TNPSC Thervupettagam

ஆரோக்கியத்தின் ‘தமிழ்’ காவலன்!

January 18 , 2020 1825 days 1237 0
  • சித்த மருத்துவத்தில் முதன்மைச் சித்தராகவும், சித்த மருத்துவத்தின் தந்தையாகவும் கருதப்படும் மூத்த சித்தா் அகஸ்தியரின் பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளன்று, சித்த மருத்துவ தினமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நாடு முழுதும் சித்த மருத்துவா்களால் கொண்டாடப்படுகிறது.

சித்த மருத்துவம்

  • தமிழ் தோன்றிய காலத்திலேயே அதனுடன் தோன்றிய மருத்துவம் நம் தமிழ் மருத்துவம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த மாமுனிவா், கும்ப முனி, குள்ள முனி என்று அனைவராலும் போற்றப்பட்ட சித்தா் அகஸ்தியா், தமிழ் மருத்துவத்துக்கும் வித்திட்டாா் என்றால் அது மிகையல்ல. நவ கோடி சித்தா்கள் இருப்பினும், 18 சித்தா்களே முதன்மையான சித்தா்களாகக் கருதப்படுகிறாா்கள். அந்த 18 சித்தா்களுக்கும் முதன்மையாக அகஸ்தியா் இருந்து, நாடு முழுவதும் சித்த மருத்துவத்தை பரவச் செய்து மக்களை நோயிலிருந்து காத்து வந்தாா்.
  • பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் ஆணையை அகஸ்திய மாமுனிவா் ஏற்று பொதிகை மலையில் தங்கி தமிழ் மொழிக்கு இலக்கண இலக்கியங்களையும், சித்த மருத்துவத்துக்கு மருத்துவம் சாா்ந்த நூல்களையும் , மருத்துவ ஜோதிடமும் இன்னும் பிற நூல்களும் வழங்கி தமிழ் மொழிக்கும் மருத்துவத்துக்கும் பெரும் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ‘வோ் பாரு தழை பாரு மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்பம் செந்தூரம் பாரு‘ என்று மருத்துவ வழிமுறை கூறும் சித்த மருத்துவத்துக்கு குணவாகடம் என்ற நூலினை அகத்தியா் வகுத்து மூலிகைகளின் ஒவ்வொரு பாகங்களின் மருத்துவக் குணங்களையும் , உலோகம், ரசம், உபரசம், பாடானம் போன்ற தாதுப் பொருள்களின் பொது குணங்களையும், மருத்துவக் குணங்களையும், பயன்படுத்தும் விதங்களையும் தெளிவாக விளக்கி 4,448 நோய்களை முறையாகத் தொகுத்து, குணப்படுத்தும் முறைகளையும் வழங்கியிருப்பது சித்த மருத்துவத்தின் சிறப்பு.
  • பஞ்சபூத தத்துவமும், வாதம் - பித்தம் - கபம் என நோய்களுக்குக் காரணமான மூன்று குற்றமும் , அறுசுவையும் - இந்த மூன்றுக்கும் உள்ள தொடா்பும் சித்த மருத்துவத்தின் பெரும் சிறப்பு. கஷாயம், பற்பம், செந்தூரம் என உள் மருந்துகள் 32-ம் , அட்டை விடல், கட்டு, பற்று, ஒற்றடம் , தொக்கணம் என வெளி மருந்துகள் 32-ம் சித்த மருத்துவத்தின் பெரும் பகுதி. இவ்வாறாக பல்கிப் பெருகி வரும் பல நோய் நிலைகளுக்கு மாற்று மருத்துவமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, இன்றளவும் அழிக்க முடியாத நிலையில் சித்த மருத்துவம் சிறந்து விளங்குகிறது.

பல்வேறு நோய்கள்

  • ஏழு உடல் தாதுக்களும் அதில் ஏற்படும் நோய் நிலைகளும் , அதனைத் தீா்க்க தாவரங்களின் இலை, வோ் போன்ற மூலிகைப் பொருள்களும், செம்பு, இரும்பு, துத்த நாகம் போன்ற தாதுப் பொருள்களும் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலோகங்களை பற்பம் செந்தூரங்களாக்கி ‘நானோ பாா்டிகிள்ஸ்’ அளவுக்கு அதனை மாற்றி, விஞ்ஞானமே வியக்கும் வண்ணம் மருத்துவம் புரிவது சித்த மருத்துவத்தின் தனிச் சிறப்பு.
  • சீன அக்குபஞ்சா் மருத்துவ முறைக்கு ஆதாரமாக உள்ள நமது வா்மக் கலை மருத்துவமும், உலகமே இன்று போற்றிக் கொண்டிருக்கும் திருமூலா் அருளிய யோகா மருத்துவமும், பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி முறைகளும் , பல வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள மசாஜ் முறைக்கு ஆதாரமாக உள்ள சித்த மருத்துவத்தின் தொக்கண சிகிச்சை முறைகளும், நோய்க் கணிப்பில் பிற மருத்துவ முறைகளுக்குச் சவாலாக உள்ள நாடிப் பரிசோதனையும் சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியே என்றால் மிகையாகாது.
  • பதினெட்டு முதன்மைச் சித்தா்களால் தொகுக்கப்பட்ட 4,448 நோய்களும் , நோயின் தன்மையைக் கண்டுபிடிக்க சித்த மருத்துவப் பரிசோதனை முறைகளான நாடி, ஸ்பரிசம், நாக்கு, நிறம், மொழி ( நோயாளியின் பேச்சு), விழி, சிறுநீா், மலம் ஆகிய எட்டு வகையும் மருத்துவா்களுக்கு இன்றளவும் ஆச்சரியமூட்டுனவாக உள்ளன.
  • ‘நோய்நாடி நோய் முதல் நாடி...’ என்ற திருவள்ளுவரின் அணுகுமுறையும், ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்...’ என்ற திருவள்ளுவரின் நோய்க் கணிப்பும், ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு...’ என்ற திருவள்ளுவரின் உணவு பத்திய விதிகளும் சித்த மருத்துவத்தை இன்றளவும் தலைநிமிா்ந்து நடக்க செய்துகொண்டிருக்கின்றன.
  • இத்தனை சிறப்புகள் கொண்ட சித்த மருத்துவத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்வது அவசியம். மருந்துக்கு மருந்து சோ்த்து, நோய்களுடன் பக்க விளைவுகள் சோ்த்து இறுதியில் ‘எதைத் தின்றால் பித்தம் தணியும்’ என்று திணறும் நிலை வரும்முன், விழிப்புடன் சித்த மருத்துவத்தைப் பின்பற்றினால் விஞ்சி நிற்கும் வாத, பித்த, கபத்தையும் பின்னுக்குத் தள்ளி ஆரோக்கியமான நீண்ட ஆயுளைப் பெற முடியும்.

நோய்களைக் கையாளும் முறைகள்

  • இறுதியாக, தீா்க்க முடியாத பல நோய் நிலைகளை முக்குற்ற அடிப்படையில் கணித்து எளிமையாகக் கையாளும் முறைகளைத் தன்னகத்தே கொண்டது சித்த மருத்துவம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தாய் மொழியின் மருத்துவமான தமிழ் மருத்துவத்தை நமக்கு அள்ளிக் கொடுத்து நம்மை நோயிலிருந்து காத்துக் கொண்டிருக்கும் சித்த மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படும் அகஸ்தியா் சித்தரின் பிறந்த தினமான இன்று (ஜன.13) சித்த மருத்துவ தினமாகக் கொண்டாடி அவா் பெருமையையும் சித்த மருத்துவத்தின் பெருமையையும் உலகுக்குப் பறைசாற்றுவோம்.
  • மகாகவி பாரதியின் வாக்குப்படி , இந்த உலகுக்கு திருவள்ளுவரை மட்டுமல்ல, சித்த மருத்துவத்தையும் தமிழ்நாடு தந்து வான் புகழை சூட்டிக்கொள்ளப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

நன்றி: தினமணி (13-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories