ஒத்துப் போவதை கற்றுத்தர புதிய பாடத் திட்டங்களை உருவாக்குவதும், உளவியல் ரீதியான கற்றல் கற்பித்தல் உத்திகளை நடைமுறைப்படுத்துவதும் அவசியம். 
உயர் கல்வி
  • உயர் கல்வி படிக்க வரும் மாணவர்களுக்குக் கீழ்க்காணும் அடிப்படைப் பண்புகள் கிடைக்கச் செய்ய வேண்டும் 1. மற்றவர்களிடம் அன்பாகவும், நன்றியுணர்வுடனும் பழகுதல் 2. தன் தவறுகளைத் திருத்திச் செயல்படும் மன விரிதிறன் 3. சூழ்நிலைகளைக் கட்டுப்பாடுகளுடன் கையாளும் சுய ஒழுக்கம் 4. நல்லெண்ணத்தினை அதிகரிக்கும் நேர்மைக் குணம் 5. புதிய சவால்களை எதிர்கொள்ளும் துணிவு என்பன. இவை அனைத்தும் ஆன்மிகம் கற்றுக் கொடுக்கும் பாடங்களும்கூட. 
  • இவை பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களில் உள்ளன. பகவத் கீதையில் இருக்கிறது என்று மட்டும் காரணம் சொல்லி, பொறியியல் மாணவர்களுக்கு இந்தப் பண்புகளை படிப்போடு இணைத்துக் கற்பிக்கத் தவறுவது நியாயமாகாது.
  • பகவத்கீதையை மதமாகவும், கதாபாத்திரங்களாவும் பார்க்காமல், அதில் உள்ள வாழ்வியல் அறிவுரைகளைப் புரிந்து செயல்பட்டால் உயரலாம். பகவத் கீதையின் அறிவுரைகள் அனைத்தும், மத வேறுபாடின்றி உலக மக்களுக்குப் பொதுவானதாகவே உள்ளது. 
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் விருப்பப் பாடம் ஒன்றில்,  கீதையில் சுய உணர்தல், மனதை வெல்ல  அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் வழிகள் என்று இரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமிருக்கும் மாணவர்கள் மட்டும் எடுத்துப் படிக்கலாம்.
அமைப்புகள்
  • உயர் கல்வியில் மாணவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றத்தைச் சரிசெய்ய கல்லூரிகள் எடுக்கும் முயற்சிகள் இன்று சவாலாகவே உள்ள நிலையில், இதுபோன்ற பாடத் திட்டங்கள் மாணவர்களுக்கு வாழ்வில் தெளிவையும், படிப்பில் புரிதலையும் ஏற்படுத்தும். 
  • என்.சி.சி., என்.எஸ்.எஸ்., சாரண-சாரணியர் இயக்கம், இலக்கிய மன்றம், இயற்கை மன்றம் போன்ற அமைப்புகள் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவது போலவே, இது போன்ற பாடத் திட்டங்களும் மாணவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், திட்டமிடுதலையும் எளிதாக்கும்.
  • தன்னுடைய செயல்களுக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் தானே காரணம் என்பதையும், பிறரை குறை சொல்வதில் பயனில்லை என்ற செயல் விளைவு தத்துவத்தையும் இதுபோன்ற பாடத்திட்டங்கள் மாணவர்களுக்குக் கற்றுத் தரும்.
  • பகவத் கீதை என்று மட்டும் குறை சொல்லி முடித்துவிடாமல், வேறுசில துறைகளில் யோகா மூலம் மன அழுத்த மேலாண்மை,  இந்திய அறிவுசார் பழக்கங்களின் சாராம்சம் என்ற விருப்பப் பாடங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருப்பதை வரவேற்க வேண்டும்.
அறிவியல் மற்றும் ஆன்மீகம் 
  • பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்மிகம் தேவையில்லை என்றும், அறிவியலுக்கும் இறையுணர்வுக்கும் தொடர்பில்லை என்றும் கூறுவது அபத்தமான கருத்து. ஆன்மிகத்துக்கும் இறையுணர்வுக்கும் அறிவியல் எதிரானது என்பதும் தவறான கருத்து.
  • அரைகுறைப் புரிதலுடைய பகுத்தறிவுவாதத்தை அறிவியலின் ஆணிவேராக இருக்கும் பல விஞ்ஞானிகளே நிராகரித்திருக்கிறார்கள்.
  • மதங்களும், கலைகளும், விஞ்ஞானமும் ஒரே மரத்தின் பல்வேறு கிளைகள்தான் என்று கூறுவார் நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
  • இன்னும் ஒருபடி மேலே போகிறார், பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை முன்மொழிந்த சார்லஸ் டார்வின்: "இறைவன் இருப்பதை நான் ஒருநாளும் மறுத்ததில்லை.
பரிணாம வளர்ச்சி
  • பரிணாம வளர்ச்சித் தத்துவம் இறை நம்பிக்கைக்கு சற்றும் எதிரானதோ, மாறுபட்டதோ அல்ல. மனித குலமும், இந்தப் பிரபஞ்சமும் ஏதோ தற்செயலாகத் தோன்றியதாக இருக்க முடியாது என்பதே இறைவன் இருப்பதற்கான மிகப் பெரிய அத்தாட்சி' என்று அவர் பதிவு செய்கிறார்.
  • இன்றைய தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் தந்தையான விஞ்ஞானி மார்க்கோனி, கடைசிவரை இறையுணர்வைக் கைவிடவில்லை. "நான் இறை நம்பிக்கையுடையவன் என்பதைப் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்வதில் எனக்குத் தயக்கமே கிடையாது. ஜெபத்தின் சக்தியில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு.
  • நான் கத்தோலிக்கன் என்பதால் மட்டுமல்ல, நான் ஒரு விஞ்ஞானி என்பதாலும் இறை நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன்' என்பார் மார்க்கோனி.
  • ஆன்மிகமும் இறை நம்பிக்கையும் அறிவியலுக்கு ஏற்புடையதல்ல என்பது போன்ற வாதத்தை முன்வைக்கிறார்கள். அது தவறு. தன்னம்பிக்கையை ஆன்மிகம் வளர்க்கிறது.
  • தோல்விகளைக் கண்டு துவளாத மனநிலையை ஏற்படுத்துகிறது. பகவத் கீதை மட்டுமல்ல, ஆன்மிகம் சார்ந்த கருத்துகளை பொறியியல் மாணவர்களுக்குக் கற்பித்தலில் தவறே இல்லை. அது சரியா, தவறா என்பதை அவர்கள் பகுத்தறிந்து தீர்மானித்துக் கொள்ளட்டும், தடுப்பானேன்!
  • கோப்புகளாகவும், எண்ணிக்கையாகவும் வளர்ந்து வரும் புள்ளிவிவரங்களோடு, மாணவர்களின் அறிவும், ஆற்றல்களும் சேர்ந்து வளர்ந்திட பாடத்திட்டங்களில் இதுபோன்ற புதிய நடைமுறைகள் அவசியம்.
  • பகவத் கீதையில் கூறப்படும் உடல், உயிர், மன ஆற்றல்களை மேம்படுத்தும் வழிமுறைகள், மாணவர்களின் அறிவாட்சித் திறனை மேம்படுத்தி,  உயர் கல்வியைத் திறம்படக் கற்பதற்கும், எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைச் சூழல்களைக் கையாள்வதற்கும் பயன்படும். பகவத் கீதை மட்டுமல்ல, "திருமந்திரம்' உள்ளிட்ட நூல்களும் கற்றுத்தரப்பட வேண்டும்.
  • வாழ்க்கைத் துன்பங்களைப் போக்கி, கல்வியை ஒளியூட்டும் கருவியாக மாற்றிட இதுபோன்ற புதிய பாடத் திட்டங்கள் அவசியம். 

நன்றி: தினமணி (28-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories