ஆய்வு மாணவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டாமா?
- அண்மையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் வழக்கத்துக்கு மாறான ஓர் ஒற்றுமை இருந்தது! இரண்டுமே 39ஆவது பட்டமளிப்பு விழாக்கள் என்பதுடன், இரண்டு விழாக்களிலும் ஆய்வு மாணவர்கள் இருவர் விழா மேடையிலேயே ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தது சர்ச்சையானது. ஆய்வு மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களில் கண்ணியத்துடன் நடத்தப்படவில்லை என்பதுதான் இரண்டு புகார்களின் சாரம்.
- தங்கள் ஆய்வு வழிகாட்டிகள், ஆராய்ச்சிப் பணியைத் தவிர, அவற்றுக்குத் தொடர்பில்லாத வேலைகளுக்கு - வீட்டு வேலைகள் உள்பட - தங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
என்ன நிலவரம்?
- இந்தியாவில் ஆய்வு வழிகாட்டிகள் இது போன்று தங்கள் மாணவர்களைத் தங்கள் சொந்த வேலைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வது என்பது பெரும்பாலும் வழக்கமான ஒன்றுதான். இந்தியாவில் ஆய்வு மாணவர்கள், மாநிலப் பல்கலைக்கழகங்கள் - அவற்றின் இணைவு பெற்ற கல்லூரிகள், மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், மத்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், மத்திய அரசின் அறிவியல் ஆய்வுக்கூடங்கள் எனப் பலதரப்பட்ட கல்வி / ஆய்வு நிறுவனங்களில் தங்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கின்றனர்.
- ஆய்வு வழிகாட்டிகள் மூலம் உருவாகும் இப்படியான பிரச்சினைகள், பொதுவாக மாநிலப் பல்கலைக்கழகங்களில் அதிகமாகவும் அதற்கு அடுத்தடுத்த நிலையில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஒப்பீட்டளவில் சற்று குறைவானதாகவும் இருக்கும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம், மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் (CSRI, ICMR) வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஆய்வு உதவித்தொகை கிடைப்பதால், அவர்கள் என்ஐடி, ஐஐடி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் போன்றவற்றுக்குச் சென்று தங்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்வார்கள். அந்த மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டி (பொதுவாக) சம்பளமோ அல்லது உதவித்தொகையோ வழங்குவதில்லை. இவர்களை ஆய்வு வழிகாட்டிகள் தங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் குறைவு. அதேவேளையில், இப்படியான பிரச்சினைகள் அந்த மாணவர்களுக்கும் இல்லாமல் இல்லை! ஆனால், மாநிலப் பல்கலைக்கழகங்களில் ஆய்வில் ஈடுபடும் மாணவர்கள் பொதுவாக எந்த உதவித்தொகையும் இன்றி, பகுதி நேர ஆய்வு மாணவராகவோ அல்லது வழிகாட்டியின் ஆய்வுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து உதவிபெறும் மாணவராகவோ இருப்பார். இந்த மாணவர்களைப் பெரும்பாலான ஆய்வு வழிகாட்டிகள் தங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
- ஆய்வு வழிகாட்டியாக இருப்பதற்கு, ஆய்வு மாணவர் தனிப்பட்ட விதத்தில் தனக்கு எந்த வகையிலும் பணம் செலுத்துவது இல்லை என்பதாலோ அல்லது தன்னுடைய ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து ஆய்வு மாணவர் உதவித்தொகை பெறுகிறார் என்பதாலோ, பிரதிபலனாக ஆய்வு வழிகாட்டிகள் தங்கள் மாணவர்களைத் தங்கள் சொந்த வேலைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
- எப்படிப் பார்த்தாலும் இதை நியாயப்படுத்த முடியாது. இந்தியாவில் முன்னாள் / இன்னாள் ஆய்வு மாணவர்கள் மத்தியில் இது சம்பந்தமாக (அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல்) ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வு வழிகாட்டிகள் சொந்த வேலைக்கு இவர்களைப் பயன்படுத்திக்கொண்டதை ஒப்புக்கொள்வார்கள்.
- இதன் காரணமாகவே திறமைமிக்க இளம் மாணவர்கள் அதிக அளவில் கடந்த 10-15 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் போக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு ஆய்வு மாணவராகச் செல்லத் தங்களிடம் ஆலோசனைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 70% அதிகரித்திருப்பதாக வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்பும் ஒரு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்ஐடி ஆய்வு மாணவர் ஒருவரும், சமீபத்தில் ஐஐடி ஆய்வு மாணவர் ஒருவரும் தங்களது ஆய்வு வழிகாட்டிகளால் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும், தங்களைச் சொந்த வேலைக்குப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி சமூகவலைதளத்தில் எழுதியது - இந்தியாவைத் தாண்டி உலகக் கல்வியாளர்கள் மத்தியிலும் பேசுபொருளானது.
விசாரணைக் குழுக்கள்:
- மாணவர்களின் இது போன்ற பிரச்சினைகள் குறித்து விசாரணை செய்து, தீர்வுகாணப் பல கல்வி நிறுவனங்களில் மாணவர் குறைதீர்க்கும் விசாரணைக் குழுக்கள் இருக்கின்றன. ஒன்று, அவை செயல்படுவதில்லை அல்லது அவை அரிதாகவே மாணவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. மேலும், ஆய்வு மாணவருக்கும் அவரது வழிகாட்டிக்குமான உறவு முறை என்பது, அந்த மாணவர் முனைவர் பட்டம் பெற்றவுடன் முடிந்துவிடும் ஒன்றல்ல.
- அவர் தன்னுடைய ஆய்வில் அல்லது வேலையில் முன்னேறிச் செல்ல தன்னுடைய ஆய்வு வழிகாட்டியின் பரிந்துரைக் கடிதம் அவருக்கு அடிக்கடி தேவைப்படும். அதனால், எந்த ஒரு ஆய்வு மாணவரும் தன்னுடைய ஆய்வு வழிகாட்டி பிரச்சினைகளை ஏற்படுத்தினால் விசாரணைக் குழுவின் முன்னரும் வெளிப்படையாக புகாராகச் சொல்ல மாட்டார்.
தீர்வு என்ன?
- அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் பொதுவாக இருப்பதில்லை. காரணம், ஆய்வு வழிகாட்டிகள் முறைகேடாகச் செயல்பட்டால் அதை முறையாக விசாரணை செய்து, அவர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வு மாணவர் பாதிக்கப்படாத வகையில் அந்நடவடிக்கை இருக்கும். இந்தியாவில் ஆய்வு வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர்கள், இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கத் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
- வெளிநாடுகளில் இருப்பதைப் போல ஆய்வு மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக அளவில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரடியாக விவாதித்து, தங்கள் பல்கலைக்கழக உயர்மட்டக் குழுவுக்குத் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
- விசாரணைக் குழுக்கள் தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற வகையிலும் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். ஆய்வு மாணவர்களைக் கண்ணியமற்ற முறையில் நடத்தும் பேராசிரியர்கள் மீது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பது அவசியம். மத்திய, மாநில அரசுகள் இதற்குச் சரியான தீர்வு காணாவிட்டால், திறமைமிக்க இந்திய மாணவர்களை வெளிநாடுகளிடம் இழப்பதைத் தவிர்க்க முடியாது!
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 11 – 2024)