TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் பெண்களின் குமுறல்

September 8 , 2024 132 days 204 0

ஆப்கானிஸ்தான் பெண்களின் குமுறல்

  • ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்திவரும் தலிபான்கள், பெண்களுக்கான உரிமைகளுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது தொடர்பாக 114 பக்க சட்ட அறிக்கையைப் புதிதாக வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஆறாவது வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளில் படிக்கக் கூடாது. ஆடவர்கள் பணிபுரியும் பெரும்பாலான அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பெண்கள் வேலை செய்யக் கூடாது. பூங்காக்கள், உடல் பயிற்சிக் கூடங்கள் (ஜிம்), ஒப்பனை நிலையங்கள் (சலூன்கள்) ஆகியவற்றுக்குப் பெண்கள் போகவே கூடாது. நீண்ட தொலைவு பயணங்களைத் தகுந்த ஆண் உறவினர் துணையின்றி மேற்கொள்ளக் கூடாது. வீட்டைவிட்டுச் செல்வதானால் தலை முதல் கால் வரையில் இஸ்லாமிய வழக்கப்படி நீண்ட அங்கியால் போர்த்தியபடி செல்ல வேண்டும்.
  • வீட்டுக்கு வெளியில் பெண்களின் குரல் கேட்கவே கூடாது, அதாவது பெண்கள் உரத்துப் பேசக் கூடாது. எந்த ஒரு தேவைக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உடன் வராமல் பெண்கள் தனியாக வீட்டைவிட்டு வெளியே போகவே கூடாது. பெண்கள் மீது தலிபான்கள் விதித்துவரும் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை கடந்த மூன்று ஆண்டுகளாக படிப்படியாக அமலுக்கு வந்துவிட்டன. இப்போது புதிய துறைகளில், புதிய வழிகளில் கட்டுப்பாடுகளை அறிவித்துவருகின்றனர். இந்த அறிக்கையானது ஏற்கெனவே அமலில் உள்ள சட்டங்களையும் புதிய சட்டங்களையும் கொண்டுள்ளது. இவற்றை மீறினால், ‘நல்லொழுக்கம் காப்பு – தீயொழுக்கம் தடை’ ஆகியவற்றுக்கான காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து உரிய தண்டனைகளை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.
  • படிக்க வேண்டும், நல்ல வேலைக்குப் போக வேண்டும், குடும்ப வளர்ச்சிக்குத் தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கனவு கண்ட பெண்களுக்கு தலிபான்களின் இந்தச் சட்டங்கள் மிகுந்த கலக்கத்தையும் மனச்சோர்வையும் அளித்துள்ளது. தலிபான் அதிகாரிகள் சிறிது காலம் கழித்து இந்தக் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டுவிடுவார்கள் என்று சிலர் நம்பிக்கை தெரிவித்தனர்.
  • தலிபான்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே உயர்நிலை பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் சிறிது காலத்துக்கு மூடப்பட்டன. பிறகு மகளிர் அவற்றில் பயில தடை விதிக்கப்பட்டு ஆடவர் மட்டும் பயில திறக்கப்பட்டன. அவை மீண்டும் திறக்கப்படும் தங்களுக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியவர்கள், ஆறாவது வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்கக் கூடாது என்ற ஆணையைப் பார்த்ததும் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
  • பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும், வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், வீட்டில் உள்ள ஆடவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது; படிப்பு, வெளியிடத்து வேலையெல்லாம் பெண்களுக்கு அவசியமே இல்லை என்ற கண்ணோட்டத்தில் இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

மாறவில்லை தலிபான்கள்

  • “தலிபான்கள் மாறிவிட்டார்கள் அல்லது மாறியிருப்பார்கள் என்று நினைத்தேன், அவர்களுடைய சிந்தனைப் போக்கு மாறவே இல்லை, 1996 முதல் 2001 வரையில் ஆப்கானிஸ்தானை ஆண்டபோது எதையெல்லாம் செய்தார்களோ அவற்றையே மேலும் தீவிரமாக இப்போது அமல்படுத்துகிறார்கள்” என்று வருந்தினார் முஸாரத் ஃபராமார்ஸ் (23). இவர் வடக்கு ஆப்கானிஸ்தானில் பாக்லான் என்ற பகுதியில் வசிக்கிறார். (இந்தக் கட்டுரையில் வரும் பெண்களின் பெயர்கள் அவர்களுடையவை அல்ல, ஒரு அடையாளத்துக்காகத்தான்).
  • 2021இல் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தான் இருந்தபோது ஓரளவுக்குப் பழமைவாத கட்டுப்பாடுகளை விலக்கிய நகர்ப்புறங்களில் பெண்களுடைய சுதந்திரத்தை மீண்டும் ஒடுக்கும் நடவடிக்கைகளைப் படிப்படியாக ஆனால் தீவிரமாக அமல்படுத்துகின்றனர். இவையெல்லாம் மத ஒழுக்க நெறிகளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் என்கின்றனர். இஸ்லாமிய மதச் சட்டப்படி ஆளும் நாடுகளில் உயர்நிலை பள்ளிக்கூட படிப்பைத் தடைசெய்திருக்கும் ஒரே நாடு இப்போது ஆப்கானிஸ்தான் மட்டுமே.
  • மத அடிப்படையிலான சட்டங்கள் என்று 114 பக்க அறிக்கை வெளியாகிவிட்டதை அடுத்து, அவற்றை அமல்படுத்தும் காவல்படையினர் இனி தங்களைத் தேடிவந்து தண்டிப்பார்கள் என்று மக்கள் அஞ்சுகின்றனர். அரசு அதிகாரிகள் வெள்ளைச் சீருடையில் எல்லா வீதிகளின் மூலைகளிலும் நிற்கின்றனர். தெருவில் அல்லது வீட்டு வாசலில் யாராவது மத ஒழுக்க சட்டத்தை மீறுவதாகத் தெரிந்தால் உடனே அருகில் வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர்.

அதிகாரங்கள் என்ன?

  • இதற்கும் முன்னால் வரையில், மத ஒழுக்க சட்டங்கள் மீறப்பட்டால் அதிகாரிகள் அருகில் வந்து எச்சரிப்பார்கள். சட்டம் என்ன சொல்கிறது, அதைத் தொடர்புள்ளவர்கள் எப்படி மீறினார்கள் என்று சுட்டிக்காட்டுவார்கள். இப்போது அப்படி சட்டத்தை மீறுகிறவர்களுக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டும், அவர்களுடைய சொத்துகளுக்கு எப்படிப்பட்ட சேதத்தை விளைவிக்க வேண்டும் என்றெல்லாம் விளக்கமாகவே அச்சடித்து தந்திருக்கிறார்கள். அதிகபட்சம் மூன்று நாள்களுக்குச் சிறைப்பிடிக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
  • வட மேற்கு ஆப்கானிஸ்தானத்தின் படா அக்ஷன் மாகாணத்தில் வசிக்கும் ஃபிரேஷ்டா நஸீமி (20), உயர்படிப்பு படிக்க முடியும் என்று கொண்டிருந்த நம்பிக்கையின் கடைசி துளியும் இப்போது மறைந்துவிட்டது என்று மிகவும் வருந்துகிறார். பெண் குழந்தைகள் தொலைக்காட்சி மூலம் படிக்க புதிய அரசு அனுமதிக்கும் என்று முன்னாள் வகுப்புத் தோழிகள் சொல்லியிருந்த தகவலால் நம்பிக்கையுடன் இருந்த அவர், புதிய சட்டங்களைப் படித்த பிறகு கவலையில் ஆழ்ந்துவிட்டார்.
  • கோஷ்ட் மாகாணத்தில் அப்படி தொலைக்காட்சி மூலம் நடந்த கல்வி ஒளிபரப்பைக் கேள்விப்பட்ட தலிபான் அதிகாரிகள் அங்கு விரைந்து அந்த ஒளிபரப்பை நிறுத்தியதுடன் அதை நடத்தியவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளனர். இதனால் நஸீமி நம்பிக்கை இழந்துவிட்டார். இனி நாட்டில் எல்லா மாகாணங்களிலும் இதுதான் நடக்கும் என்று அவர் தெரிந்துகொண்டுவிட்டார்.
  • “நான் இப்போது வீட்டுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டுவிட்டேன். எங்காவது தனியாக வெளியில் போக நினைத்தால், டாக்ஸி டிரைவருடன்கூட பேசி போக வேண்டிய இடத்தைச் சொல்ல முடியாது. கடைக்குப் போயும் எதையும் வாங்க முடியாது. யாரோ ஒரு பெண்ணுடன் ஏன் பேசுகிறாய் என்று தலிபான் அதிகாரிகள் முதலில் கடைக்காரர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். படித்து பொறியாளராக வேண்டும், அதில் கிடைக்கும் நிரந்தர உயர் வருமானம் மூலம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசைக் கனவுகள் நொறுங்கிவிட்டன. என்னுடைய எதிர்காலமா, இனி வீட்டிலேயே அடைந்து கிடைந்து பிள்ளை குட்டிகளைப் பெற்று அவற்றை வளர்ப்பதுதான்” என்று விரக்தியுடன் பதில் அளித்தார்.

ஹைபதுல்லா அகுண்ட்ஸாதா

  • தலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுண்ட்ஸாதா வழிகாட்டலின்படி ஷரியா சட்டங்களைத் தொகுத்து, ஒவ்வொரு அமைச்சகமும் என்ன செய்ய வேண்டும் – என்ன செய்யக் கூடாது என்று வழிகாட்டவே இந்த 114 பக்க சட்டத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலிபான்கள் பதவிக்கு வருவதற்கு முன்னால், அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசு கடைப்பிடித்த மேற்கத்திய நாடுகளின் நிர்வாக நடைமுறைகளை அடியோடு தூக்கி எறியவே இந்த ஏற்பாடு.
  • தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கத்திய நாடுகளிடமிருந்து அன்னியப்பட்ட நிலையில்கூட, மகளிர் மீதான கட்டுப்பாடுகளை விலக்கவோ தளர்த்தவோ முடியாது என்று தலிபான் ஆட்சியாளர்கள் மறுத்துவிட்டனர். இஸ்லாமிய போதனைப்படிதான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன, இவற்றில் தலையிடவோ மாற்றவோ மற்ற எவருக்கும் உரிமையில்லை என்று கூறிவிட்டனர். ‘ஆப்கானிஸ்தான் என்பது இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய சட்டம் அதன் சமூகத்துக்கானது’ என்கிறார் அரசின் பத்திரிகைத் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித்.
  • மனித உரிமை குழுக்களும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் பொறுப்புக் குழுவும் இந்தக் கட்டுப்பாடுகள் கூடாது என்று வலியுறுத்தியுள்ளன. “ஆப்கானிஸ்தான் பெண்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே சகிக்க முடியாதவை, இப்போது மேலும் கடுமையான கட்டுப்பாடுகளா?” என்று வருத்தம் தெரிவித்தார் ஐ.நா. குழுத் தலைவர் ரோசா ஒடுன்பயேவா.

பெண்கள் படங்கள் அழிப்பு

  • வீதிகளில் நுகர்பொருள் விற்பனை விளம்பரங்களுக்காக வைக்கப்படும் தட்டிகள், சுவரொட்டிகள் ஆகியவற்றில் காணப்படும் பெண்களின் முகங்கள் சுரண்டப்படுகின்றன அல்லது தார் பூசி மறைக்கப்படுகின்றன. பள்ளிக்கூட சுவர்களில் பெண்களின் படங்கள் இருந்தால் அவை மறைக்கப்படுகின்றன. ஜவுளிக்கடைகளில் பெண்களின் ஆடைகள் அணிவிக்கப்பட்டு நிறுத்தப்படும் பெண் பொம்மைகளுக்குக்கூட கறுப்பு நிறத்தில் முழு பர்தா போட்டு மறைத்துவிட்டனர். பர்தாவை ‘அபயா’ என்று அழைக்கின்றனர். கறுப்புநிற பர்தா கிடைக்காவிட்டால் சிகரெட் பாக்கெட்டுகளில் இருக்கும் அலுமினிய நிற உறை போன்ற காகிதத்தை பொம்மை மீது சுற்றிவிடுகின்றனர்.

வீட்டுச் சிறை

  • இந்தச் சட்டத் தொகுப்பு வெளிவருவதற்கு முன்னதாகவே இப்படியெல்லாம் தடைகள் வரும் என்று எதிர்பார்த்த பெண்கள் பெருமளவில் வீட்டுக்குள்ளேயே முடங்கத் தொடங்கிவிட்டனர். “கடந்த மூன்று மாதங்களாக வீட்டைவிட்டு வீதிக்குக்கூட வரவில்லை, வீட்டுச் சிறையிலேயே அடைபட்டிருக்கிறேன்” என்கிறார் ஃபராமார்ஸ்.
  • அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது வளரிளம் பருவத்தில் இருந்த பெண்களுக்குத்தான் இந்தத் தடைகள் மிகவும் மனச் சுமையை அதிகப்படுத்திவிட்டன. கல்வி, கலை, விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தவர்கள் வாழ்க்கையே இருண்டுவிட்டதைப் போல வருந்துகின்றனர்.
  • சுதந்திர உணர்வை இழக்காத பெண்கள், பெண்களே தனிப்பயிற்சியில் கற்றுத்தரும் ரகசிய பள்ளிக்கூடங்களில் அன்றாடம் இரண்டு மணி நேரமாவது படிக்கச் செல்கின்றனர். இந்தப் பள்ளிக்கூடங்கள் வீடுகளில் அதிக வசதியில்லாமல் இயங்குவதால் மிகச் சில பெண்கள் மட்டுமே சேர முடிகிறது. அவர்களும் வீதியில் நடமாட அஞ்சும் நிலை வந்துவிட்டது. கல்வி பயில வெறும் புத்தகங்கள் மட்டும் சிலவகை படிப்புக்கு போதாது என்பதும் தடையாக இருக்கிறது. இணையதளத் தொடர்பு, வருவதும் போவதுமாக நிலையில்லாமல் இருந்தாலும் ஆன்-லைன் வகுப்புகளில் பலர் சேர்ந்துள்ளனர்.
  • மொஹாதிசா ஹஸானி (18) என்ற பெண் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் தனது படிப்பை ரகசியமாகவே தொடர்ந்திருக்கிறார். அவருடைய இரண்டு தோழிகள் எப்படியோ அமெரிக்கா, கனடா நாடுகளுக்குச் சென்று அங்கு உயர்கல்வி பயில்கின்றனர். வாரத்தில் இரண்டு மணி நேரம் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக அவர்கள் படிக்கும் வேதியியல், இயற்பியல் பாடங்களை சொல்லச் சொல்லிக் கேட்டு படிக்கிறார். அவர்கள் இருவரும் சுதந்திரமாக படிக்கிறார்களே என்று எனக்குப் பொறாமையாகவும் இருக்கிறது என்கிறார்.
  • சில தோழிகள் ஓவியம் வரைகின்றனர், சிலர் கதை – கட்டுரைகளை எழுதுகின்றனர், சிலர் டேக்வாண்டோ விளையாடுகின்றனர், தடைகள் இருந்தாலும் மனச்சோர்வை விலக்கிக்கொண்டு அவ்வப்போது இப்படி துணிச்சலுடன் எதையாவது செய்கிறோம் என்கிறார்கள்.
  • “நான் என் நாட்டை நேசிக்கிறேன், மக்களை நேசிக்கிறேன், இப்போதுள்ள அரசாங்கத்தைத்தான் விரும்பவில்லை, தங்களுடைய மத நம்பிக்கைகளை இப்படி மக்கள் மீது தேவையின்றி கட்டாயப்படுத்தி திணிக்கின்றனர்” என்கிறார் ஹஸானி.

தூக்க மாத்திரையே துணை

  • ரஹ்மானி (43) தினந்தோறும் இரவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்கிறார். இருபதாண்டுகள் அவர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். நான்கு குழந்தைகளுக்கும் உணவு, உடை, கல்விச் செலவுக்குப் போதிய அளவுக்கு அந்த வேலையில் சம்பாதித்தார். இப்போது வேலைக்குப் போகத் தடை விதித்துவிட்டதால் அடிப்படை வசதிகளுக்குக்கூட பணமின்றி தவிக்கிறார். எதிர்காலத்தை நினைத்து இரவுகளில் மனம் அலைபாய்வதால் தூக்கம் வராமல் தவித்தவர் இப்போது மாத்திரைகளுக்கு அடிமையாகிவிட்டார்.
  • “ஒரு காலத்தில் நான் நானாக இருந்தேன், என்னுடைய படிப்பும் வேலையும் எனக்கொரு ஆளுமையைத் தந்தது, இப்போது நான் சமூகத்திலேயே மதிப்பில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டேன்” என்று தன்னுடைய நிலை குறித்துப் பேசுகிறார் ரஹ்மானி.

நன்றி: அருஞ்சொல் (08 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories