- இந்தியாவில் காணப்படும் மொத்த நோய்ச் சுமையில் 56.4% ஆரோக்கியமற்ற உணவுவகைகளால் ஏற்படுவதாக இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) அறிவித்துள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும், தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும், இந்தியர்களுக்கான திருத்தப்பட்ட உணவு வழிகாட்டுதல்களை 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) சமீபத்தில் வெளியிட்டபோது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் இணைந்து அமைத்த பல்துறை நிபுணர்கள் குழுவால் இந்தப் புதிய வழிகாட்டுதல்கள் வரைவு செய்யப்பட்டு, பல அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 17 வழிகாட்டுதல்களில் எட்டாவது நெறிமுறையானது புரதச்சத்துப் பொடிகள் குறித்துக் கவனம் செலுத்துகிறது.
- இதுவரை அதீத உப்பு, சர்க்கரை, கொழுப்புள்ள உணவு வகைகள்தான் ஆரோக்கியமற்றவை என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்றைய இளையோரால் அதிகம் விரும்பி உட்கொள்ளப்படும் புரதப் பொடிகளும் ஆரோக்கியமற்றவை என்று இந்த நெறிமுறை எச்சரித்துள்ளது.
ஆபத்துகள் என்னென்ன?
- பொதுவாக புரதப் பொடிகள் பால், முட்டை, பாலாடைக் கட்டி ஆகியவற்றிலிருந்தும் சோயாபீன்ஸ், பட்டாணி, அரிசி போன்ற தாவரப் பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன. பனீரிலிருந்து ‘வே’ எனும் புரதப் பொடி (Whey protein powder) தயாரிக்கப்படுகிறது.
- வழக்கத்தில், வணிக நோக்கத்தில் புரதப் பொடிகளில் கூடுதலாகச் சர்க்கரை சேர்க்கப்படுகிறது; கலோரிகள் இல்லாத செயற்கை இனிப்புகளும், பலதரப்பட்ட செயற்கைச் சுவையூட்டிகளும் கலக்கப்படுகின்றன.
- இவற்றை நீண்ட காலம் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது, பயனாளிக்கு எலும்பு வலுவிழக்கிறது; சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது; ரத்தத்தில் ஹார்மோன் சமநிலை சீர்குலைகிறது; இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருகிறது.
- ‘வே’ புரதப் பொடிகளில் இன்சுலினை ஒத்த வளர்ச்சிக் காரணிகள் (Insulin-like growth factor 1 - IGF-1) இருக்கின்றன. இவை சில வகை புற்றுநோய்களோடு தொடர்புடையவை. மேலும், இந்தப் பொடிகளில் ‘கிளைச் சங்கிலி அமினோ அமிலங்கள்’ (Branched Chain Amino Acids - BCAAs) நிறைந்துள்ளன.
- இவை உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களைத் தூண்டுகின்றன என்று மேற்சொன்ன ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இளையோரின் திடீர் உயிரிழப்புகள் அதிகமாகிவரும் தற்போதைய சூழலில், இந்த எச்சரிக்கைத் தகவலைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது; புறக்கணித்துவிடக் கூடாத காரணம் இது.
பயன்படுத்துபவர்கள் யார் யார்?
- காசநோய், சவலை நோய், புற்றுநோய் போன்றவற்றால் உடல்நலம் குறைந்தவர்களின் உடல் ஊட்டத்துக்குச் சத்துள்ள உணவு வகைகளோடு புரதப் பொடிகளையும் புரத பானங்களையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். ஆனால், பொதுச் சமூகத்தில், உடல்எடையைக் கூட்டப் புரதப் பொடிகளைப் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாகப் புரதப் பொடிகளை உட்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.
- தங்கள் உணவில் புரதச் சத்து குறைவாக இருப்பதாகக் கருதும் சைவ உணவாளர்களில் பலரும் இடைவேளை நேரத்தில் புரதப் பொடிகளை உட்கொள்கிறார்கள். முழுமையான உணவு உட்கொள்ள நேரம் இல்லாதவர்களும் அவசரத்துக்குப் புரதப் பொடிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
- எல்லாவற்றுக்கும் மேலாகத் தடகள விளையாட்டு வீரர்கள், ‘ஜிம்’ பயிற்சி ஆர்வலர்கள், பளு தூக்குபவர்கள், தசை அழகை விரும்புகிறவர்கள் போன்றோர் உடனடியாக உடல் கட்டமைப்பைக் கூட்ட வேண்டும் என்னும் ஆர்வத்தில் மருத்துவ ஆலோசனை இல்லாமலேயே புரதப் பொடிகளை உட்கொள்கிறார்கள்.
தவறான நம்பிக்கைகள்:
- பொதுவாக, ஊடக விளம்பரங்களைப் பார்த்து வாங்கும் புரதப் பொடிகளில் முழுக்க முழுக்கப் புரதச் சத்து இருப்பதாக அநேகரும் நம்புகிறார்கள். அப்படியில்லை. அவற்றில் சர்க்கரைதான் அதிகம் இருக்கிறது; புரதம் குறைவாகத்தான் இருக்கிறது.
- தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்துப் புரதப் பொடிகளில் புரதத்தின் அளவு மாறலாம். ஆனாலும், பயனாளிகள் எதிர்பார்ப்பதுபோல் புரதப் பொடிகளில் புரதம் அதிகமாக இருக்காது என்பதும், தசைகளை வலுவாக்கும் மந்திரப்பொடி அது இல்லை என்பதும்தான் இந்த ஆய்வின் கள உண்மைகள்.
- அடுத்து, புரதப் பொடிகளை உட்கொள்வதால்தான் பளு தூக்குபவர்களுக்குத் தசைகள் உருண்டு திரண்டு வலுவாக இருப்பதாக மற்றவர்கள் எண்ணிக்கொள்கின்றனர். இதுவும் ஒரு கற்பிதம்தான். தசைகள் வலுப்பெறுவதற்கு முக்கியக் காரணம், பளுதூக்குபவர்கள் மேற்கொள்ளும் கடினமான உடற்பயிற்சிகளே தவிர, புரதப் பொடிகள் அல்ல.
- மேலும், புரதப் பொடிகளில் உள்ள புரதம் உடலுக்குச் சென்றடைய வேண்டுமென்றால் போதுமான அளவுக்கு மாவுச்சத்துள்ள உணவு வகைளையும் கொழுப்பு உணவு வகைகளையும் தினமும் உட்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் இந்த உணவு வகைகளை உட்கொள்வதிலும் தவறிழைக்கின்றனர் என்று இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆரோக்கிய உணவே போதும்!
- சைவமோ அசைவமோ, நமக்குத் தேவையான புரதச் சத்துக்குச் சமச்சீரான ஆரோக்கிய உணவை எடுத்துக்கொண்டாலே போதும்; புரதப் பொடிகள் அவசியமில்லை என்கிறது இந்த ஆய்வு. அதாவது, தானிய உணவு வகைகளையும் பருப்பு உணவு வகைகளையும் 3:1 எனும் விகிதத்தில் தினசரி எடுத்துக்கொண்டால் தேவையான புரதம் கிடைத்துவிடும்.
- அல்லது தினசரி 30 கிராம் பருப்பையும் 80 கிராம் இறைச்சியையும் எடுத்துக்கொண்டால், தரமான புரதம் கிடைத்துவிடும். ஆனால், நடைமுறையில் பருப்பு வகைகள், இறைச்சி வகைகளின் விலை அதிகம் என்பதால், இந்திய மக்களில் கணிசமானோர் தானியங்களைத்தான் பெரிதும் நம்புகின்றனர்.
- அப்போது புரதச்சத்து மூலக்கூறுகளான அமினோ அமிலங்களும் நுண்ணூட்டச் சத்துகளும் போதிய அளவு உடலுக்குக் கிடைக்காமல் புரதச் சத்துக் குறைபாட்டுக்கு உள்ளாகின்றனர். இந்தக் குறைபாட்டைச் சீரமைக்கப் புரதப் பொடிகளை நாடுகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த ஆய்வு.
என்ன உணவு சாப்பிடலாம்?
- உடலில் தசைகள்வலுப்பெற விரும்புகிறவர்கள் தங்கள் உணவுமுறையை முதலில் சரி செய்ய வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றிலிருந்து புரதம் பெறலாம். வாரத்துக்கு 700 கிராம் முதல் 900 கிராம் வரை அசைவம் சாப்பிட்டாலே தேவையான புரதம் கிடைத்துவிடும்.
- கூடுதலாக, 250 மி.லி. பால் அல்லது தயிர் சேர்த்துக்கொள்ளலாம். சைவம் சாப்பிடுபவர்கள் தினமும் 300 மி.லி. பாலுடன், 400 கிராம் காய், 100 கிராம் பழம் சாப்பிட வேண்டும்; 85 கிராம் பருப்பு அல்லது பயறு சாப்பிட வேண்டும். காளான், அவரை, துவரை, பச்சைப் பயறு, கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை, சோயாபீன்ஸ், பச்சைப் பட்டாணி ஆகியவை புரதச்சத்து மிகுந்தவை. பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்புகள், சியா விதைகள், பூசணி விதைகள், ஆளி விதைகள், எள் போன்றவற்றில் கணிசமான அளவு புரதம் உள்ளது.
உடற்பயிற்சி முக்கியம்!
- அடுத்து, இன்றைய இளையோர் பலரும் கூடுதலாகப் புரதம் எடுத்துக்கொண்டால் தசைகள் வலுப்பெறும் என்று நம்பிப் புரதப் பொடிகளை நாடுகின்றனர். தற்போதைய ஆய்வின்படி, தினமும் ஒரு கிலோ உடல் எடைக்கு 1.6 கிராம் அளவுக்கும் அதிகமாகப் புரதத்தை உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
- அதேவேளை, தேவையான அளவுக்குப் புரத உணவை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகளைக் கூட்டினால் பலன் கிடைக்கும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காரணம், சீரான உடற்பயிற்சிகள்தான் புரதச்சத்தை உடலுக்குள் எரிசக்தியாக மாற்றும்.
- இந்த ‘மந்திரச் செயலை’ அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘செயற்கை உணவு எதுவானாலும் அதில் ஆபத்து காத்திருக்கும்’ என்பது பொதுவான விதி. இந்த விதி புரதப் பொடிகளுக்கும் பொருந்தும். பயனாளிகள்தான் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 05 – 2024)