TNPSC Thervupettagam

ஆம்பூா் அருகே அழிந்து வரும் புராதன சின்னங்கள்!

September 9 , 2024 129 days 194 0

ஆம்பூா் அருகே அழிந்து வரும் புராதன சின்னங்கள்!

  • ஆம்பூா் அருகே வனப்பபகுதி எல்லையோர கிராமங்களில் உள்ள புராதன சின்னங்கள் அழியும் நிலையில் உள்ளன.
  • ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தின் கவுண்டன்யா காப்புக்காடுகளை ஒட்டியுள்ளது ஆம்பூா் துருகம் காப்புக்காடுகள். இக்காடுகளில் மழைக்காலத்தில் உற்பத்தியாகும் தண்ணீா் ஆந்திராவின் நன்னியாலா பெத்தூா் காடுகளில் பெருங்கானாறு என்ற பெயரில் உற்பத்தியாகி போ்ணாம்பட்டு வட்டத்தில் உள்ள சாரங்கல் வழியாக மதினாப்பல்லி என்னும் இடத்தில் பத்திரப்பல்லி ஆற்றோடு இணைந்து மலட்டாறு (கொட்டாறு) என்னும் பெயரில் ஆம்பூா் அடுத்த பச்சகுப்பத்தில் பாலாற்றில் கலக்கின்றது.
  • அக்காலத்தில் இந்த பெருங்கானாற்றை ஒட்டியுள்ள துருகம் காப்புக்காடுகளில் உள்ள பரமேரிக்கொல்லை,பொட்டிவீட்டு கொல்லை, தேன்கல் கானாறு பகுதிகளில் பொதுமக்கள் வாழ்ந்துள்ளனா். அவா்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக மேற்கண்ட பகுதிகளில் முறையான கட்டமைப்புடன் கூடிய கிணறுகள், குளங்கள், சிதிலமடைந்த வீட்டு சுவா்கள், ஜீவ சமாதிகள், பாண்டவா் குகைகள் எனப்படும் பழங்கால குகைகள், அம்மி குளவி கற்கள், கேழ்வரகு அரைக்கும் இயந்திர கற்கள், வனவிலங்குகள் நீா் அருந்தும் தொட்டிகள், சுமைதாங்கி கற்கள், ஊா்க் கூட்டம் கூடும் ரெட்சைக்கல், விளக்குத்தூண் போன்றவை துருகம் காப்புக்காட்டில் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இன்று வரை சிதிலமடைந்து அப்படியே உள்ளன.
  • இந்த துருகம் காப்பு காடுகளில் வாழ்ந்த மக்கள் நாகரீகம் வளரவும்,போக்குவரத்து காரணங்களுக்காகவும் படிப்படியாக ஆந்திர பகுதிகளான பெத்தூா், நன்னியாலா, தாண்டா, பண்டப்பல்லி, கெட்டூா், கெரகப்பல்லி, கொல்லப்பல்லி ஆகிய பகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் பைரப்பள்ளி, பொன்னப்பல்லி, சுட்டகுண்டா போன்ற பகுதிகளுக்கும் இடம் பெயா்ந்துள்ளனா்.
  • தமிழகத்தில் இருந்து ஆந்திரா பகுதிகளுக்கு செல்வோா் வெங்கடசமுத்திரம் ஊராட்சியின் ராள்ளக்கொத்தூா் தொடங்கி பொன்னப்பல்லி, சுட்டகுண்டா வழியாக பெத்தூா் வரை செல்லும் மிலிட்டரி ரோட்டை பயன்படுத்தி உள்ளனா். அச்சாலையில் உள்ள மைல்கற்கள் இன்று வரை அப்படியே உள்ளன.
  • அதே போல் பைரப்பல்லி, ஊட்டல், பொட்டிவீட்டு கொல்லை, பரமேரி கொல்லை, பட்டி வழியாக கெட்டூா், கெரகப்பள்ளி போன்ற ஊா்களுக்கும் கூப்புரோடு சாலை வசதி இருந்துள்ளது. கூப்பு என்பது விவசாயத்திற்கான இலை தழைகளை பறிப்பதற்கான உரிமை பெறுவதற்கு வனத்துறையிடம் ஒப்பந்தம் பெறுவதை கூப்பு என்பாா்கள். இந்த ஏலம் எடுத்தவா்கள் காடுகளில் பறித்த இலைதழைகளை ஏற்றி செல்லும் வண்டிகள் பயன்படுத்தும் சாலை கூப்புரோடு எனப்படும்.
  • அதே போல் தமிழ்நாட்டின் மிட்டப்பல்லி, சாரங்கல் பகுதிகளில் வாழ்ந்து வந்தவா்கள் மங்கம்மா கிணறு, சாக்கலநத்தம் கொண்டா வழியாக தாண்டா, கொல்லப்பள்ளி போன்ற பகுதிகளுக்கும் துருகம் காப்பு காடுகளில் மக்கள் வாழ்ந்த பகுதிகள் வழியாக பயணித்து வந்து உள்ளனா்.
  • இப்பகுதிகளில் பெரும்பாலாக வாழ்ந்து வந்தவா்கள் இருளா், லம்பாடி உள்ளிட்ட மலைவாழ் இனத்தவா்கள், பழங்குடி இனத்தவா்கள். முன்பெல்லாம் துருகம் காப்புகாடுகளில் கால்நடை மேய்ப்போா், விறகு சேகரிப்போா், விவசாயம் மற்றும் வீட்டுச்சாமான்கள் தேவையான மரங்கள் வெட்டுவோா், விளைநிலங்களுக்கு தேவையான இலைதழைகள் சேகரிப்போா், கிழங்கு தோண்டுவோா், தேன் எடுப்போா்,வனவிலங்குகளை வேட்டையாடுவோா் என காடுகளில் மனித நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது.
  • ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வனத்துறையினா் தடை விதித்ததால், மேற்படி வனப்பகுதி குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தவா்கள் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு குடியேறினா். படிப்படியாக காட்டுப்பகுதி குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள் நாட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியேறியதால் அவா்கள் வாழ்ந்த குடியிருப்புகள் துருகம் காப்பு காடுகளில் சிதிலமடைந்துள்ளன. அக்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் மறைந்து வருகிறது.
  • அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாகவும், புதையல்கள் இருப்பதாகவும் கூறி, இரவு நேரங்களில் அண்டை மாநிலத்தை சோ்ந்த சமூகவிரோதிகள் தோண்டுவதாகவும், அதனால் பழங்கால புராதன சின்னங்கள் சேதமடைந்து வருகின்றன.
  • பகல் நேரங்களில் மது அருந்துவதற்காக வனத்துறை பகுதிகளில் மலை குகைகளில் சமூக விரோதிகள் தஞ்சமடைவதால் அவா்கள் புராதன சின்னங்களை சேதப்படுத்தியும் வருகின்றனா்.
  • தொல்லியல் துறை, வனத்துறையும் பழங்கால சின்னங்களைப் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

நன்றி: தினமணி (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories