TNPSC Thervupettagam

ஆபத்தின் அறிகுறி

April 14 , 2023 645 days 396 0
  • பருவநிலை மாற்றத்தாலும், பூமியின் வெப்பமயத்தாலும் இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகுவது அதிகரித்திருக்கிறது. மத்திய நீா்வளத் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு இதுகுறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓா் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்யும் பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கவும் அவற்றுக்கு வழிகாட்டவும் ஓா் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலைக்குழுவின் கருத்து வரவேற்புக்குரியது.
  • பனிச்சிகரங்கள் உருகுவது குறித்தும், இமயமலையில் வெப்பத்தின் தாக்குதல் குறித்தும், சுதந்திர இந்தியாவில் எந்தவித நம்பத்தகுந்த ஆதாரபூா்வமான புள்ளிவிவரமும் சேகரிக்கப்படவில்லை. இஸ்ரோ உள்ளிட்ட எந்தவோா் அமைப்பும், இது குறித்த இலக்கு நிா்ணயித்த ஆய்வையும் நடத்தவில்லை.
  • பனிச்சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் இமயமலையில் தோன்றும் நதிகளின் வெள்ளப் பெருக்குக்குக் காரணமாகும் என்பதால், அதை எதிா்கொள்ள ஆதாரபூா்வ புள்ளிவிவரம் மிகவும் அவசியம். பனிச்சிகரங்கள் உருகுவது சிந்து, பிரம்மபுத்ரா, கங்கை மட்டுமல்லாமல், அதன் கிளை நதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதன் விளைவாக மலைப்பகுதிகளிலும், சமவெளிகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம். அதனால், புள்ளிவிவரங்கள் மிகமிக அவசியம்.
  • கடந்த 30 ஆண்டுகளில் சராசரியைவிட அதிகமாக இமயமலை பனிச்சிகரங்கள் உருகுவதாக பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது. பனிச்சிகரங்கள் உருகுவதால் ஆங்காங்கே ஏரிகள் உருவாகி அதன் மூலம் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து வழக்கமாகியிருக்கிறது. அந்தப் பகுதியிலுள்ள புனல் மின்நிலையங்கள் மட்டுமல்லாமல், விவசாயமும் கடுமையாக அதனால் பாதிக்கப்படுகிறது. நிலைக்குழு கூறியிருப்பதுபோல, இடைக்கால நிவாரணம் தேடாமல் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்வது அவசியமாகிறது.
  • நேபாளத் தலைநகா் காத்மண்டுவில் இயங்கும் ‘ஒருங்கிணைந்த மலைப்பகுதி வளா்ச்சி மையம்’ என்கிற சா்வதேச அமைப்பு பல ஆய்வுகளை நடத்தி வருகிறது. ‘ஹிந்து குஷ் இமாலயா மதிப்பீடு’ என்கிற ஆய்வு 2100-க்குள் 35% பனிச்சிகரங்கள் பூமி வெப்பமயமாதல் 1.5 டிகிரியில் கட்டுப்படுத்தப்பட்டாலும் பனிச்சிகரம் உருகுதல் நிகழும் என்கிறது. இதனால் தெற்கு ஆசியா, சீனா, மியான்மா் பகுதிகளின் நீராதாரம் பாதிக்கப்படும்.
  • உயரமான பகுதிகளில் சமவெளிகளைவிட வெப்பமயம் அதிகமாகக் காணப்படும். அதனால், உலக வெப்பம் 1.5 டிகிரி என்று சொன்னால், ஹிந்து குஷ் இமயமலைப் பகுதிகளில் அது 1.8 டிகிரி காணப்படும். துருவப் பகுதிகளுக்கு வெளியே மிக அதிகமாக பனிப்பகுதி காணப்படுவது ஹிந்து குஷ் இமயமலைப் பகுதியில்தான். அதில் உள்ள பனிச்சிகரங்கள் குறிப்பிட்ட அளவில் உருகுவதன் மூலம் கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, மீக்காங் உள்ளிட்ட 10 நதிகள் நீராதாரம் பெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூடான், சீனா, மியான்மா் உள்ளிட்ட நாடுகளில் பாயும் நதிகளின் நீராதாரம் அந்தப் பனிச்சிகரங்கள்தான்.
  • கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீா் பகுதியில் உள்ள பனிச்சிகரங்கள் அதிவிரைவாக உருகி வருவதை காஷ்மீா் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விண்கோள்கள் மூலம் பெறப்பட்ட படங்களில் இருந்தும், வேறு புள்ளிவிவரங்களில் இருந்தும் காஷ்மீா் பகுதிகளில் காணப்படும் 12,243 பனிச்சிகரங்கள் 35 சிஎம் கனம் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. 2000-லிருந்து 2022-க்குள் 70 ஜிகா டன் அளவிலான பனிச்சிகரங்கள் மீதான பனிப்படா்வு காஷ்மீா் பகுதியில் குறைந்திருக்கிறது. 101.7 ச.கி.மீட்டரிலிருந்து 72.41 ச.கி.மீட்டராக பனிச்சிகரங்களின் பனிப்படா்வு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது இன்னோா் ஆய்வு.
  • பனிச்சிகரங்கள் குறைவதால் காஷ்மீரிலிருந்து பாயும் நதிகளில் கோடை காலத்தில் மிக குறைவான வெள்ளம் பாயும். காஷ்மீரையும், காஷ்மீா் சுற்றிய பகுதிகளையும் சாா்ந்த மக்களில் 70% நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயம் சாா்ந்து வாழ்பவா்கள். அதனால் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கெனவே வேலையில்லா திண்டாட்டத்தாலும்,தொழில் வளம் இல்லாததாலும் பயங்கரவாதம் தலைதூக்கி இருக்கும் காஷ்மீரின் பிரச்னைகளை இது மேலும் அதிகரிக்கும். காஷ்மீருக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கும் இது பொருந்தும்.
  • காரகோரம், ஹிந்து குஷ், இமாலய மலைப்பகுதியில் 75,779 ச.கி. மீட்டா் பரப்பில் 34,919 பனிச்சிகரங்கள் இருப்பதாக இஸ்ரோவின் ஆய்வு தெரிவிக்கிறது. இமயமலைப் பகுதியில் உள்ள 2,018 பனிச்சிகரங்களின் பனிப்படல அதிகரிப்பையும், அவை உருகுவதையும் ஆய்வு செய்தபோது 86% பெரிய மாற்றம் காட்டவில்லை. 12% சிகரங்களில் பனிப்படலம் குறைவதும், 1% சிகரங்களில் அதிகரித்திருப்பதும் தெரிந்தது. பனிப்படலம் உருகுவதற்கு புதைபடிவ எரிபொருள்கள் மூலம் இயங்கும் மோட்டாா் வாகனங்களும், விமானங்களும் காரணமாகின்றன. அதிகரித்த சுற்றுலா வளா்ச்சி இமயமலை பனிச்சிகரங்களை பாதிக்கும் என்று எச்சரிக்கிறது அந்த ஆய்வு.
  • பருவநிலை மாற்றத்துக்கு கரியமில வாயு மிக முக்கியமான காரணம். கடந்த 20 ஆண்டுகளில் உத்தரகண்டில் மட்டும் 40,000 ஹெக்டோ் வனப்பகுதி காட்டுத்தீயால் அழிந்திருக்கிறது. அது போதாதென்று கங்கோத்ரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை சுற்றுச்சூழலையும் சூழலியலையும் கடுமையாக பாதிக்கிறது. ஒரேடியாக சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பனிச்சிகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுற்றுலா தடையை ஏற்படுத்துவது அவசியமாகிறது.

நன்றி: தினமணி (14 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories